search icon
என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது.
    • வழக்கு விசாரணைக்கு நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது.

    தாம்பரம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நயினார் நாகேந்திரன் ஓட்டலில் வேலை பார்த்த சதீஷ், பெருமாள் உள்பட3 பேரை கைது செய்து தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் 3 பேரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் நயினார் நாகேந்திரன், ஆசைதம்பி, சென்னை அபிராமிபுரத்தை சேர்ந்த பா.ஜனதா மாநில தொழில் துறை பிரிவின் தலைவர் கோவர்தனன், பா.ஜனதா கட்சியை சேர்ந்த ஜெய்சங்கர், நவீன், பெருமாள் உள்ளிட்டோர் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டது. வழக்கு விசாரணைக்கு நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து நேற்று ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன் ஆகியோர் தாம்பரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன், இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் ஆகியோர் முன்னிலையில் ஆஜரானார்கள்.

    அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக 2-வது சம்மன் அனுப்ப ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • சென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போதைப் பொருள் கடத்திய இளைஞரிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் தோகாவில் இருந்து சென்னை வந்த பயணியிடம் சந்தேகத்தின் பேரில் விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அவரிடம் இருந்து 11 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 11 கிலோ ஹெராயின் போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.11 கோடி என தகவல் வெளியாகி உள்ளது.

    இதைத் தொடர்ந்து போதைப் பொருளை கடத்தி வந்த இளைஞரிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், போதைப் பொருளுடன் சிக்கியவர் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பாரத் வசிட்டா என தெரிய வந்துள்ளது.

    • ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவு வெளியாக உள்ளது.
    • வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டால் பள்ளிகள் திறப்பு மேலும் தாமதம் ஆவதற்கான சூழல் ஏற்படும்.

    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நிறைவு பெற்றுவிட்டது. அதனைத் தொடர்ந்து 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு தொடங்கி நடந்தது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி விரைந்து ஆண்டு இறுதித் தேர்வை முடிக்க கல்வித் துறை திட்டமிட்டு அதற்கேற்றாற் போல் அட்டவணையை வெளியிட்டு தேர்வை நடத்தியது. அந்த அட்டவணைப்படி, கடந்த 12-ந்தேதியுடன் தேர்வு நிறைவு பெறுவதாக இருந்தது.

    ஆனால் ரம்ஜான் பண்டிகையையொட்டி, கடந்த 10 மற்றும் 12-ந்தேதிகளில் 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு நடத்த இருந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் 22 மற்றும் 23-ந்தேதிக்கு மாற்றப்பட்டது. இவர்களைத் தவிர 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 6-ந்தேதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டுவிட்டது.

    கல்வித் துறை மாற்றி அறிவித்த அட்டவணையின்படி, தேர்தல் முடிந்ததும், நேற்று முன்தினமும் (22-ந்தேதி), நேற்றும் (23-ந்தேதி) 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முறையே அறிவியல், சமூக அறிவியல் தேர்வு நடந்து முடிந்தது.

    தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், இன்று (புதன்கிழமை) முதல் மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்பது குறித்த அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என கல்வித் துறை அறிவித்துள்ளது.

    ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவு வெளியாக உள்ளது. அதற்கு பிறகே பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் கோடை காலமாக இருப்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டால் பள்ளிகள் திறப்பு மேலும் தாமதம் ஆவதற்கான சூழலும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

    • தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
    • லக்னோ அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 39 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி லக்னோவிடம் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில், தோல்வி குறித்து பேசிய சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் லக்னோ அணி வீரர் ஸ்டோயினிஸ்-க்கு பாராட்டு தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "13 ஆவது ஓவர் வரை போட்டி எங்களின் கையில் தான் இருந்தது, ஆனால் ஸ்டோயினிஸ் சிறப்பாக விளையாடினார். எங்களது தோல்விக்கு பனி முக்கிய காரணமாக அமைந்தது."

    "பனி அதிகம் இருந்ததால், பந்துவீச்சாளர்கள் தங்களது திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. போட்டியை இன்னும் சிறப்பாக கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் இதுவும் போட்டின் ஒரு பகுதி தான். இதை கட்டுப்படுத்த முடியாது. போட்டி முடிவில் லக்னோ அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது," என்று தெரிவித்தார். 

    • குண்டூர் மக்களவை தொகுதியின் தெலுங்குதேசம் கட்சி வேட்பாளர் பெம்மசானி சந்திரசேகர் ஆவார்
    • பெம்மசானி சந்திரசேகருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களில் முதலீடுகள் மற்றும் பங்குகள் உள்ளன.

    அமராவதி:

    நாட்டின் 18-வது மக்களவைக்கான தேர்தல் கடந்த 19-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவுடன் தொடங்கியது. ஜூன் 1-ந் தேதியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில், 4-ந் தேதி முடிவுகள் வெளியாக உள்ளது.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போது வழங்கும் பிரமாண பத்திரத்தின் மூலம் அவர்கள் சொத்து விவரங்கள் வெளியாகின்றன. அப்படி வெளியாகும் வேட்பாளர்கள் சிலரின் சொத்து விவரங்கள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.

    அந்த வகையில் ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் சொத்து விவரங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி அவர்தான் நாட்டின் பணக்கார வேட்பாளராக உள்ளார்.

    அவர் குண்டூர் மக்களவை தொகுதியின் தெலுங்குதேசம் கட்சி வேட்பாளர் பெம்மசானி சந்திரசேகர் ஆவார். அவரது குடும்பத்திடம் மொத்தமாக ரூ.5,785 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவரது தனிப்பட்ட சொத்துகள் ரூ.2,448.72 கோடியாகவும், அவரது மனைவி ஸ்ரீரத்னா கோனேருவுக்கு ரூ.2,343.78 கோடி மதிப்புள்ள சொத்துகளும், அவரது பிள்ளைகளிடம் கிட்டத்தட்ட ரூ.1,000 கோடி சொத்துகளும் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    டாக்டர், தொழில் அதிபர், அரசியல்வாதி என பன்முகங்களை கொண்ட பெம்மசானி சந்திரசேகருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களில் முதலீடுகள் மற்றும் பங்குகள் உள்ளன. 

    • பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைக்கும் இருக்கை ஒதுக்க வேண்டும் என டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
    • தனது முந்தைய பரிந்துரைகளில் திருத்தம் செய்து, ஒழுங்குமுறை ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    புதுடெல்லி:

    விமானப் பயணத்தின் போது குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் அமர இயலாமல் போனது குறித்து பயணிகள் பலர் புகார் தெரிவித்தனர்.

    இந்நிலையில், விமானப் பயணத்தின்போது 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அருகிலேயே இருக்கைகளை ஒதுக்கவேண்டும் என விமான நிறுவனங்களுக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

    விமானப் பயணத்தின்போது குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவரேனும் உடனிருப்பதை உறுதிசெய்யவும் இந்த உத்தரவு வழிவகை செய்கிறது.

    தனது முந்தைய பரிந்துரைகளில் திருத்தம் செய்து, ஒழுங்குமுறை ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    • ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக போர் பிரகடனம் செய்தது.
    • பொது மக்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேற உத்தரவு.

    கடந்த ஆண்டு அக்போடர் மாத துவக்கத்தில் இஸ்ரேல் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஹமாஸ் அமைப்பினர், கண்ணில் தென்பட்டவர்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றது. மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றது.

    இந்த கொடூர சம்பவம் காரணமாக ஆத்திரம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்த துவங்கியது. கடந்த ஏழு மாதங்களாக காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் காசா எல்லையின் வடக்கில் உள்ள பெய்ட் லஹியா நகரத்தில் வசிக்கும் பொது மக்கள் விரைந்து அந்த பகுதியில் இருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளது.

    புதிய திட்டமிடலின் கீழ் பெய்ட் லஹியாவில் உள்ள ஹமாஸ் உள்கட்டமைப்பு பகுதிகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட இருப்பதால் இந்த அறிவிப்பை இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    "நீங்கள் மிகவும் அபாயகரமான போர் மண்டலத்தில் இருக்கின்றீர்கள். உங்களை காப்பாற்றிக் கொள்ள உடனடியாக இந்த பகுதியில் இருந்து வெளியேறிவிடுங்கள்," என்று இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் அவிச்சே அட்ரே குறிப்பிட்டுள்ளார். 

    • நமது எல்லைகளில் உள்ள பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வலுவான உள்கட்டமைப்பு அவசியம்.
    • அதற்கு நமது ராணுவத்தை பலப்படுத்துவது மிகவும் அவசியமானது என்றார் வெளியுறவு மந்திரி.

    ஐதராபாத்:

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஐதராபாத்தில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    பிரதமர் மோடியின் உத்தரவாதம் இந்திய எல்லைக்குள் அடங்காது, அது உலகளாவியது.

    கொரோனா காலகட்டத்திலும், உக்ரைன் போர், இஸ்ரேல் போர் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு சூழல்களிலும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்தது.

    உலகில் தற்போது எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் தவறாகப் போகக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. அனைத்து சூழல்களுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

    நமது எல்லைகளில் நமக்கு பல்வேறு சவால்கள் உள்ளன. அதை எதிர்கொள்ள வலுவான உள்கட்டமைப்பு அவசியம். ராணுவத்தை பலப்படுத்துவது மிகவும் அவசியமானது.

    கடந்த 1992-ம் ஆண்டு இஸ்ரேலில் இந்திய தூதரகம் அமைக்கப்பட்டது. அதற்குமுன் அங்கு இந்திய தூதரகம் இல்லை. தொடர்ந்து 1992 முதல் 2017 வரை பிரதமர் மோடியை தவிர எந்தவொரு இந்திய பிரதமரும் இஸ்ரேலுக்குச் சென்றதில்லை.

    ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த 1947-ம் ஆண்டு செய்யப்பட்ட மிகப்பெரிய தவறை நாங்கள் திருத்தியிருக்கிறோம் என தெரிவித்தார்.

    • திருவள்ளூர் வீரராகவர் கண்ணாடி பல்லக்கில் பவனி.
    • திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, சித்திரை 11 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: பிரதமை முழுவதும்.

    நட்சத்திரம்: சுவாதி நள்ளிரவு 12.48 மணி வரை. பிறகு விசாகம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவையாறு ஸ்ரீசிவ பெருமான் குதிரை வாகனத்தில் திருவீதி உலா. வீரபாண்டி ஸ்ரீசவுமாரியம்மன் பவனி. திருவள்ளூர் ஸ்ரீவீரராகவர் கண்ணாடி பல்லக்கில் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு. திருகுறிப்பு தொண்டர் நாயனார் குருபூஜை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சிறப்பு திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராமர் சுவாமி திருமஞ்சன அலங்கார சேவை. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்மருக்கு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பயணம்

    ரிஷபம்-பணிவு

    மிதுனம்-பண்பு

    கடகம்-நட்பு

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-வெற்றி

    துலாம்- சாந்தம்

    விருச்சிகம்-போட்டி

    தனுசு- முயற்சி

    மகரம்-மகிழ்ச்சி

    கும்பம்-பெருமை

    மீனம்-பொறுமை

    • தேஜஸ்வி சூர்யாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    • ரோடு ஷோ நடத்திய அமித் ஷா பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.

    கர்நாடக மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெங்களூரு தெற்கு தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் தேஜஸ்வி சூர்யாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    இதற்காக பொம்மனஹல்லியில் ரோடு ஷோ நடத்திய அமித் ஷா வாக்காளர்களிடம் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். ரோடு ஷோவில் அமித் ஷாவுடன் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோகா மற்றும் பெங்களூரு தெற்கு பா.ஜ.க. வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ரோடு ஷோவை தொடர்ந்து பொது மக்களிடையே உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பெங்களூரு தெற்கு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவை வாக்காளர்கள் ஐந்து லட்சத்திற்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.

    தொடர்ந்து பேசிய அவர், "கர்நாடக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக குற்றம்சாட்டினார். முதல்வர் சித்தராமையா சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்காததால், அப்பாவி பொது மக்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்."

    "கர்நாடகா மாநிலத்தின் 28 பாராளுமன்ற தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு பாராட்டத்தக்க ஒன்றாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்று வாக்குறுதிகளை நிராகரித்து வளர்ச்சி சார்ந்த பிரதமர் மோடியின் ஆட்சியை மக்கள் மீண்டும் தேர்வு செய்ய வேண்டும்," என்று தெரிவித்தார்.

    • ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
    • பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 39 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளது.

    இந்நிலையில், ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 வெற்றியுடன் 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்துள்ளது.

    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 வெற்றியுடன் 4வது இடத்தில் உள்ளது.

    சென்னை மற்றும் குஜராத் அணிகள் தலா 8 புள்ளிகள் பெற்று 5, 6-வது இடங்களில் உள்ளன.

    பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

    • கேரளாவில் மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி கருத்துகள் தெரிவித்தார்.
    • இது அவர் பக்குவமற்ற அரசியல்வாதி என காட்டுகிறது என முதல் மந்திரி பினராயி விஜயன் கூறினார்.

    திருவனந்தபுரம்:

    மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன. இதில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் அங்கம் வகிக்கிறது. எனினும் பினராயி விஜயன் தலைமையிலான அக்கட்சி, காங்கிரசுக்கு எதிராக பேசுவதும், பினராயிக்கு எதிராக காங்கிரசார் பேசுவதும் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி உள்ளது.

    காங்கிரசுக்கு எதிராக கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களை இறக்கி கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஓட்டுகள் பிரிந்து செல்லக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அது பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அமைய கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

    இதேபோல், இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்தபோதும், அவர்கள் தங்கள் மாநிலங்களில் தனித்தனியாகவே போட்டியிடுகின்றனர். தங்கள் கட்சிகளைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக இறக்கி உள்ளனர். காங்கிரசுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் கூட்டணிக்கான முக்கியத்துவம் அளிக்கப்படாமல் அக்கட்சிகள் தேர்தலை எதிர்கொண்டுள்ளன.

    இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் முடிவு செய்யப்படாமல் உள்ளார். இது பிரசாரத்தில் கட்சிகள் தலைவரை முன்னிறுத்துவதற்கு முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற பல காரணங்களால், இந்தியா கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது.

    இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கண்ணூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாட்டில் பல தீவிர அரசியல் முன்னேற்ற விசயங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, ராகுல் காந்தி இந்தியாவில் இருப்பது இல்லை. அவர் ஒரு தீவிர அரசியல்வாதி இல்லை. இதுவே நாட்டிலுள்ள மக்களின் அனுபவம். இதுபற்றி நாம் விமர்சிப்பதில் இருந்து விலகியே இருக்கிறோம்.

    ஏனெனில், அவர் வேறொரு கட்சியில் இருந்து வந்தவர். அது அவர்களுடைய உள்கட்சி விவகாரம். ஆனால், பொது தேர்தல் நடக்க கூடிய நேரமிது. இந்த தருணத்தில், அவர் கேரளாவுக்கு வந்து மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்துள்ளது அவர் பக்குவமற்றவர் என காட்டுகிறது என கடுமையாக சாடியுள்ளார்.

    ×