search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தான்: 12 மணிநேர துப்பாக்கி சண்டையில் சொகுசு ஓட்டலை சிறைபிடித்த தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்
    X

    ஆப்கானிஸ்தான்: 12 மணிநேர துப்பாக்கி சண்டையில் சொகுசு ஓட்டலை சிறைபிடித்த தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சொகுசு ஓட்டலுக்குள் புகுந்து 6 பேரை கொன்ற தீவிரவாதிகளை 12 மணிநேர துப்பாக்கி சண்டையில் பாதுக்காப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுல் நகரின்மீது விரைவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரித்திருந்த அமெரிக்கா, அங்குள்ள தங்கள் நாட்டவரை பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தி இருந்தது.

    இந்நிலையில், காபுல் நகரின் மையப்பகுதியில் உள்ள இன்டர்கான்டினென்ட்டல் என்ற சொகுசு ஓட்டலின் சமையலறை வழியாக நேற்று பின்னிரவு ஓட்டலின் மையப்பகுதிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் எதிரில் தென்பட்டவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.


    இந்த தாக்குதலில் அந்த ஓட்டலின் ஒருபகுதி தீக்கிரையானது. உயிர் பயத்தில் சிலர் மாடி பால்கனியில் இருந்து கீழே குதித்து தப்பித்து செல்ல முயற்சித்தனர். பீதியில் பலர் கூச்சலிட்டபடி ஓடிச்சென்று மற்றவர்களின் அறைகளுக்குள் தஞ்சம் அடைய முயன்றதால் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.

    இந்த தாக்குதலில் அந்த ஓட்டலில் தங்கியிருந்த ஒரு வெளிநாட்டு பெண் உள்பட ஆறுபேர் பலியானதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.



    இந்த தாக்குதல் பற்றிய தகவல் அறிந்ததும் விரைந்துவந்த பாதுகாப்பு படையினர் ஓட்டலுக்குள் நுழைந்து முன்னேறிச் சென்று அங்கிருந்தவர்களை மீட்டு பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இருதரப்பினருக்கும் இடையில் சுமார் 12 மணிநேரம் நீடித்த துப்பாக்கி சண்டையில் உள்ளே பதுங்கி இருந்த இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், 41 வெளிநாட்டினர் உள்பட மொத்த 153 பேர் அந்த ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் ஆப்கானிஸ்தான் உள்துறை செய்தி தொடர்பாளர் நஜிப் டனிஷ் இன்று தெரிவித்துள்ளார். #Tamilnews
    Next Story
    ×