search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஆழ்வார்பேட்டையில் மதுபான விடுதி இடிந்து விழுந்து விபத்தில் சிக்கியது.
    • இதில் 2 பேர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் 3 பேர் சிக்கி உள்ளனர்.

    சென்னை:

    சென்னை ஆழ்வார்பேட்டையில் மெட்ரோ ரெயில் பணி நடந்து வரும் பகுதியில் தனியார் மதுபான விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அந்த மதுபான விடுதி கட்டடத்தின் மேற்கூரை திடீரென சரிந்து விபத்தில் சிக்கியது. கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி 2 பேர் பலியாகினர் என தகவல் வெளியானது. கட்டட இடிபாடுகளில் சிக்கிய 3 பேரை மீட்கும் பணி நடந்து வருகிறது.

    • சுமார் நான்கு நாட்களாக போராட்டம் செய்து வருகின்றனர்.
    • தமிழக அரசே நாங்கள் அடிமைகள் அல்ல என வாசகப் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்.

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த செங்குணம் கொள்ளை மேடு பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

    சுமார் ஐந்து தலைமுறைகளுக்கு மேல் வசித்து வரும் பழமை வாய்ந்த கிராமம் ஆகும்.

    போளூர் அடுத்த செங்குணம் கொள்ளை மேடு கிராமத்தில் சுமார் 700 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர் இந்நிலையில் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த நிலையிலும் சுமார் நான்கு,ஐந்து கிலோமீட்டர் கடந்து அருகில் உள்ள செங்குணம் கிராமத்திற்கு நடந்து சென்று வாக்களிக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் மேலும் முதியோர்கள், கர்ப்பிணிகள், உடல்நிலை சரியில்லாமல் உள்ளவர்கள் உள்ளிட்டோர் 4,5 கிலோ மீட்டர் நடந்து சென்று வாக்களிக்க சிரமமாக உள்ளது எனவும் நாங்கள் பலமுறை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தங்கள் கிராமத்திற்கு இம்முறை வாக்குச்சாவடி மையம் அமைக்காவிட்டால் தங்கள் ஒட்டுமொத்த கிராமமே அதாவது 700 வாக்காளர்கள் கொண்ட அனைவருமே வாக்களிக்க போவதில்லை என கூறி எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி சுமார் நான்கு நாட்களாக போராட்டம் செய்து வருகின்றனர்.


    மேலும் தமிழக அரசே நாங்கள் உங்கள் அடிமைகள் அல்ல உள்ளிட்ட பல்வேறு வாசகப் பதாகைகளை எழுதிவைத்து கிராமமே போராட்டத்தில் ஈடுபட்டு வருவது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    எங்கள் பகுதியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கிராம மக்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

    • கத்தோலிக்க திருச்சபைகளில் சிறப்பு திருப்பலி நடக்கிறது.
    • புனித வெள்ளி அன்று கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் உணவு உட்கொள்ளாமல் உபவாசம் இருப்பது வழக்கம்.

    சென்னை:

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். அவரை சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு உயிரை துறந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு தியானிப்பார்கள்.

    இயேசு சிலுவையில் உயிரை விடுவதற்கு முன்பு 7 வார்த்தைகளை கூறினார். அந்த வார்த்தைகள் குறித்து ஆலயங்களில் தியானிக்கப்படும். அவர் சிலுவையில் முதலாவதாக பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே! என்று கூறினார். இவை உள்ளிட்ட 7 வார்த்தைகள் குறித்து தியானிக்கும் மும்மணி தியான ஆராதனை நாளை அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நடைபெறுகிறது.

    கத்தோலிக்க திருச்சபைகளில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. அதேபோல சி.எஸ்.ஐ., மெத்தடிஸ்ட், லுத்தரன், பெந்தே கோஸ்து, இ.சி.ஐ. உள்ளிட்ட எல்லா திருச்சபைகளிலும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    புனித வெள்ளி அன்று கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் உணவு உட்கொள்ளாமல் உபவாசம் இருப்பது வழக்கம். மும்மணி தியான ஆராதனை முடிந்த பிறகு தான் கிராஸ் பன், மோர் அல்லது கஞ்சி போன்றவற்றை சாப்பிடுவார்கள். முன்னதாக இன்று பெரிய வியாழன் அனுசரிக்கப்படுகிறது. தனது சீடர்களுடன் இயேசு கடைசி இராப்போஜனம் விருந்து மேற்கொள்ளும் நிகழ்ச்சியை நினைவுப்படுத்தி இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து இயேசு சிலுவையில் அடித்து கொல்லப்படுகிறார். சிலுவையில் உயிரைவிட்ட அவர் 3-வது நாள் உயிர்த்தெழுந்து வருவதை தான் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயேசு உயிர்த்தெழுந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    • அதிகாரிகள் பணத்திற்கான ஆவணத்தை காட்டி பெற்றுக் கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
    • வருமான வரித்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் நகை, பணம் மற்றும் பரிசுபொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று இரவு தண்டையார்பேட்டை இளைய தெருவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்தமிழ்செல்வன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வ.உ.சி. நகரைச் சேர்ந்த குபேந்திரன் என்பவர் வைத்திருந்த பையில் கட்டுகட்டாக ரூ.15 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. ஆனால் அவரிடம் பணத்திற்கான எந்த ஆவணமும் இல்லை. இதையடுத்து ரூ.15 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    குபேந்திரன் பழைய வண்ணா ரப்பேட்டையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். அவர் சொந்தமாக இடம் வாங்கு வதற்காக சேமித்து வைத்த பணத்தை எடுத்து வந்ததாக அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆனால் அதிகாரிகள் பணத்திற்கான ஆவணத்தை காட்டி பெற்றுக் கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர். இதனால் குபேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.15 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரூ.3 ஆயிரம், விஜயவாடாவுக்கு ரூ.2,200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • பல்வேறு பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 505 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது.

    சென்னை:

    புனித வெள்ளியையொட்டி நாளை அரசு விடுமுறை ஆகும். தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அனைவரது கவனமும் தேர்தல் பிரசாரத்தை நோக்கி திரும்பியுள்ளதால், தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் செல்பவர்களிடம், தனியார் ஆம்னி பஸ்கள் ஓசையில்லாமல் கட்டணத்தை உயர்த்திவிட்டன.

    சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று தனியார் ஆம்னி பஸ்களில் செல்வதற்கான கட்டணம் ரூ.5 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கோவைக்கு செல்வதற்கும் ரூ.5 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவே சாதாரண நாட்களில் கட்டணம் ரூ.700 முதல் ரூ.1000 வரை ஆகும்.

    இதேபோல் சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரூ.3 ஆயிரம், விஜயவாடாவுக்கு ரூ.2,200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட 3 மடங்கு முதல் 5 மடங்கு வரை கட்டணம் உயர்ந்துள்ளது.

    மற்ற பண்டிகை காலத்தில் வரும் வார இறுதி நாட்களை போலவே, தற்போதும் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் நிரம்பி வழிகின்றன. மேலும் தட்கல் முறையிலும் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி பொதுமக்கள் ஆம்னி பஸ்களை நாட வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் பஸ் கட்டணம் கிட்டத்தட்ட விமானக் கட்டணத்துக்கு இணையாக உள்ளது. எனவே, குடும்பத்துடன் ஊருக்கு செல்ல விரும்பும் பொதுமக்கள் கூடுதல் கட்டணத்தால் தவிக்கிறார்கள்.

    அதே நேரத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 505 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது. இந்த வார இறுதியில் மேலும் 650 பஸ்கள் புதிய கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் இருந்து பயணிகளை ஏற்றி செல்லும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் சொந்த ஊருக்கு செல்வதற்காக இன்று மட்டும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். கிளாம்பாக்கத்திற்கு வரும் ஒவ்வொரு பஸ்சிலும் முன்பதிவு செய்த பயணிகளின் எண்ணிக்கை நிரம்பி வழிகிறது. இதனால் முன்பதிவு செய்யாத பயணிளுக்கு இருக்கை கிடைப்பதில்லை. இதனால் முன்பதிவு செய்யாத பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.

    ஒவ்வொரு வார இறுதியிலும், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த பிறகுதான் கூடுதல் பஸ்கள் இயக்கபடுவதாகவும் பயணிகள் தெரிவிக்கி ன்றனர். எனவே வார இறுதி நாட்களில் முன்பதிவு செய்யாத பஸ்களை அதிக அளவில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திராவிடர் கழக தலைவர் வீரமணி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.
    • பூலித்தேவன் மக்கள் கழகத்தின் தலைவர் எஸ்.பெருமாள்சாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு பல்வேறு அமைப்புகளும், சங்கங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

    இன்று (வியாழக்கிழமை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர், சங்கத்தினர் தங்களது ஆதரவை தி.மு.க. கூட்டணிக்கு தெரிவித்தனர்.

    திராவிடர் கழக தலைவர் வீரமணி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், புதிய திராவிட கழக தலைவர் ராஜ் கவுண்டர், சமூகநீதி மக்கள் கட்சி மாவீரன் பொல்லான், பேரவை தலைவர் வடிவேல் ராமன், தென்னக அருந்ததியர் மக்கள் முன்னேற்ற கூட்டமைப்பின் மாநில தலைவர் செங்குட்டுவன், கோவில் பூசாரி நல சங்க தலைவர் வாசு, தமிழக விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்ற சங்க தலைவர் பரிமளம்.

    தென்னிந்திய விஸ்வ கர்மா முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் சரவணன், தமிழக வீரசேவை முன்னேற்ற பேரவை, தலைவர் தங்க தமிழ் செல்வன், தமிழ்நாடு தியாகராஜ பாகவதர் எம்.கே.டி. பேரவை மாநிலத் தலைவர் கவிஞர் ரவி பாரதி, எஸ்.ஆர்.எம். மாநில பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், சமூகநீதிக் கட்சி சார்பில், மாநில பொதுச்செயலாளர் வெள்ளமடை நாகராசன் ஆகியோர் நேரில் சந்தித்து இந்தியா கூட்டணிக்கு நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் ஆதரவு அளிப்பதாகவும், இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற ஆதரவு அளிப்பதோடு, தி.மு.க. கூட்டணி வெற்றிபெற தங்கள் கட்சி நிர்வாகிகள் பாடுபடுவார்கள் எனவும் உறுதி அளித்தனர்.

    மேலும் பூலித்தேவன் மக்கள் கழகத்தின் தலைவர் எஸ்.பெருமாள்சாமி ஆதரவு தெரிவித்துள்ளார். இவர்களை தவிர 16 விவசாய சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    • எங்கள் பகுதி பூஸ்தி ரோட்டில், தார்சாலை அமைக்க அரசு அதிகாரிகள் நட்ட கல்லை, ஆக்கிரமிப்பாளர்கள் பிடுங்கிவிட்டனர்.
    • அதிகாரிகள் தலையிட்டு பிரச்னைக்குரிய இடத்தில் தார்சாலை அமைத்து கொடுத்தால் ஓட்டு போடுவோம்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அடுத்த கம்மம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது பழையவூர் கிராமம். இப்பகுதியில், 150 குடும்பங்களை சேர்ந்த, 700க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள், ஒண்டியூர் சாலை முதல், பழையவூர் வரை தார்சாலை அமைக்க கடந்த, 30 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த, 2015-ம் ஆண்டு ஒன்றரை கிலோ மீட்டர் அளவிற்கு தார் சாலை அமைக்க, 29 லட்சம் ரூபாய் ஒதுக்கி சாலைகள் போடப்பட்டது. அப்போது, 200 மீட்டர் தூரத்திற்கு சாலை போடவிடாமல் அப்பகுதியில் சிலர் ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக போலீசிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்பட பல இடங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறிய அந்த பகுதி மக்கள் தேர்த லை புறக்கணிக்க போவதாக நேற்று தெரிவித்தனர். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதி பூஸ்தி ரோட்டில், தார்சாலை அமைக்க அரசு அதிகாரிகள் நட்ட கல்லை, ஆக்கி ரமிப்பாளர்கள் பிடுங்கிவிட்டனர். எங்கள் ஊருக்கு செல்லும் ஒரே பாதையை ஆக்கிரமித்து உள்ளனர். பால்வண்டி, பஸ் வாகனங்களை ஊருக்குள் விடாமல் ஆக்கிரமிப்பாளர்கள் தடுக்கின்றனர்.

    இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் எங்கள் கிராமத்தில் உள்ள, 500 வாக்காளர்களும் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். அதிகாரிகள் தலையிட்டு பிரச்னைக்குரிய இடத்தில் தார்சாலை அமைத்து கொடுத்தால் ஓட்டு போடு வோம். இல்லாவிட்டால் தேர்தலை கண்டிப்பாக புறக்கணிப்போம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

    • வேலூர் தொகுதியில் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • மக்கள் மனம் நெகிழ்ந்து, மீண்டும் நீங்கள் தான் வெற்றிபெறுவீர்கள் என கூறுகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் வேலூர் தொகுதியில் தற்போதைய எம்.பி.யான கதிர் ஆனந்தே மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் பசுபதி, பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக் கட்சி சார்பில் ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இதையடுத்து வேலூர் தொகுதியில் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், குடியாத்தம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கதிர் ஆனந்த், என்ன எல்லாம் பளபளப்பாக வந்து இருக்கீங்க? 1000 ரூபாய் தான் காரணமா? என பேசுவதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியாகி வைரலானது.

    ஆனால் நடந்தது என்ன என்பது குறித்து வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், என்ன பளபளப்பாக வந்து இருக்கீங்க ? என கதிர் ஆனந்த் கேட்க, அங்கிருந்த மக்கள் 1000 ரூபாய் தான் என சொல்ல... அதற்கு கதிர் 1000 ரூபாய் தான் காரணம் என பதில் பேசுகிறார். மேலும், "தளபதியின் ஆட்சியில் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை பார்க்க மனம் நெகிழ்கிறது" என கதிர் ஆனந்த் கூறினார். இதனால் அங்குள்ள மக்கள் மனம் நெகிழ்ந்து, மீண்டும் நீங்கள் தான் வெற்றிபெறுவீர்கள் என கூறுகின்றனர்.

    இதுதொடர்பான வீடியோ காண இங்கே க்ளிக் செய்யவும்...

    • இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
    • ஏப்ரல் 27-ந்தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    அரசு துறையில் உயர் பதவிக்கான துணை கலெக்டர், போலீஸ் துணை கண்காணிப்பாளர், வணிக வரிகள் உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீயணைப்பு மாவட்ட அலுவலர் ஆகிய 90 பணியிடங்களை நிரப்புவதற்கு போட்டித் தேர்வு தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

    இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஏப்ரல் 27-ந்தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம். முதல் நிலைத் தேர்வு ஜூலை மாதம் 13-ந்தேதி நடக்கிறது. முதல் நிலை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் போது முதன்மை தேர்வு நடைபெறும் நாள் வெளியிடப்படும்.

    • பா.ஜ.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் அவர்கள் கேட்கிற சின்னங்கள் வழங்கப்படுகிறது.
    • தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கடமைப்பட்டு உள்ளோம்.

    பெரம்பலூர்:

    தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். பெரம்பலூரில் அவர் பேசியதாவது:-

    தி.மு.க. அணி என்பது ஒரு மகத்தான அணி. கொள்கைகான அணி. கொள்கைக்காக போராடிக் கொண்டிருக்கிற அணி. தமிழக முதல்-அமைச்சர் தனது பிரசாரத்தை பெரம்பலூர், திருச்சி தொகுதியில் தொடங்கி தற்போது தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.

    நடைபெற இருக்கின்ற தேர்தல் ஒரு சாதாரண தேர்தல் அல்ல. நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்வியுடன் இந்த தேர்தல் நடக்க இருக்கிறது. முற்றிலுமாக ஜனநாயகம் அழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பானை சின்னம் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. அதே போல ம.தி.மு.க.விற்கான பம்பர சின்னம் கொடுக்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது. நம்மை எதிர்க்கும் நாம் தமிழர் கட்சிக்கான சின்னம் கூட பறிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் அவர்கள் கேட்கிற சின்னங்கள் வழங்கப்படுகிறது. ஒரு நடுநிலையோடு, நேர்மையாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையமே, இன்றைக்கு கேள்விக் குறியாக இருக்கிறது.

    தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஆகவே நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியலமைப்புச் சட்டத்தை காப்பாற்றவும், மதச்சார் பின்மை என்கிற மகத்தான கொள்கையை காப்பாற்றவும், நாம் இந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கடமைப்பட்டு உள்ளோம்.

    அதேபோல மத்தியில ஆளும் மோடி தலைமையிலான அரசு என்பது ஒரு மாற்றான் தாய் மனப்போக்கோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு தமிழ்நாட்டை புறக்கணிக்கிறது, தமிழ் மக்களை புறக்கணிக்கிறது. தமிழை புறக்கணிக்கிறது. அதே நேரத்தில் உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சலுகைகள் வாரி வழங்கப்படுகிறது.

    நம்முடைய நிதி அமைச்சர் சட்டப்பேரவையில் குறிப்பிட்டது போல, நாம் செலுத்துகிற ஒவ்வொரு ரூபாய்க்கும், மத்திய அரசு திருப்பிக் கொடுப்பது வெறும் 29 பைசா தான். அதே நேரத்தில் உத்திர பிரதேச மாநிலத்தில் இரண்டு ரூபாய் வழங்கப்படு கிறது. அதாவது இரு மடங்காக வழங்கப்படுகிறது நமக்கு குறைத்து வழங்கப்படு கிறது. எனவே பா.ஜ.க.வை நிராகரிக்க வேண்டும்.

    எதிர் தரப்பில் அமைந்தி ருக்கிற கூட்டணியில், ஒன்று நள்ளிரவு கூட்டணி. மற்றொன்று கள்ளக் கூட்டணி என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண் டும். எனவே ஜனநாயக முறையில் இயங்கிக் கொண்டிருக்கிற தி.மு.க. தலைமையிலான இந்த அணி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியிலும் 40 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி பெறும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

    • தேர்தல் அதிகாரி சேலம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனுவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.
    • செல்வகணபதிக்கு எதிராக கொடுக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி முதல் தொடங்கியது. 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்த நிலையில், இன்று 40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    வேட்பு மனுவை பரிசீலனை செய்து வரும் தேர்தல் அதிகாரி சேலம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனுவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.

    2 இடங்களில் வாக்கு இருப்பதாக அதிமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சேலம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    செல்வகணபதிக்கு எதிராக கொடுக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    செல்வகணபதிக்கு 2 இடங்களில் வாக்கு இருப்பதாக அதிமுகவினர் அளித்த புகார் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மலைப்பகுதியில் உள்ள தலமலையில் இருந்து தாளவாடி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
    • திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒரு காட்டுயானை ஆக்ரோசத்துடன் பிளறியபடி அரசு பஸ்சை துரத்தியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் யானைகள் உணவு, தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலை மற்றும் கிராமங்களில் உலா வருவது தொடர் கதையாகி வருகிறது.

    சாலையில் சுற்றித்திரியும் யானை அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி உணவு இருக்கிறதா என தேடியும் அலைகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வனப்பகுதியில் செல்லும் போது கவனத்துடன் சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தலமலையில் இருந்து தாளவாடி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

    முதியனூர் மற்றும் நெய்தாலபுரம் கிராமங்களுக்கிடையே உள்ள வனப்பகுதி சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒரு காட்டுயானை ஆக்ரோசத்துடன் பிளறியபடி அரசு பஸ்சை துரத்தியது.

    பஸ் டிரைவர் யானை துரத்தி வந்ததால் பஸ்சை பின்னோக்கி இயக்கினார். சிறிது தூரம் துரத்தி வந்த யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து நிம்மதி பெறும் மூச்சு விட்ட அரசு பஸ் டிரைவர் பஸ்சை இயக்கினார்.

    ×