search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    • கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வு.
    • விண்வெளி வீரர்கள் சுற்றுப்பாதையில் செல்லும் ஆய்வகத்தில் ஒரு வார காலம் தங்குவார்கள் என்று அறிவிப்பு.

    பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள்- வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

    இந்த ஆய்வு மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்தபடி புவியில் ஏற்படும் மாற்றங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வுசெய்து வருகின்றனர்.

    சுழற்சி முறையில் இவர்கள் மாற்றப்பட்டு புதிய ஆராய்ச்சியாளர்கள் நாசாவின் விண்வெளி ஓடம் மூலம் அனுப்பி வைக்கப்படுவதுண்டு. மேலும், விண்வெளி மையத்தில் தங்கி இருப்பவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர உபகரணங்களும் அனுப்பப்படுகிறது.

    இந்நிலையில், நாசா விண்வெளி வீராங்கனையான இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண்மணி சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார். இவருடன், விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் அட்லஸ் V ராக்கெட்டில் போயிங்

    ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏறிச் சென்று, சுற்றுப்பாதையில் செல்லும் ஆய்வகத்தில் ஒரு வார காலம் தங்குவார்கள் என்று நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் க்ரூ ஃப்ளைட் டெஸ்ட் மிஷனின் முதல் பைலட்களில் ஒருவராக அவர் பயிற்சி பெற்று வருகிறார்.

    மேலும், இந்த மிஷனை வரும் மே 6ம் தேதி திங்கட்கிழமை இரவு 10:34 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் ஸ்பேஸ் ஃபோர்ஸ் ஸ்டேஷனில் உள்ள விண்வெளி ஏவுதள வளாகம்-41ல் இருந்து ராக்கெட் ஏவப்படுகிறது.

    விண்வெளியில் அதிக முறை நடந்த பெண் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான சுனிதா, 321 நாட்கள் விண்ணில் கழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானும் ஈரானும் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
    • இரு தரப்பு வர்த்தகத்தை 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தவும் ஒப்புக்கொண்டன.

    வாஷிங்டன்:

    ஈரான் அதிபர் இப்ரா ஹிம் ரைசி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெ ரீப்பை சந்தித்து பேசினார்.

    இந்தப் பயணத்தின் போது, பாகிஸ்தானும் ஈரானும் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. மேலும் இரு தரப்பு வர்த்தகத்தை 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தவும் ஒப்புக்கொண்டன.

    இந்த நிலையில் ஈரானுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறும் போது, ஈரானுடனான வணிக ஒப்பந்தங்களைக் கருத்தில் கொள்ளும் எவருக்கும் பொருளாதாரத் தடைகள் ஏற்படக்கூடிய அபாயத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம் என்றார்.

    மேலும் பாகிஸ்தானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்திற்கு விநியோகம் செய்த சீன மற்றும் பெலாரசை சேர்ந்த நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது குறித்து அவர் கூறும்போது, பேரழிவு ஆயுதங்களை அதிகமாக்கி மற்றும் அவற்றை வழங்குவதற்கான வழிமுறைகள் என்பதால் இந்த தடைகள் விதிக்கப்பட்டன.

    இந்த நிறுவனங்கள் சீனா மற்றும் பெலாரசை அடிப்படையாகக் கொண்டவை. பெலாரசில் உள்ள நிறுவனங்கள் பாகிஸ்தானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்திற்கு உபகரணங்கள் மற்றும் பிற பொருட்களை வழங்கியதை நாங்கள் கண்டோம்.

    பேரழிவு ஆயுதங்கள் கொள்முதல் நடவடிக்கைகள் தொடர்பாக, அவை எங்கு நடந்தாலும், நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம் என்றார்.

    • வளையலை பரிசோதனை செய்த போது அது கி.பி. 1-ம் நூற்றாண்டை சேர்ந்த தங்க வளையல் என தெரியவந்தது.
    • சிறுவனின் தாயார் கூறுகையில், ரோவன் எப்போதும் பூமியில் இருந்து பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகிறான்.

    இங்கிலாந்தை சேர்ந்த ரோவன் என்ற 12 வயது சிறுவன் தனது செல்லப்பிராணியுடன் அப்பகுதியில் நடைப்பயிற்சி சென்றுள்ளான். அப்போது தரையில் ஒரு வினோதமான பொருள் தட்டுப்பட்டுள்ளது. மங்கிய நிலையில் காணப்பட்ட அந்த பழைய காலத்து வளையலை கொண்டு போய் தனது தாயிடம் கொடுத்தான்.

    அதை வாங்கிய அவனது தாய் இது பழைய வளையல் என்று குப்பையில் வீச நினைத்தார். ஆனாலும் திடீரென அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. இதனால் அந்த வளையலை பரிசோதனை செய்த போது அது கி.பி. 1-ம் நூற்றாண்டை சேர்ந்த தங்க வளையல் என தெரியவந்தது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அந்த வரலாற்று பொருள் சிறுவன் கையில் கிடைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.

    இதுகுறித்து சிறுவனின் தாயார் கூறுகையில், ரோவன் எப்போதும் பூமியில் இருந்து பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகிறான். அவன் அவ்வாறு செய்யும் போது நான் அவனை திட்டினாலும் தற்போது அவனது கையில் வரலாற்று பழமைவாய்ந்த தங்க வளையல் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    • நியூயார்க் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திய மாணவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
    • மாணவர்கள் போராட்டம் மிகப்பெரிய அளவில் தீவிரம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    நியூயார்க்:

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளார். இப்போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது.

    இதற்கிடையே காசா மீதான போரை கண்டித்து அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 18-ந்தேதி கொலம்பியா பல்கலைக் கழக வளாகத்தில் போராட்டம் நடத்திய 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அமெரிக்காவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் தீவிரமடைந்து மிகப் பெரிய இயக்கமாக மாறி உள்ளது.

    நியூயார்க் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திய மாணவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் 133 பேர் கைது செய்யப்பட்டனர். கனெக்டி கட்டில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அதேபோல் ஹார்வர்ட், எம்.ஐ.டி., மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் யூசி பெர்க்லி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிலும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் நடந்து வருகிறது. பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர்கள் சிறிய குடில்களை அமைத்து அங்கேயே தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதன் மூலம் மாணவர்கள் போராட்டம் மிகப்பெரிய அளவில் தீவிரம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து கொலம்பியா பல்கலைக்கழக பொது விவகாரங்களுக்கான துணைத் தலைவர் பென் சாங் கூறும்போது, மாணவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது. ஆனால் அவர்கள் வளாக வாழ்க்கையை சீர்குலைக்கவோ அல்லது துன்புறுத்தவோ மிரட்டவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றார்.

    • மாணவர் தாசரி சந்து எதிர்பாராதவிதமாக உறைந்த நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்தார்.
    • மாணவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகிறது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அனகாபல்லியை சேர்ந்தவர் தாசரி சந்து (வயது 20). இவர் கிர்கிஸ்தான் நாட்டில் மருத்துவ படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் தாசரி சந்து தனது நண்பர்களுடன் அங்குள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்றார்.

    அப்போது மாணவர் தாசரி சந்து எதிர்பாராதவிதமாக உறைந்த நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்தார். சந்துவின் குடும்பத்தினர் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் தங்கள் மகனின் உடலை இந்தியா கொண்டு வர உதவுமாறு கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து அமைச்சர் கிஷன் ரெட்டி கிர்கிஸ்தான் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். மாணவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகிறது.

    • ஒரே ஒரு சிறை போன்ற அறையுடன் கூடிய பகுதியை பிளாட்டாக மாற்றி அதனை வாடகைக்கு விடுவதாக அறிவித்துள்ளனர்.
    • சிறை அமைப்புடன் கூடிய அறை மட்டுமல்லாது அந்த பிளாட்டின் சமையலறை மற்றும் 3 அறைகள் உள்ளன.

    ஜெயில் அறை போன்ற அமைப்புடன் கூடிய குடியிருப்பு ஒன்று மாதம் ரூ.77 ஆயிரம் வாடகைக்கு விடப்படுவதாக ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

    இங்கிலாந்தின் டட்லி பகுதியில் அமைந்திருந்த போலீஸ் நிலையத்திற்கு சொந்தமான இந்த கட்டிடம் கடந்த 2017-ம் ஆண்டு மூடப்பட்டு குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்குள்ள ஒரே ஒரு சிறை போன்ற அறையுடன் கூடிய பகுதியை பிளாட்டாக மாற்றி அதனை வாடகைக்கு விடுவதாக அறிவித்துள்ளனர்.

    இதற்கு வாடகை கட்டணமாக மாதம் 750 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.77 ஆயிரம்) நிர்ணயித்துள்ளனர். மேலும் சிறை அமைப்புடன் கூடிய அறை மட்டுமல்லாது அந்த பிளாட்டின் சமையலறை மற்றும் 3 அறைகள் உள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


    • ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக போர் பிரகடனம் செய்தது.
    • பொது மக்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேற உத்தரவு.

    கடந்த ஆண்டு அக்போடர் மாத துவக்கத்தில் இஸ்ரேல் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஹமாஸ் அமைப்பினர், கண்ணில் தென்பட்டவர்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றது. மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றது.

    இந்த கொடூர சம்பவம் காரணமாக ஆத்திரம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்த துவங்கியது. கடந்த ஏழு மாதங்களாக காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் காசா எல்லையின் வடக்கில் உள்ள பெய்ட் லஹியா நகரத்தில் வசிக்கும் பொது மக்கள் விரைந்து அந்த பகுதியில் இருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளது.

    புதிய திட்டமிடலின் கீழ் பெய்ட் லஹியாவில் உள்ள ஹமாஸ் உள்கட்டமைப்பு பகுதிகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட இருப்பதால் இந்த அறிவிப்பை இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    "நீங்கள் மிகவும் அபாயகரமான போர் மண்டலத்தில் இருக்கின்றீர்கள். உங்களை காப்பாற்றிக் கொள்ள உடனடியாக இந்த பகுதியில் இருந்து வெளியேறிவிடுங்கள்," என்று இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் அவிச்சே அட்ரே குறிப்பிட்டுள்ளார். 

    • கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி காதலி மல்லிகா பேகத்திடம் கிருஷ்ணன் தகராறு செய்தார்.
    • கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

    சிங்கப்பூரில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிருஷ்ணன். இவரது காதலி மல்லிகா பேகம் ரஹமான்சா அப்துல் ரஹ்மான். ஏற்கனவே திருமணமான கிருஷ்ணன், மல்லிகா பேகத்தையும் காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி காதலி மல்லிகா பேகத்திடம் கிருஷ்ணன் தகராறு செய்தார்.

    வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறி காதலியை சரமாரியாக தாக்கினார். மதுபோதையில் இருந்த கிருஷ்ணன் காதலியின் தலையை சுவரில் மோத வைத்தும், முகத்தில் அறைந்தும், விலா எலும்பில் குத்தியும் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த மல்லிகா பேகம் இறந்தார். இதையடுத்து கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. கடந்த வாரம் கோர்ட்டில் விசாரணையின்போது கிருஷ்ணன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இந்த நிலையில் காதலியை கொன்ற வழக்கில் கிருஷ்ணனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

    • ஹஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
    • லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் பகுதிக்குள் 35 ஏவுகணைகள் வீசப்பட்டன.

    லெபனானில் செயல்படும் ஹஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த வடக்கு இஸ்ரேலில் உள்ள ராணுவ தலைமையகம் மீது ராக்கெட்டுகளை ஏவியதாக ஹஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது.

    தெற்கு லெபனானில் உள்ள கிராமங்களை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் பகுதிக்குள் 35 ஏவுகணைகள் வீசப்பட்டன. அந்த ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்தது என்று தெரிவித்தது. 

    • . மழை பாதிப்பால் ஏராளமான மக்கள் வீடுகளின் மேல் தளங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
    • மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரப்பர் படகு மூலம் சென்று உணவு வழங்கப்படுகிறது.

    தெற்கு சீனாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. குவாங்டாங் மாகாணத்தின் தலைநகரான குவாங்சோவில் 60.9 செ.மீ மழை பெய்துள்ளது.

    குவாங்டாங்கின் ஷென்சென் மெகாசிட்டி பகுதிகளுக்கு 'ரெட் அலர்ட்' மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் திடீர் வெள்ள அபாயம் ஏற்பட்டு உள்ளது.




    ஷாவோகிங் நகரில் மழைக்கு 4 பேர் பலியாகி உள்ளனர்.குவாங்டாங் மாகாணத்தில் 2 நகரங்கள் தொடர் மழையால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    மழையால் பாதிக்கப்பட்ட மக்களை ரப்பர் படகுகளில் சென்று மீட்டு வருகின்றனர். மழை வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான கடை வீதிகள் , குடியிருப்பு பகுதிகள் மூழ்கின. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 459 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். மழை வெள்ளத்தில் 1,500 ஹெக்டேர் விளைநில பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

    இங்குள்ள நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. சில கிராமங்களில் நெல் மற்றும் உருளைக்கிழங்கு வயல்கள் மூழ்கின. பல இடங்களில் 2 வது மாடி வீடுகள் வரை மழை நீர் சூழ்ந்துள்ளது.




    மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரப்பர் படகு மூலம் சென்று உணவு வழங்கப்படுகிறது. மழை பாதிப்பால் ஏராளமான மக்கள் வீடுகளின் மேல் தளங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

    புவி வெப்பமடைதல் காரணமாக சீனாவில் வானிலை நிகழ்வுகள் மிகவும் தீவிரமானதாகவும் கணிக்க முடியாததாகவும் மாறியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

    • 6 அடி 7 அங்குலம் உயரம் உள்ள ஒரு பெண் சாலையில் நடந்து சென்றால் இப்படித்தான் அனைவரும் பார்ப்பார்கள்.
    • வீடியோ 25 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் குவித்து வருகிறது.

    தனித்துவமான உடல் அமைப்பை கொண்டவர்கள் மற்றவர்களிடம் கவனம் பெறுவார்கள். அந்த வகையில், நடாலியா என்ற 6 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட பெண் ஒருவர் நெரிசல் மிகுந்த சாலையில் நடந்து சென்ற போது அவரை அங்குள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்த வீடியோவை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதில், நடாலியா மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள சாலையில் செல்கிறார். அப்போது அவரது எதிர்புறம் வரும் பலரும் அவரை கடந்து சென்ற போது நடாலியாவை ஆச்சரியமாக பார்க்கும் காட்சிகள் உள்ளது. 6 அடி 7 அங்குலம் உயரம் உள்ள ஒரு பெண் சாலையில் நடந்து சென்றால் இப்படித்தான் அனைவரும் பார்ப்பார்கள்.

    இதில் நீங்கள் எந்த வகை? எல்லோரும் உங்களை பார்ப்பார்களா? அல்லது நீங்கள் அடுத்தவர்களை பார்ப்பீர்களா? நான் இரண்டுமே!! என அந்த வீடியோவுடன் அவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ 25 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் குவித்து வருகிறது.

    • மலேசியாவில் கடற்படை தினத்தின் போது ஒத்திகை நடந்தது.
    • அப்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதியதில் 10 பேர் பலியாகினர்.

    கோலாலம்பூர்:

    மலேசியாவில் கடற்படை தினத்தின் 90-ம் ஆண்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக இன்று காலை பெரக் பகுதியில் லுமுட் நகரில் உள்ள கடற்கடை தளத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இந்த ஒத்திகையில் கடற்படையின் ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன. அவைகள் நடுவானில் சாகசங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தன.

    அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டன. ஒரு ஹெலிகாப்டர் மற்றொரு ஹெலிகாப்டரில் ரோட்டர் பகுதியை இடித்தது. இதில் 2 ஹெலிகாப்டர்களும் நடுவானில் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதிக் கொண்டன. பின்னர் அவை தரையில் விழுந்து நொறுங்கின.

    உடனே தீயணைப்பு வீரர்கள், மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஹெலிகாப்டர்களில் இருந்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களை உடல்களை மீட்டனர்.

    இதுகுறித்து மலேசிய கடற்படை கூறும்போது, ஒத்திகை நிகழ்ச்சியின்போது 2 ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதில் அதில் பயணம் செய்த 10 பேரும் உயிரிழந்துள்ளனர். அவர்களை அடையாளம் காண உடல்கள் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தது.

    மலேசிய கடற்படை தின நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது இந்த கோர விபத்து சம்பவம் அந்நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இரு ஹெலிகாப்டர்களும் மோதி விபத்துக்குள்ளானது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

    ×