search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    • நேற்று 2-வது நாளாக வனப்பகுதியில் காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்தது.
    • வனப்பகுதி முழுவதும் எரிந்து விடுமோ என வனத்துறையினர் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது.இங்கு தாளவாடி, ஆசனூர், தலமலை, ஜீர்கள்ளி, கேர்மாளம், கடம்பூர், டி.என்.பாளையம் பவானிசாகர், சத்தியமங்கலம், விளாமூண்டி என மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.

    இந்த வனப்பகுதிகளில் யானைகள், சிறுத்தை, புலி, மான், காட்டெருமை, குரங்கு ஆகிய வன விலங்குகள் வசித்து வருகின்றன. இயற்கை எழில் கொஞ்சும் இந்த புலிகள் காப்பக பகுதிகள் தற்போது கடும் வறட்சி நிறைந்த பகுதியாக மாறி உள்ளது. வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து காணப்படுகிறது.

    இதனால் வனவிலங்குகள் போதிய அளவு உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் ஊருக்குள் புகுவது தொடர்கதை ஆகி வருகிறது வனவிலங்குகள் தண்ணீர் இருக்கும் பகுதியான மாயாறு பகுதிக்கு செல்ல தொடங்கி விட்டன.

    இந்நிலையில் தலமலை வனச்சரகத்திக்கு உட்பட்ட திம்பம் மலைப்பாதை வனப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை திடீர் என காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டு தீயால் வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் பற்றி எரிந்தது. பல அபூர்வ மூலிகை செடிகளும் எரிந்து நாசமானது.

    அடர்ந்த வனப்பகுதி என்பதால் மலை உச்சியில் இருப்பதாலும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமலும் சம்பவ இடத்துக்கு இடத்துக்கு செல்ல முடியாமல் வனத்துறையினர் திணறினர். இந்த காட்டு தீயால் பல ஏக்கர் பரப்பளவு உள்ள மரம், செடிகள், கொடிகள் எரிந்து நாசமானது.

    இந்நிலையில் நேற்று 2-வது நாளாக வனப்பகுதியில் காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் வனப்பகுதி முழுவதும் எரிந்து விடுமோ என வனத்துறையினர் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    ஆனால் நேற்று மாலை ஒரு மணி நேரம் தாளவாடி மலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக தாளவாடி மலைப்பகுதியில் எரிந்து கொண்டிருந்த காட்டுத்தீ தானாகவே அணைந்தது. இதனால் வனத்துறையினர், அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனால் பல ஏக்கர் பரப்பிலான செடி, கொடிகள் தப்பியது.

    • ஜனநாயக ரீதியாக நம்முடைய கடமையை நேர்மையுடன் மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி இருக்கிறோம்
    • "மக்கள் தீர்ப்பே மகேசன் நீர்ப்பு" என்ற வகையில், மக்கள் நல்ல தீர்ப்பு அதிமுக தேமுதிக கூட்டணிக்கு வழங்குவார்கள் என்று நம்புவோம்

    மக்களவைத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணியின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், "2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணன் எடப்பாடியார் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற மனதார எனது வாழ்த்துக்களை தேரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகத்தில் நடைபெற்று முடிந்த இந்த தேர்தலுக்காக கூட்டணி சார்பாக களத்தில் இணைந்து கூட்டணி வேட்பாளர்களுக்காக அரும்பாடு பட்டு உழைத்த அனைவருக்கும் தேமுதிக சார்பில் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். கூட்டணி தர்மத்தோடு வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு களத்தில் இறங்கி உழைத்த அனைத்து வெற்றி வீரர்களுக்கும், களப்பணி ஆற்றிய கழக வீரர்களுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக மீண்டும் பாராட்டுக்களை தெரிவித்தும் கொள்கிறேன்.

    ஜனநாயக ரீதியாக நம்முடைய கடமையை நேர்மையுடன் மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி இருக்கிறோம். வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். "மக்கள் தீர்ப்பே மகேசன் நீர்ப்பு" என்ற வகையில், மக்கள் நல்ல தீர்ப்பு அதிமுக தேமுதிக கூட்டணிக்கு வழங்குவார்கள் என்று நம்புவோம்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளை கர்நாடகத்திற்கு தாரை வார்ப்பது தி.மு.க.வின் வழக்கம்.
    • காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை தி.மு.க. அரசு அடகு வைத்து விடக்கூடாது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை நல்ல வழியிலோ, மோசடி செய்தோ கட்டியே தீருவோம்; அதன் மூலம் பெங்களூரு நகரத்திற்கு காவிரி நீரை வழங்குவோம் என்று கர்நாடக துணை முதல்-அமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். ஆனால், அதைக் கண்டிக்கக் கூட முன்வராமல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது, காங்கிரஸ் கூட்டணிக்காக தமிழ்நாட்டின் காவிரி ஆற்று உரிமையை அடகு வைத்து விட்டாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையாவும், துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவக்குமாரும் மாறி மாறி கூறி வருகின்றனர். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான நல்லுறவுக்கு வேட்டு வைக்கும் செயலாகும். இதை தமிழர்களால் சகித்துக்கொள்ள முடியாது.

    கர்நாடக முதல்- அமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் பேச்சுகள் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானவை என்பது தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் விவசாயிக்குக் கூட தெரிகிறது. ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இதுகுறித்து எதுவுமே தெரியாதது தான் வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது. உலகில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளுக்கு எல்லாம் கருத்து தெரிவிக்கும் அவர், தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வராமல் தடுக்கும் வகையில் மேகதாது அணையை கட்டுவோம் என்று கர்நாடக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அதுகுறித்து எதுவுமே கருத்து தெரிவிக்காமல் இருப்பதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.

    எப்போதெல்லாம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ, எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளை கர்நாடகத்திற்கு தாரை வார்ப்பது தி.மு.க.வின் வழக்கம். இப்போதும் காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை தி.மு.க. அரசு அடகு வைத்து விடக்கூடாது.

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், அதன்பிறகு காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். அதை உணர்ந்து மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க வேண்டும். நல்ல வழியிலோ, மோசடி வழியிலோ மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கூறி வரும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முதல்-அமைச்சர் சித்தராமையா ஆகியோரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஏப்.24-ந்தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆக இருக்கக்கூடும்.
    • தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஏப்.23 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. பகல் நேரங்களில் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

    மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் வியர்வை மழையில் நனைந்தபடியே கொளுத்தும் வெயிலில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்படி பகலில் அதிகரித்து காணப்படும் வெயிலால் இரவு நேரத்திலும் புழுக்கம் அதிகரித்து அனல் காற்றே வீசுகிறது.

    இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வட தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில், அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 3-5 செல்சியஸ் வரை இயல்பை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ஏப்.21-ந்தேதி முதல் ஏப்.24-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

    ஏப்.24-ந்தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆக இருக்கக்கூடும்.

    மற்ற நேரங்களில் 40-75% ஆகவும், கடலோரப் பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.

    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஏப்.23 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேவையான மது பாட்டில்களை வாங்கி இருப்பு வைக்க மது பிரியர்கள் ஆர்வம் காட்டினர்.
    • இன்று ஒரே நாளில் மட்டும் வழக்கமான விற்பனையை விட கூடுதலாக மது விற்பனை நடந்தது.

    வேலூர்:

    வேலூரில் பாராளுமன்ற தேர்தலையொட்டி கடந்த 17-ந்தேதி முதல் நேற்று 19-ந்தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நாளையும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    அனைத்து மதுபான கடைகளிலும் குடிமகன்கள் மது குடிப்பதற்காக குவிந்தனர். பலர் கூடுதல் மதுபாட்டில்களை வாங்கி வயிறு முட்ட குடித்தனர். மேலும் பலர் நன்றாக மது குடித்துவிட்டு தங்களது தேவைக்காக மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். பல்வேறு இடங்களில் கூட்டம் கூட்டமாக வந்து மது வகைகளை வாங்கிச்சென்றனர்.

    தேவையான மதுபாட்டில்களை வாங்கி இருப்பு வைக்க மது பிரியர்கள் ஆர்வம் காட்டினர்.

    ஆனால் டாஸ்மாக் கடைகளில் இன்று குவிந்த மது பிரியர்கள் தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை வாங்கி குவித்து மொத்தமாக மறைத்து அள்ளிச் சென்றுள்ளனர்.

    இது போன்று வாங்கிச் சென்ற மதுபாட்டில்களை திருட்டுத்தனமாக கூடுதல் விலைக்கும் அவர்கள் விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. இதைத் தொடர்ந்து அதுபோன்ற மது விற்பனையை தடுப்பதற்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இன்று ஒரே நாளில் மட்டும் வழக்கமான விற்பனையை விட கூடுதலாக மது விற்பனை நடந்தது. இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குவிந்து விற்பனை களைகட்டியது.

    • மாலை 6 மணிக்குள் வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டன.
    • கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில், ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி உள்ளிட்ட 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதியில் 8 லட்சத்து 14 ஆயிரத்து 76 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 8 ஆயிரத்து 798 பெண் வாக்காளர்களும், 305 திருநங்கைகளும் என மொத்தம் 16 லட்சத்து 23 ஆயிரத்து 179 வாக்காளர்கள் உள்ளனர். கிருஷ்ணகிரி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கோபிநாத், அ.தி.மு.க. சார்பில் ஜெயபிரகாஷ், பா.ஜனதா சார்பில் நரசிம்மன், நாம் தமிழர் கட்சி சார்பில் வித்யாராணி, சுயேச்சைகள் உட்பட 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மேலும், நேற்று காலை 7 மணியளவில் 1,888 வாக்குச்சாவடிகளில் (கருக்கனஹள்ளி தவிர்த்து) வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. காலையில் மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு, காலை 9 மணிக்கு பிறகு விறுவிறுப்பாக நடந்தது.

    கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் காலை 9 மணியளவில் 8.78 சதவீத வாக்குகளும், காலை 11 மணியளவில் 23.97 சதவீத வாக்குகளும், பகல் 1 மணியளவில் 39.78 சதவீத வாக்குகளும், மாலை 3 மணியளவில் 51.60 சதவீத வாக்குகளும், மாலை 5 மணியளவில் 64.24 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. மாலை 6 மணிக்குள் வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டன.

    மேலும், மாலை 6 மணி நிலவரப்படி இறுதியாக கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் 71.31 சதவீத வாக்குகள் பதிவானது.

    இதற்கிடையே ஆந்திர மற்றும் கர்நாடக மாநில எல்லையோரம் அமைந்துள்ள தொகுதி என்பதால் எல்லையோர வாக்குச்சாவடிகள் மற்றும் வனப்பகுதியை ஒட்டிய வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    தேர்தல் பாதுகாப்பு பணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மேற்பார்வையில் உள்ளூர் போலீசார், தமிழ்நாடு சிறப்பு போலீசார் ஆந்திரா, கேரளா போலீசார், முன்னாள் படைவீரர்கள், ஊர்க்காவல் படை, துணை ராணுவப்படையினர் உட்பட 3,722 பேர் ஈடுபட்டனர்.

    இதே போல் வாக்குச்சாவடி மையங்களில் 9,281 பணியாற்றினார்கள். ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு, தேர்தல் புறக்கணிப்பு, கட்சியினரிடையே வாக்குவாதம் என இருந்த போதிலும், கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.

    • 2 வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரல் ஆகி வருகிறது.
    • வீடியோக்களை பார்க்கும் பக்தர்களும், பொதுமக்களும் அவர்களுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற அம்மன் தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகின்றனர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தற்போது கும்பாபிஷேகம் செய்வதற்காக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவில் வளாகத்துக்குள் பெண் பணியாளர்கள் ஒன்று சேர்ந்து கருமாரி அம்மன் படத்திற்கு கீழே நாற்காலி போட்டு அமர்ந்துகொண்டு சமூக வலைத்தளங்களில் வரும் மீம்ஸ் ரீல்ஸ் போல வடிவேலு நடித்த படத்தின் காமெடி காட்சிக்கு நடித்துள்ளனர். அங்கிருந்த பக்தர்கள் வேடிக்கை பார்த்ததை கூட அவர்கள் பொருட்படுத்தாமல், நடிகர் வடிவேலு, கோவிலில் தான் பார்த்த வேலையை ராஜினாமா செய்வதுபோல் வசனம் பேசி கோவில் பணியாளர்கள் நடித்தனர்.

    மேலும் அதே கோவில் வளாகத்தில் மற்றொரு வீடியோவில் 'இது போல சொந்தம் தந்ததால், இறைவா வா நன்றி சொல்கிறோம், உனக்கேனும் சோகம் தோன்றினால், இங்கே வா இன்பம் தருகிறோம்' என்ற பாடலுக்கு கோவில் பணியாளர்கள் நடனம் ஆடியுள்ளனர். கோவில் வளாகத்திற்குள் கருவறை அருகே இத்தகைய காட்சிகளில் நடித்துள்ளனர்.

    இந்த 2 வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோக்களை பார்க்கும் பக்தர்களும், பொதுமக்களும் அவர்களுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். பக்தர்கள் புனிதமாக கருதும் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் கருவறை அருகே இதுபோன்ற அநாகரிகமாக நடந்து கொண்ட இவர்கள் மீது அறநிலையத்துறையும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கேரள மாநிலம் ஆலப்புழாவில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
    • கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோவை:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்வா மற்றும் செருதளா கிராமங்களில் உள்ள சில கோழி பண்ணைகளில் வாத்துகள் அடுத்தடுத்து இறந்தது. இறந்த வாத்துகளை ஆய்வு செய்ததில் எச்5என்1 என்ற பறவை காய்ச்சல் இருப்பது உறுதியானது.

    இதையடுத்து கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியுள்ளதால், தமிழக எல்லைப்பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி தமிழக கேரள எல்லைப்பகுதிகளான ஆனைகட்டி, வாளையாறு, வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்ப கவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன் காளியாபுரம், வடக்காடு உள்ளிட்ட 12 சோதனை சாவடிகளில் சிறப்பு கால்நடை பராமரிப்புத்துறையின் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்கள் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களில் கோழி தொடர்பான பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா? என்பதை கண்காணித்து வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    இதையடுத்து தமிழக, கேரள எல்லையான வாளையார் உள்பட 12 சோதனை சாவடிகளிலும் சிறப்பு கால்நடை குழுவினர் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த குழுவில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை ஆய்வாளர், 2 கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உள்ளனர்.

    கேரளாவில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்படும் கறிக்கோழிகள், கோழிகளின் எரு, கோழி முட்டைகள், கோழிக்குஞ்சுகள், வாத்துகள், வாத்து முட்டைகள் உள்ளிட்ட பறவைகள் தொடர்பாக பொருட்களை கொண்டு வரும் வாகனங்களை எல்லையிலேயே நிறுத்தி கேரளாவுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

    கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தவிர மாவட்டத்தில் 1252 கோழிப்பண்ணைகள் உள்ளது. இந்த பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக கண்காணித்து வருகிறோம்.

    மேலும் பண்ணைகளில் திடீர் கோழி உயிரிழப்புகள், பறவை காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கால்நடை துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீர் நிலைகளில் உள்ள பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    தவிர கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிய 432 மாதிரிகள் எடுத்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பறவை காய்ச்சல் அறிகுறிகள் தென்படவில்லை.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க..
    • இரவு, பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. வேட்பாளர்கள், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் தனி முகவர்கள்; கழக உடன்பிறப்புகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அன்பு வேண்டுகோள்!

    அ.தி.மு.க. 1972-ம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே பாராளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத்தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

    இந்த இயக்கத்தின் பாராளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, அம்மாவின் காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் 3-வது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு பாராளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு; அம்மாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க..

    ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், 3-வது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அ.தி.மு.க., அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, நேற்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளுக்கும், கோடானு கோடி கழக உடன்பிறப்புகளுக்கும், முகவர்களுக்கும், அதேபோல், கூட்டணி மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

    வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற ஜூன் மாதம் 4-ந்தேதி அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும்; கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும்; கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முதல் அடுக்கில் துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • ஜூன் மாதம் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் இந்த பாதுகாப்பை மேலும் பல மடங்கு அதிகரிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்து உள்ளது.

    சின்ன சின்ன அசம்பாவித சம்பவங்கள் மட்டுமே நடைபெற்ற நிலையில் பெரிய அளவில் வன்முறை சம்பவங்களோ, மோதலோ ஏற்படவில்லை. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலையில் நிறைவடைந்ததை தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

    39 பாராளுமன்ற தொகுதிகளிலும் பதிவான ஓட்டுகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகிறது. நேற்று மாலையில் வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டன.

    மாலை 6 மணிக்கு பிறகு வரிசையில் நின்றவர்கள் டோக்கன் வாங்கிக் கொண்டு நீண்ட நேரம் காத்திருந்து ஓட்டு போட்டனர். இதனால் சில மையங்களில் இரவு 7 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன் பிறகே பல வாக்குச் சாவடிகளில் இருந்து மின்னணு எந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

    சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி ஆகிய 3 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதே போன்று 39 தொகுதிகளில் பதிவான வாக்குகளும் அந்தந்த தொகுதிக்குட்பட்ட மையங்களில் எண்ணப்படுகிறது.

    தேர்தல் முடிந்து 45 நாட்கள் கழித்தே ஜூன் 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுவதால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒரு மாதத்துக்கும் மேலாக பாதுகாக்க வேண்டிய கட்டாயம் காவல்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    முதல் அடுக்கில் துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாவதாக தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினரும், 3-வதாக ஆயுதப்படை போலீசும், 4-வதாக உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகிறார்கள்.

    டி.எஸ்.பி. அல்லது போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலான அதிகாரிகள் தலைமையில் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்.

    39 பாராளுமன்ற தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் நேற்று இரவு விடிய விடிய நடைபெற்றது. இன்று காலையிலும் பல இடங்களில் அந்த பணிகள் நீடித்தன.

    வாக்கு எண்ணும் மையங்களுக்கு இன்று காலையில் கொண்டு சேர்க்கப்பட்ட மின்னணு எந்திரங்கள் 'ஸ்டிராங் ரூம்' என்று அழைக்கப்படும் அறைகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன. பின்னர் அந்த அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

    இந்த அறையின் முன்பு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    ஸ்டிராங் ரூம் அறையை சுற்றிலும் போலீசார் ரோந்து சுற்றி வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதை தாண்டி மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகில் யாரும் நெருங்க முடியாது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வாக்கு எண்ணும் மையங்கள் அனைத்திலும் நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை 24 மணி நேரமும் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்தபடியே போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    இப்படி வாக்கு எண்ணும் மையங்களில் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 10 ஆயிரம் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். ஜூன் மாதம் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் இந்த பாதுகாப்பை மேலும் பல மடங்கு அதிகரிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    • சோழிங்கநல்லூர் தொகுதியில் சில இடங்களில் கொத்து கொத்தாக வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
    • வாக்குரிமை மறுக்கப்பட்டவர்கள் 49 ஏ படிவத்தில் டெண்டர் ஓட்டு செலுத்த முடியும்.

    சென்னை:

    தென்சென்னை பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று அந்த தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி அமீத்தை சந்தித்தார்.

    அப்போது மயிலாப்பூர் 122-வது வட்டம் 13-வது வாக்குச்சாவடியில் நடந்த சம்பவம் தொடர்பாக புகார் மனு கொடுத்தார்.

    பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும். நேர்மையானவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். ஆனால் தி.மு.க.வுக்கு எப்போதெல்லாம் தோல்வி பயம் வருகிறதோ அப்போதெல்லாம் மாற்றுப் பாதையை தேர்வு செய்வதுதான் வாடிக்கை.

    நேற்று வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தபோது மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 122-வது வார்டில் ஆஸ்டின் நகரில் அமைக்கப்பட்டிருந்த 13-வது வாக்குச்சாவடியில் மாலை 5.30 மணியளவில் பிரபு, அருண் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் உள்ளே புகுந்து பா.ஜனதா பூத் ஏஜெண்டு கோவிந்தன் உள்ளிட்டோரை அடித்து வெளியே விரட்டி விட்டு பூத்தை கைப்பற்றி கள்ள ஓட்டு போட்டுள்ளார்கள்.

    இதே கும்பல் பூத் எண். 14, 15, 16 ஆகியவற்றிலும் காலையில் இருந்தே கள்ள ஓட்டுகளை பதிவு செய்து அராஜகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக எங்கள் தலைமை தேர்தல் ஏஜெண்டு கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் சம்பந்தப்பட்ட பகுதி போலீஸ் அதிகாரிகள் கவனத்துக்கும் எடுத்து சென்றிருக்கிறார்கள்.

    எனவே இந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளோம்.

    சோழிங்கநல்லூர் தொகுதியில் சில இடங்களில் கொத்து கொத்தாக வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. தி.நகரில் வார்டு எண்கள் 199, 200, 201, 202-ல் ஆயிரக்கணக்கானவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

    தி.மு.க.வினர் செய்த தவறுகளை மறைப்பதற்காக பா.ஜனதாவினர் தோல்வி பயத்தில் புகார் கூறுவதாகவும், பா.ஜனதாவினர் பெயர்களை நீக்கி விட்டதாக கூறுவதாகவும் கூறுகிறார்கள். அப்படியென்றால் திட்டமிட்டுதான் பா.ஜனதாவினர் பெயர்கள் நீக்கப்பட்டது என்று தி.மு.க. ஒத்துக்கொள்கிறதா?

    கணவருக்கும், மனைவிக்கும் வெவ்வேறு இடங்களில் ஓட்டு இருப்பது, ஒரே குடும்பத்தில் சிலருக்கு ஓட்டு இல்லாமல் இருப்பது, இப்படி சில குறைபாடுகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக வாக்குப்பதிவு சதவீதம் குறைவு என்பது கவலை அளிக்கும் விசயம்.

    வாக்கு வலிமையானது. அதை செலுத்த முடியாமல் போவது அதிக வலியை தரும். வாக்குரிமை மறுக்கப்பட்டவர்கள் 49 ஏ படிவத்தில் டெண்டர் ஓட்டு செலுத்த முடியும். இது பலருக்கு தெரியவில்லை. தேர்தல் விழிப்புணர்வுக்காக கோடிக்கணக்கில் பணம் செலவிடப்படுகிறது. ஆனாலும் எதிர்பார்த்த பலன் அளிக்கவில்லை.

    சென்னையில் 69 சதவீதம் ஓட்டுப்பதிவாகி இருந்ததாக நேற்று இரவு தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் இன்று 10 சத வீதத்துக்கும் மேல் குறைத்து தெரிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சதவீத முரண்பாடு தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையின் மையை ஏற்படுத்தி விடும்.

    எப்படியோ மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை இவ்வளவு பெரிய மாநிலத்தில் சுமூகமாக நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டுகள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளை சேர்ந்தவர்கள் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர். பாரதிய ஜனதா சார்பில் உதவி தேர்தல் அலுவலர் கீதா லட்சுமியிடம் அளிக்கப்பட்ட புகாரில் பா.ஜனதா முகவர் கவுதமை தாக்கிய தி.மு.க. பிரமுகர்களான பிரபு, அருண் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    தி.மு.க. முகவரான கிருஷ்ணவேணி தேனாம்பேட்டை போலீசில் அளித்த புகாரில், பாரதிய ஜனதா கட்சி முகவர்களை கவுதம், கிருஷ்ணன் ஆகியோர் சாதியை பற்றி குறிப்பிட்டு அவதூறாக பேசியதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல்:

    இரணியல் அருகே உள்ள கட்டிமாங்கோடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் இளையராஜா என்ற கணேஷ் ராஜா. இவர் நேற்று மதியம் கட்டிமாங்காடு அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்கச் சென்றார். வரிசையில் அவருக்கு பின்னால் அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் நின்றார்.

    வாக்குச்சாவடிக்குள் சென்றதும் கணேஷ் ராஜா வாக்கு சீட்டை சரிபார்த்த அதிகாரிகள் அவரை வாக்களிக்க அனுமதித்தனர். அவர் மின்னணு எந்திரத்தில் வாக்களித்து திரும்பும் போது, அரவிந்தும் அங்கு வந்தார். அவர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்கினை செலுத்துவதற்குள் அங்கு நின்றிருந்த கணேஷ் ராஜா மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பட்டனை அழுத்தி விட்டாராம். பீப் சவுண்ட் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த அரவிந்த் இது குறித்து வாக்குச் சாவடி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அதற்குள் கணேஷ் ராஜா அங்கிருந்து நைசாக வெளியேறி விட்டார்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இந்த தகவல் உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் கணேஷ் ராஜா மீது இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×