search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிரியாவின் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்திய துருக்கி தரைப்படை: குர்திஷ் ஆயுதக் குழுவை ஒழிக்க நடவடிக்கை
    X

    சிரியாவின் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்திய துருக்கி தரைப்படை: குர்திஷ் ஆயுதக் குழுவை ஒழிக்க நடவடிக்கை

    குர்திஷ் ஆயுதக் குழுவை விரட்டியடிக்கும் முயற்சியாக சிரியாவின் எல்லைக்குள் சென்று துருக்கி தடைப்படை தாக்குதல் நடத்தியது.
    இஸ்தான்புல்:

    சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அப்ரின் பிராந்தியத்தில் குர்திஷ் ஆயுதக்குழு (ஒய்பிஜி) செயல்பட்டு வருகிறது. இந்த பகுதி துருக்கியின் தெற்கு எல்லையில் உள்ளது. சிரியாவில் ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான சண்டையில் ஈடுபடும் அமெரிக்க ஆதரவு படையில் குர்திஷ் ராணுவ குழுவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், தங்கள் நாட்டில் தடை செய்யப்பட்ட குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியுடன் குர்திஷ் ராணுவ குழுவுக்கு தொடர்பு உள்ளதாக கூறி அந்த குழுவினரை தீவிரவாதிகள் என துருக்கி கூறுகிறது.

    அத்துடன் தனது எல்லைப் பகுதியில் இருந்து குர்திஷ் ஆயுதக் குழுவை ஒழித்துக்கட்ட தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. குர்திஷ் தரப்பும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. துருக்கி படையினருக்கு ஆதரவாக சிரியாவில் இயங்கி வரும் ப்ரீ சிரியன் ஆர்மி என்ற கிளர்ச்சிக்குழுவும் குர்திஷ் படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த தாக்குதலின் உச்சகட்டமாக நேற்று சிரியாவின் எல்லைப்பகுதியை நோக்கி துருக்கி ராணுவம் விமான தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக குர்திஷ் ஆயுதக் குழுவும் ஏவுகளை வீசி தாக்கியுள்ளது.



    அதன்பின்னர் துருக்கி ராணுவத்தின் தரைப்படை அதிரடியாக சிரியாவின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி முன்னேறி வருகிறது. கவச வாகனங்கள், சிறப்பு படையினருடன் தரைப்படை வீரர்கள் ஆப்ரின் பிராந்தியத்தில் 5 கி.மீ. அளவுக்கு முன்னேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களுடன் துருக்கி ஆதரவு கிளச்சிக்குழுவும் (ப்ரீ சிரியன் ஆர்மி) இணைந்துள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

    இதுபற்றி துருக்கி பிரதமர் பினாலி யில்டிரிம் இஸ்தான்புல் நகரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “குர்திஷ் ஆயுதக்குழு கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியதிற்குள் துருக்கி தரைப்படை நுழைந்துள்ளது. ஆப்ரின் பிராந்தியத்தில் 30 கி.மீ. சுற்றளவுக்கு பாதுகாப்பு மண்டலத்தை முதலில் உருவாக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார். 

    இந்த தாக்குதலை உறுதி செய்த துருக்கி அதிபர் எர்டோகன், ‘ஆப்ரின் ஆபரேசன்’ விரைவில் முடிவடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    ப்ரீ சிரியன் ஆர்மியின் தளபதி யாசர் அப்துல் ரகிம் கூறுகையில், தங்கள் அமைப்பைச் சேர்ந்த சுமார் 25000 போராளிகள், துருக்கி ராணுவத்துடன் இணைந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார். குர்திஷ் குழுவினரை வெளியேற்றுவதுதான் தங்கள் நோக்கம் என்றும்,பொதுமக்கள் பாதிக்கப்படும் வகையில் நகருக்குள் சென்று சண்டையிட மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

    அப்ரின் பிராந்தியத்தில் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான குர்திஷ் ஆயுதக்குழுவினர் இருப்பதாக கூறப்படுகிறது. #tamilnews

    Next Story
    ×