search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலர்புல் மலேசியாவில் காண வேண்டிய அழகிய மாநிலம் பேராக்: புகைப்பட தொகுப்பு
    X

    கலர்புல் மலேசியாவில் காண வேண்டிய அழகிய மாநிலம் பேராக்: புகைப்பட தொகுப்பு

    வானளாவிய கட்டிடங்களை கொண்ட கோலாலம்பூரை கடந்து பல `ஷூட்டிங் லொக்கேஷன்களை' மறைத்து வைத்திருக்கும் அழகிய பேராக் மாநிலத்தைப் பற்றி அறிந்து கொள்வோமா?
    கோலாலம்பூர்:

    வானளாவிய கட்டிடங்களை கொண்ட கோலாலம்பூரை கடந்து மலேசியா நாட்டில் பல ஷூட்டிங் ஸ்பாட்களை மறைத்து வைத்திருக்கும் அழகிய பேராக் மாநிலத்தைப் பற்றி அறிந்து கொள்வோமா?

    தென்கிழக்கு ஆசிய கண்டத்தில் அமைந்துள்ள மலேசியா 13 மாநிலங்கள் மற்றும் மூன்று கூட்டாட்சிப் பகுதிகளின் கூட்டமைப்பாகும். இவை இரண்டு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தீபகற்ப மலேசியாவில் 11 மாநிலங்களும் இரண்டு கூட்டாட்சிப்பகுதிகளும் கிழக்கு மலேசியாவில் இரண்டு மாநிலங்களும் ஒரு கூட்டாட்சிப் பகுதியும் உள்ளன. மாநிலங்களின் ஆளுகை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்குள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதோடு கூட்டாட்சிப் பகுதிகளின் நிர்வாகத்தை மத்திய அரசாங்கம் மேற்கொள்கிறது.

    13 மாநிலங்களும் வரலாற்று முறையான மலாய் இராச்சியங்களை மையமாகக் கொண்டவை. தீபகற்ப மலேசியாவிலுள்ள 11 மாநிலங்களில் 9 அவற்றின் பரம்பரை ஆட்சியாளர்களால் ஆளப்படுவதோடு, அவை மலாய் மாநிலங்கள் எனவும் அறியப்படுகின்றன. 

    இந்த மாநிலங்களில் நான்காவது பெரிய மாநிலமாக பேராக் மாநிலம் அறியப்படுகிறது. அதிக மழைப்பொழிவும் பசுமையான நிலப்பரப்பும், வரலாற்று சிறப்புடன் கூடிய பழங்கால அரிய கட்டிடங்களும், இந்த மாநிலத்தை சொர்க்கப்புரியாக பார்வையாளர்கள் மனதில் நிலைநிறுத்தும்.

    நிர்வாகரீதியாக 12 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள பேராக் மாநிலத்தின் மக்கள்தொகையில் சுமார் 12 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. போர்ச்சுகீசியர்கள் ஆட்சிக் காலத்துக்கு பின்னர் இப்பகுதியின் வர்த்தக தொடர்புகளில் கொடிகட்டி பறந்த டச்சு வியாபாரிகள் 17-ம் நூற்றாண்டுவாக்கில் இங்கு பேராக் நதி தோற்றுவாய் பகுதியிலும், பங்கோர் தீவிலும் கோட்டைகளை உருவாக்கி செழித்து வளர்ந்தனர்.



    மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 200 கி.மீ. வடக்கே அமைந்துள்ள பேராக் மாநிலத்தை ஒரு அமைதிப் பூங்கா என்று தான் சொல்ல வேண்டும். சுற்றுலாவுக்காக  கோலாலம்பூர் செல்பவர்கள், நெரிசல் இல்லாமல் ஒரு அழகான நகரத்தை பார்க்க விரும்பினால் பேராக் மாநிலம் அவர்களுக்கு அற்புத அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை. 

    பேராக் மாநிலத்தின் தலைநகர் ஈபோ. ஆங்கிலேயர் காலத்து ஆட்சியாளர்கள், ஈபோவை மலேசியாவின் இரண்டாவது தலைநகராக பயன்படுத்தி வந்தார்கள். ஈபோவில் வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள் பல உள்ளன. மேலும் இங்கு மெத் என்ற அனிமேஷன் தீம் பார்க் ஒன்றும் உள்ளது. இங்கு குழந்தைகளை கவரக்கூடிய பலவிதமான விளையாட்டுக்கள் இருப்பது சிறப்பு. இது ஆசியாவின் முதல் அனிமேஷன் தீம் பார்க் என்பது குறிப்பிடத்தக்கது. 

    தைப்பிங்

    பேராக் மாநிலத்தில், ஈபோவிற்கு அடுத்து பெரிய நகரம் தைப்பிங். அதிக மழைபொழியக்கூடிய இடமான இங்கு, கண்ணைக் கவரும் இயற்கைக் காட்சிகளும், பூங்காக்களும், குளங்கள் உள்ளிட்ட நீர் தேக்கங்களும் சூழ்ந்து ரம்மியமாக கண்ணுக்கு குளிர்ச்சியை தரும்படி இருக்கிறது. 

    பேராக்கில் பிரசித்தி பெற்ற மற்றொரு நகரம் இது. இயற்கை எழில் கொஞ்சும் புல்வெளியுடன் கூடிய கார்டன்தான் தைப்பிங்கில் அமைந்திருக்கும் ஏரிப்புல்வெளி. இங்கு அடிக்கடி மழை பெய்வது ஆச்சரியமான விஷயம்! பினாங் விமானதளத்தில் இருந்து 90 நிமிட பயண நேரத்தில் அமைந்திருக்கிறது தைப்பிங் கார்டன். 



    ஏரியை ஒட்டி அமைந்திருக்கும் அழகான புல்வெளி நம் மனதை மயக்கும். அருகிலேயே நூறு ஆண்டுகள் பழமையான தைப்பிங் வனவிலங்குகள் சரணாலயம் அமைந்திருக்கிறது. இந்த உயிரியல் பூங்காவில் நைட் சஃபாரி (இரவில் விசிட் செய்து மிருகங்களைப் பார்ப்பது) ஒரு திரில்லிங்கான அனுபவம். 

    சிங்கம், புலி, ஒட்டகம், காண்டா மிருகம், நீர் யானை, ஒட்டகச்சிவிங்கி, யானைகள் உட்பட பல அரிய வனவிலங்குகளை நள்ளிரவில் பார்த்து ரசிக்கும் த்ரில் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அங்கு பார்வையாளர்களின் அருகிலேயே மிருகங்கள் வருகின்றன. மிருகங்கள் வந்தாலும் அதற்குரிய பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது.

    கெல்லீஸ் கேஸ்ட்ல்

    தாஜ்மஹாலை போல பேராக்கில் அமைந்துள்ள காதல் சின்னம் தான் கெல்லீஸ் கேஸ்ட்ல். பத்துகாஜா என்ற இடத்தில் நமது தமிழ் நாட்டு கட்டடக் கலையை பறைசாற்றும் ஒரு நினைவு சின்னம் என்றே இதைச் சொல்லலாம். வில்லியம் கெல்லி ஸ்மித் என்ற கட்டடக்கலை பொறியாளர் ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்தவர். அவர் 1890-ம் ஆண்டில் தனது 20-வது வயதில் மலேசியா வந்து மலேசிய அரசாங்கத்தில் பணிபுரிந்தவர். 



    தமிழகத்து கட்டடக்கலையில் ஆர்வம் கொண்ட கெல்லீஸ் தமிழ்நாட்டு அரண்மனை போலவே ஒரு அரண்மனையை அமைக்க முயற்சி செய்தார். இங்கிருந்து 70 கட்டடக்கலை ஆட்களையும் கற்களையும் மண்ணையும் கொண்டு சென்று தமிழ்நாட்டு அரண்மனை போலவே வடிவமைக்கத் தொடங்கினார். இந்த அரண்மனையை தனது மனைவிக்கு பரிசளிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் விதியின் விளைவால் பாதி அரண்மனை கட்டிக்கொண்டிருக்கும்போதே அவர் மறைந்துபோக அந்த அரண்மனை பாதியில் நிற்கிறது. அரண்மனையிலிருந்து பார்க்கும் தொலைவில் ஒரு தமிழ் கோவில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

    மேப்ஸ் 

    மூவி அனிமேஷன் பார்க் ஸ்டூடியோஸ் பேராக் மாநிலத்தில் உள்ள ஈப்போ பகுதியின் முக்கிய பொழுதுபோக்கு விஷயங்களில் ஒன்று. இங்கே உலகிலேயே வேறு எங்கும் காண முடியாத ஸ்பேஸ் ஷிப் ஹோட்டல் இருக்கிறது. பறப்பது போன்ற அனுபவத்துடன் சாப்பிடுவது அலாதியான அற்புத அனுபவம். அதோடு மொத்தம் 15 த்ரில்லிங் ரைடுகளுடன் 23 விதமான விளையாட்டுக்களையும் உள்ளடக்கியது மேப்ஸ். 6 தீம் பகுதிகளும் நம்மை குழந்தைப்பருவத்துக்கே கூட்டி செல்லும். குழந்தைகளை குதூகலிக்க வைக்கும் ஒரு சொர்க்கமாக இந்த தீம் பார்க் திகழ்கிறது. இதுவரையில் இங்கு யாரும் சினிமா படப்பிடிப்பு நடத்தியது இல்லை. சினிமாவில் வரும் பாடல் காட்சிகளை எடுப்பதற்கு ஏற்ற இடம் இது. 



    சுல்தான் அஷ்லான் ஷா கேலரி 

    பேராக் மாநிலத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலம் இது. சுல்தான் ஷா ஒருவரின் அரண்மனையை அப்படியே பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். 1898-ல் பேராக்கை ஆண்ட சுல்தானின் நினைவு இல்லம்தான் இது. சுல்தான் ஷா பயன்படுத்திய தங்கம் மற்றும் வெள்ளியிலான அழகு மிகுந்த பொருட்களை பார்க்கும்போது, நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடித்து விடும். முழுக்க முழுக்க இயற்கை பொருட்களை வைத்து எழில் கொஞ்சும் அளவுக்கு இந்த அரண்மனை கட்டப்பட்டிருக்கிறது. 



    டெம்பரங் கேவ் 

    ஈப்போ நகரத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதுதான் இந்த டெம்பரங் குகை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்கையாக உருவான இந்த மலைக் குகை பிரசித்தி பெற்ற ஒன்று. விண்ணைத் தொடும் உயரத்தில் இருக்கும் இந்த மலைக்கு வெளியில் இருந்து பார்த்தால் உள்ளே குகை இருக்கும் சுவடே தெரியாது.  

    டெம்பரங் குகையில் பல விலங்கு உருவங்கள் தெரிவது திரில்லான அனுபவத்தை தருகிறது. மேலிருந்து கீழே பாயும் நீர் அருவி சல,சலவென்ற சத்தத்துடன் ஓடி வருவது ஆச்சரியமான ஒன்று. இயற்கையாகவே உருவான இந்த மலைக் குகையில் உலகிலேயே மதிப்பு வாய்ந்த சலவைக் கற்களும் மின்னுகின்றன. 



    சூரிய ஒளி அந்த குகையில் உள்ள துவாரங்களில் நுழையும்போது குகை பாறைகள் நிறம் மாறும் அழகு பார்க்க பரவசம்! இந்த குகைக்குள் நடப்பதற்காக இரும்பு படிக்கட்டுக்களை வைத்து இருக்கிறார்கள். இந்த குகையின் உள்ளே நுழைந்தவர்கள் நிச்சயமாக ஆச்சரியப்பட்டுதான் திரும்புவார்கள்.  

    பங்கூர் தீவு

    பேராக் மாநிலத்தில் நம்மை அசத்திய இன்னொரு இடம் பங்கூர் தீவு. இந்த தீவை சுற்றி கடல் இருந்தாலும், லெமூட் என்ற இடத்திலிருந்து படகில் பத்து நிமிடத்தில் சென்று விடலாம். சுமார் 22 கிலோ மீட்டர் பரப்பளவில் சுமார் ஐயாயிரம் மக்கள் வசிக்கும் அழகான தீவுதான் பங்கூர். 

    சுற்றுலாவும், மீன்பிடி தொழிலும் பங்கூர் தீவின் பிரதான தொழில்கள். மீனை பதப்படுத்தி சுவைமிக்கதாக உலகம் முழுக்க ஏற்றுமதி செய்கிறது பங்கூர் தீவு. மலேசியாவில் உள்ள லங்காவி தீவு மாதிரி பங்கூர் தீவும் ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா போன்ற போன்ற நாடுகளிலிருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் இந்த தீவிற்கு வந்து பொழுதைக் கழிக்கிறார்கள். 



    குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நம் கண்ணுக்கு விருந்தளிக்ககூடிய நிறைய அழகழகான லொக்கேஷன்கள் இங்கு உள்ளன. நூறு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்கள் உருவாக்கிய விமான தளம் இன்றும் அப்படியே இருக்கின்றது. சீனர்களும், தமிழர்களும் அதிகமாக வாழும் இங்கு படகு சவாரி செய்வதுதான் உல்லாசமான பொழுதுபோக்கு.

    இங்குள்ள ஹோட்டல்களில் பெரும்பாலும் தமிழ்நாட்டு உணவு வழங்கப்படுது மிகப்பெரிய சிறப்பம்சமாகும். இங்கு முதன்மை உணவாக மீன் பரிமாறப்படுகிறது.

    மலேசியா என்றாலே சுற்றுலா பயணிகளுக்கு சட்டென்று நினைவுக்கு வருவது கோலாலம்பூரில் உள்ள இரட்டை கோபுரங்களும், பத்துமலை முருகன் கோயில்தான். அங்குள்ள மற்ற இடங்களைப் பற்றி தெரியாமல் சென்று விடுகிறார்கள். ஆனால் மலேசியாவின் முக்கிய நகரமான பேராக் மாநிலத்தில் சுற்றி பார்க்க சுற்றுலாத்தலங்கள் எத்தனையோ இருக்கின்றன. 



    பேராக் மாநிலத்தில் எங்கு சென்றாலும் தமிழ் பேசக்கூடியவர்கள் இருப்பதால், எங்கு சென்றாலும் அங்கு நாம் எளிதாக பயணிக்க முடிகிறது. அம்மாநில அரசு சுற்றுலா பயணிகளுக்காக சுற்றுலாத் தலங்களை அழகுபடுத்தியிருக்கிறது. அமைதியும், சுத்தமான சுற்றுப்புற சூழலும் கொண்டிருப்பது பேராக் மாநிலத்தின் சிறப்பு. மொத்தத்தில் பேராக் அமைதிப் பூங்காவாக சுற்றுலாப் பயணிகளுக்கு இன்பத்தை தருகிறது. 


    நமது தொப்புள்கொடி உறவுகள் அதிகமாக வசிக்கும் நாடுகளில் மிக முக்கியமான நாடான மலேசியாவில் உள்ள மலேசிய தமிழர்களை பொறுத்தவரை தூய தமிழிலும், அளவு கடந்த அன்பினாலும், விருந்தோம்பலினாலும் நம்மை திக்குமுக்காட செய்து விடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக பேராக் மாநில அரசாங்கமே சுற்றுலாவுக்கான அத்தனை வசதிகளும் செய்து தந்து உதவுவது நினைவுகூரத்தக்கது. 

    எங்கு பார்த்தாலும் இயற்கை கொஞ்சும் அழகான மரங்களும், பெரிய, பெரிய மலைத் தொடர்களும் நமது கண்களுக்கு குளிர்ச்சியை தருகின்றன. அங்குள்ள  மனிதர்களின் அழகு மிகுந்த கட்டடக்கலையும், வடிவமைப்பும் அந்த இயற்கையையே மிஞ்சுகின்ற அளவுக்கு இருக்கின்றன. அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள் இன்றும் அதன் அழகு மாறாமல் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடும். ஒருமுறை சென்று வாருங்கள். சொக்கிப் போவீர்கள்!


    Next Story
    ×