search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பத்து நிமிடங்களில் 2.5 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை
    X

    பத்து நிமிடங்களில் 2.5 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பத்தே நிமிடங்களில் சுமார் 2.5 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் முதல் பிளாஷ் விற்பனை நேற்று நடைபெற்றது. இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது குறித்து சியோமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்தே நிமிடங்களில் 2,50,000 சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

    சியோமி ரெட்மி 3S மற்றும் ரெட்மி நோட் 3 ஸ்மார்ட்போன்களின் முதல் பிளாஷ் விற்பனையில் விற்கப்பட்டதை விட முறையே மூன்று மற்றும் ஐந்து மடங்கு அதிகமான ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சியோமி தெரிவித்துள்ளது. 

    இந்தியாவில் சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் மூன்று மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி 2GB ரேம் / 32GB இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் ரூ.9,999, 3GB ரேம் / 32GB இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் ரூ.10,999 மற்றும் 4GB ரேம் / 64GB இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பிளிப்கார்ட் மற்றும் சியோமியின் Mi.com தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படுகின்றது. 

    சிறப்பம்சங்களை பொருத்த வரை ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட எல்சிடி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இன்டெர்னல் மெமரியுடன் மெமரியை கூடுதலாக 128GB வரை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

    ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமராவும், 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அழகிய புகைப்படங்களை எடுக்க கூடுதலாக கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள நோட் 4 ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் சார்ந்த MIUI 8 யூஸர் இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது. 4ஜி வோல்ட்இ தொழில்நுட்பம் கொண்டுள்ள ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் 4100 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
    Next Story
    ×