search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்த மேலும் ஒரு கேரள வாலிபர் உயிரிழப்பு: உறுதி செய்தது காவல்துறை
    X

    ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்த மேலும் ஒரு கேரள வாலிபர் உயிரிழப்பு: உறுதி செய்தது காவல்துறை

    சிரியாவில் ஐ.எஸ். அமைப்புக்காக செயல்பட்டு வந்த கேரளாவைச் சேர்ந்த மேலும் ஒரு வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக கேரள காவல்துறை உறுதி செய்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இணைந்துள்ளனர். கேரளாவை சேர்ந்த சிலர் சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு சென்று அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்தனர். இது தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறையினர் நடத்திய விசாரணையிலும் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்த கேரள வாலிபர்கள் அங்கு நடைபெறும் ராணுவ தாக்குதல்களில் பலியாகும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது. அவ்வகையில் கன்னூர் மாவட்டம் வாழப்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல் மனாப் என்ற இளைஞர், சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்திற்காக சண்டையிட்டபோது உயிரிழந்துள்ளார். கடந்த 17-ம் தேதி அவர் இறந்துவிட்டதாக டெலிகிராம் மெசேஜ் ஆப் மூலம் அவரது உறவினர்களுக்கு  தகவல் வந்துள்ளது. அவரின் மரணத்தை கேரள காவல்துறை இன்று உறுதி செய்துள்ளது.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு சதானந்தன் கூறுகையில், ‘மனாப் கொல்லப்பட்டது பற்றி ஐ.எஸ். அமைப்பில் செயல்பட்டு வரும் அவரது நண்பர் கயூப் வாழபட்டினத்தில் உள்ள குடும்பத்தினருக்கு தகவல் அனுப்பி உள்ளார். கன்னூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 15 பேர் ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்துள்ளனர். அவர்களில் மனாப் உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 4 பேர் ஐ.எஸ். அமைப்புக்காக சண்டையிட்டு வருகின்றனர்” என்றார்.

    அமெரிக்க ஆதரவு படைகளின் துணையுடன் ஈராக் அரசு, ஐ.எஸ். தீவிரவாதிகளை தங்கள் நாட்டில் இருந்து ஒழித்துக்கட்டியது. ஆனால் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இன்னும் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் மீதும் அமெரிக்க ஆதரவு படைகள் விமான தாக்குதல் நடத்தி வருகின்றன.
    Next Story
    ×