search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஜியோவை முந்தியது ஏர்டெல் 4ஜி: டிராய் அறிக்கையில் பின்தங்கிய ஜியோ
    X

    ஜியோவை முந்தியது ஏர்டெல் 4ஜி: டிராய் அறிக்கையில் பின்தங்கிய ஜியோ

    இந்திய டெலிகாம் சந்தையை புரட்டிப்போட்ட ரிலையன்ஸ் ஜியோ இம்முறை அதன் வாடிக்கையாளர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போட்டி நிறுவனங்களை விட ஜியோ பின்தங்கியிருப்பது சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    ஜியோ சிம் பயன்படுத்தும் பெரும்பாலானோரின் மனநிலை உண்மை தான் என்ற ரீதியில் மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) சமீபத்திய அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. என்ன தான் ஜியோ சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தாலும் துவக்கத்தில் இருந்த வேகம் இப்போது இல்லை என்பதே பெரும்பாலான ஜியோ பயனர்களின் மனநிலையாக உள்ளது. 

    இது முற்றிலும் உண்மை தான் என டிராய் அறிக்கையும் தெரிவித்துள்ளது. ஜனவரி மாத நிலவரப்படி மற்ற டெலிகாம் நிறுவனங்கள் வழங்கிய எல்டிஇ வேகம் ஜியோவை விட அதிகம் என டிராய் உறுதியாக தெரிவித்துள்ளது. 

    அதன் படி இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் 11.9 எம்பி என்ற டவுன்லோடு வேகத்தை வழங்கியுள்ளது. இது நவம்பர் மாதத்தை விட அதிகமானது ஆகும். நவம்பர் மாதத்தில் 5 எம்பியாக இருந்த டவுன்லோடு வேகம் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி ஏர்டெல் முன்னிலை வகிக்கிறது குறிப்பிடத்தக்கது. 



    மறுபக்கம் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே வழங்கி வந்த அறிமுக சலுகை காலம் நிறைவு பெற்றதும் புத்தாண்டு சலுகை ஒன்றை அறிவித்து, தொடர்ந்து ஜியோ சேவைகளை இலவசமாக வழங்கி வருகிறது. துவக்கத்தில் 18 எம்பி என்ற டவுன்லோடு வேகத்தை வழங்கிய ஜியோ ஜனவரி மாதத்தில் வெறும் 8.3 எம்பி என்ற டவுன்லோடு வேகத்தை வழங்கியுள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.

    இதே போல் வோடபோன் மற்றும் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் 9.6 எம்பியில் இருந்து 10.3 எம்பி வரை அதிகரித்துள்ளது. ஜனவரி மாத வாக்கில் இது 10.5 எம்பியாக உள்ளது. 

    நாடு முழுக்க ஜியோ இண்டர்நெட் வேகம் குறைய முக்கிய காரணம் புதிய சலுகையின் மூலம் இலவச சேவைகள் கூடுதலாக வழங்கப்பட்டது தான் என கூறப்படுகிறது. அப்படியாக நாட்டின் ஒட்டுமொத்த டேட்டா பயன்பாடுகளில் ஜியோ நெட்வொர்க் லோடு 90% என கண்டறியப்பட்டுள்ளது. அதிகப்படியான பயன்பாடு நெட்வொர்க் வேகத்தை குறைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.   

    வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைவானது தான் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களின் டவுன்லோடு வேகம் அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கும் என சந்தை வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
    Next Story
    ×