search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இ-மெயில் அக்கவுண்ட் ஹேக் செய்யப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
    X

    இ-மெயில் அக்கவுண்ட் ஹேக் செய்யப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

    உங்களின் மின்னஞ்சல் முகவரியை யாரும் ஹேக் செய்யாமல் இருக்க நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
    புதுடெல்லி:

    மின்னஞ்சல் சேவைகள் இன்று எந்த அளவு பயன்படுகிறதோ அதே அளவு, அதன் மூலம் நமக்கு பாதிப்புகளும் ஏற்படுகின்றது. நாம் சேமித்து வைத்திருக்கும் பல்வேறு முக்கிய தகவல்களும் சில நொடிகளில் ஹேக் (திருடப்படுவது) செய்யப்பட்டு விடுகிறது. இவ்வாறு திருடப்படும் தகவல்கள் விற்பனை செய்வதோடு வைரஸ் அல்லது மால்வேர் மூலம் நம் கணினி அல்லது ஸ்மார்ட்போன் சாதனத்தையும் பாழாக்கி விடும்.   

    எதுவும் நடந்த பின் மாற்ற முடியாது. அதே போல் தான் ஹேக் செய்யப்பட்ட பின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்து, ஹேக் செய்யப்படும் முன் உங்களது தகவல்களை பாதுகாத்து கொள்ளுங்கள். அவ்வாறு மின்னஞ்சல் முகவரியை  பாதுகாக்க சில வழிமுறைகளை பற்றி இங்கு பார்ப்போம்.. 

    கடினமான கடவுச்சொல்:

    உங்களது மின்னஞ்சல் முகவரியினை யாரும் ஹேக் செய்யாமல் இருக்க நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முதல் நடவடிக்கை இது தான். உங்களது மின்னஞ்சல் முகவரியின் கடவுச்சொல் (பாஸ்வேர்டு) மிகவும் கடினமானதாக தேர்வு செய்ய வேண்டும். 

    குறிப்பாக நீங்கள் தேர்வு செய்யும் கடவுச்சொல் - எழுத்து, எண் மற்றும் சிறப்பு குறியீடு (word, nos, special characters) உள்ளிட்டவை இடம் பெற வேண்டும். இவ்வாறு இருக்கும் போது யாராலும் உங்களது மின்னஞ்சல் முகவரியை ஹேக் செய்ய முடியாது. 

    அக்கவுண்ட் ரிக்கவரி ஆப்ஷன்:
     
    மின்னஞ்சல் முகவரியின் கணக்கை மீட்க கோரும் கேள்வியை செட் செய்வது நல்லது. மேலும் இந்த கேள்விகளை அவ்வப்போது மாற்ற வேண்டும். பொதுவாக இந்த பகுதியில் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை சேர்ந்த கேள்விகள் கேட்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    கணினியில் அதிக பாதுகாப்பு:

    உங்களின் மின்னஞ்சல் முகவரியினை எந்த கணினியில் பயன்படுத்தினாலும், பயன்படுத்தி முடித்ததும் உங்களின் கணக்கை லாக் அவுட் செய்ய மறக்காதீர்கள். மற்றவர்களின் கணினியை பயன்படுத்தும் போது மின்னஞ்சல் முகவரியை லாக் அவுட் செய்வதன் மூலம் உங்களின் தரவுகளை மற்றவர்கள் பயன்படுத்துவதை தடுக்க முடியும். 

    இரண்டடுக்கு சரிபார்ப்பு முறை: 

    அனைத்து ஆன்லைன் அக்கவுண்ட்களிலும் கூடுதலாக டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் முறையை பயன்படுத்துவது நல்லது. இதனால் உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு கடவுச்சொல் மற்றும் கூடுதலாக அனுப்பப்படும் கோடினை பதிவு செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். இவ்வாறு செய்வதால் உங்களின் முகவரிக்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பு கிடைக்கும். 

    அக்கவுண்ட் சைன் இன் நடவடிக்கை:

    ஒவ்வொரு முறையும் உங்களின் மின்னஞ்சல் முகவரி லாக் இன் செய்யப்படும் நடவடிக்கையை கவனிக்க வேண்டும். லாக் இன் செய்யப்படும் நேரம், இடம் உள்ளிட்டவற்றை கவனிப்பதன் மூலம் மற்றவர்கள் உங்களின் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தினால் அப்பட்டமாக தெரிந்து விடும்.
    Next Story
    ×