search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீன கடலில் தீப்பிடித்த ஈரான் எண்ணைய் கப்பல் வெடித்து சிதறியது
    X

    சீன கடலில் தீப்பிடித்த ஈரான் எண்ணைய் கப்பல் வெடித்து சிதறியது

    சீன நாட்டின் கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்த ஈரான் நாட்டு எண்ணைய் கப்பலின் சில பகுதிகள் இன்று வெடித்துச் சிதறத் தொடங்கியுள்ளது. #Iranianoiltanker
    பீஜிங்:

    ஈரான் நிறுவனத்துக்கு சொந்தமான பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு சரக்கு கப்பல் ஈரான் நாட்டில் இருந்து சுமார் 1,36,000 டன் அளவிலான மிருதுவாக்கப்பட்ட பெட்ரோலிய கச்சா எண்ணையை ஏற்றிகொண்டு தென் கொரியா நாட்டுக்கு புறப்பட்டு சென்றது.

    சுமார் 274 நீளமுள்ள இந்த கப்பல் சீனாவின் தொழில்நகரமான ஷங்காயில் இருந்து சுமார் 160 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது அமெரிக்காவில் இருந்து சீனாவின் குவாங்டாங் நகருக்கு சுமார் 64 ஆயிரம் டன் உணவு தாணியங்களை ஏற்றிவந்த ஹாங்காங் சரக்கு கப்பலின்மீது (சீன நேரப்படி) 6-1-2018 அன்று 8 மணியளவில் பயங்கரமாக மோதியது.

    மோதிய அதிர்ச்சியில் ஈரான் நாட்டு எண்ணைய் கப்பல் தீபிடித்து எரிய தொடங்கியது. அதில் வந்த வங்காளதேசம் நாட்டை சேர்ந்த இருவர் மற்றும் 30 ஈரான் நாட்டினர் என மொத்தம் 32 பேரின் கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை. ஹாங்காங் நாட்டு கப்பலின் பெரும்பகுதியும் தீயில் எரிந்து நாசமானது. அதில் வந்த 21 பேரை சீன கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.

    எண்ணைய் கப்பலில் வந்து காணாமல்போன 32 பேரை தேடும் பணிக்காக சீனாவில் இருந்து 8 கப்பல்களும், தென்கொரியாவில் இருந்து ஒரு விமானம் மற்றும் கடலோர காவல்படை கப்பலும் அனுப்பி வைக்கப்பட்டன. எண்ணைய் கப்பலில் இருந்து ஆக்ரோஷமாக கொழுந்து விட்டெரியும் தீயை நுரையை பீய்ச்சி அடித்து அணைக்கும் முயற்சிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன.

    கடல் பகுதியில் சிந்தியுள்ள கச்சா எண்ணையை சுத்தப்படுத்தும் பணிகளும் தொடர்ந்து நடைபெறுகிறது. காணாமல்போன 32 பேரில் ஒருவர் மட்டுமே பிரேதமாக மீட்கப்பட்ட நிலையில் மீதி 31 பேரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என கருதப்படுகிறது.

    இந்நிலையில், கடந்த ஆறுநாட்களில் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் ஈரான் எண்ணைய் கப்பலில் பற்றி எரியும் தீயை அணைப்பதற்காக எடுத்த முயற்சிகள் யாவும் பலனற்றுப்போன நிலையில் அந்த கப்பலின் சில பகுதிகள் இன்று வெடித்துச் சிதற தொடங்கியுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    அந்த கப்பலில் உள்ள சுமார் 10 லட்சம் பேரல் கச்சா எண்ணைய் சீன கடல் பகுதியில் பரவுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு தொடர்பாக கிரீன்பீஸ் என்னும் பசுமை அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. #tamilnews #Iranianoiltanker
    Next Story
    ×