search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை இல்லை: பாக். பிரதமர் அப்பாசி திட்டவட்டம்
    X

    சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை இல்லை: பாக். பிரதமர் அப்பாசி திட்டவட்டம்

    மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். #HafizSaeed #Abbasi
    இஸ்லாமாபாத்:

    மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

    நமது நாட்டின் நிதித்தலைநகரம் என்ற சிறப்புக்கு உரிய மும்பை மாநகரில், 2008-ம் ஆண்டு, நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் நுழைந்து, 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிபயங்கர தாக்குதல்கள் நடத்தினர்.

    உலகையே உலுக்கிய இந்த தாக்குதல்களில் 166 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதல்களை, பாகிஸ்தானில் இருந்து கொண்டு மூளையாக செயல்பட்டு வழி நடத்தியவர், ஹபீஸ் சயீத்.



    மும்பை தாக்குதலை தொடர்ந்து ஹபீஸ் சயீத்தை சர்வதேச பயங்கரவாதி என ஐ.நா. சபை அறிவித்து உள்ளது. அவரது தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.65 கோடி) விலை வைத்து உள்ளது.

    வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்த ஹபீஸ் சயீத் கடந்த நவம்பர் மாத கடைசியில் விடுதலை செய்யப்பட்டார். அவரை மீண்டும் கைது செய்ய வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

    லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தவா ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் நிறுவனரான ஹபீஸ் சயீத், மில்லி முஸ்லிம் லீக் (எம்.எம்.எல்.) என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். இந்த கட்சி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று அவர் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது அரசியல் கட்சிக்கு பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் இன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை.

    ஆனாலும் அமெரிக்கா, அவரது அரசியல் பிரவேசத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளது.

    இந்த நிலையில் ஜியோ டி.வி.க்கு பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், “ஹபீஸ் சயீத் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அவர், “ஹபீஸ் சயீத் சாகிப் மீது நாட்டில் எந்த ஒரு வழக்கும் கிடையாது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. வழக்கு இருந்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும்” என பதில் அளித்தார்.

    “அப்படி என்றால் அவரது கட்சிக்கு ஏன் இன்னும் பொது அரசியலுக்கு வர அனுமதி அளிக்கப்படவில்லை?” என்று கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு அப்பாசி பதில் அளிக்கையில், “இது அரசாங்கத்தின் முடிவு அல்ல. தேர்தல் கமிஷன்தான் தனக்குரிய சட்ட விதிகளின்படி அப்படி செயல்படுகிறது” என்று குறிப்பிட்டார்.

    இந்தியா பற்றியும் அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

    அப்போது அவர், “எங்கள் தரப்பில் இருந்து போருக்கான ஆபத்து எதுவும் இல்லை. அங்கு இருந்தும் போர் ஆபத்து இல்லை. காஷ்மீரின் எல்லைப்பகுதியில் பதற்றம் கூடாது என்பதை இரு நாடுகளும் உறுதி செய்ய வேண்டும். பாகிஸ்தான் ஒருபோதும் தானாக தாக்குதல் நடத்தாது. நாங்கள் எப்போதும் பொறுப்பு உள்ளவர்களாக காட்டி வருகிறோம்” என்று குறிப்பிட்டார்.  #HafizSaeed #Abbasi #tamilnews 
    Next Story
    ×