search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறு வயதில் சட்ட விரோதமாக குடியேறிய 8 லட்சம் பேரை வெளியேற்ற டிரம்ப் எடுத்த நடவடிக்கைக்கு தடை
    X

    சிறு வயதில் சட்ட விரோதமாக குடியேறிய 8 லட்சம் பேரை வெளியேற்ற டிரம்ப் எடுத்த நடவடிக்கைக்கு தடை

    அமெரிக்காவில் சிறுவயதில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 8 லட்சம் பேரை வெளியேற்ற டிரம்ப் எடுத்த நடவடிக்கைக்கு சான்பிரான்சிஸ்கோ கோர்ட்டு தடை விதித்து உள்ளது. #DACA #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் சிறுவயதில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 8 லட்சம் பேரை வெளியேற்ற டிரம்ப் எடுத்த நடவடிக்கைக்கு  சான்பிரான்சிஸ்கோ கோர்ட்டு தடை விதித்து உள்ளது.

    அமெரிக்க நாட்டில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சின்னஞ்சிறு வயதிலேயே தமது பெற்றோருடன் சென்று லட்சக்கணக்கானோர் குடியேறினார்கள். சுமார் 8 லட்சம் பேர் அப்படி அங்கு வாழ்கின்றனர். அவர்களுக்கு 2012-ம் ஆண்டு, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பொது மன்னிப்பு வழங்கி ஒரு திட்டத்தை கொண்டு வந்தார்.

    இந்த பொது மன்னிப்பு திட்டம் ‘டாகா’ என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் அங்கே தொடர்ந்து படிக்கவும், வேலை பார்க்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

    ஆனால், கடந்த ஆண்டு அங்கு ஜனாதிபதியாக பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப் அரசு, ஒபாமா அரசு அளித்த பொது மன்னிப்பு திட்டத்தை தடாலடியாக ரத்து செய்துவிட்டது.

    இந்த உத்தரவு, அங்கு வெளிநாடுகளை சேர்ந்த 8 லட்சம் பேரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது. அவர்களில் இந்தியர்களும் அடங்குவார்கள். அவர்கள் நாடு கடத்தப்படுகிற அபாயகரமான சூழலும் உருவானது.

    டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள கலிபோர்னியா வடக்கு மாவட்ட கோர்ட்டில் பல்வேறு மாகாணங்கள், அமைப்புகள், தனிநபர்கள் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

    இந்த வழக்கை நீதிபதி வில்லியம் அல்சப் விசாரித்தார். விசாரணை முடிவில், டாகா பொது மன்னிப்பு திட்டத்தை ரத்து செய்து டிரம்ப் அரசு பிறப்பித்த உத்தரவுக்கு அவர் தடை விதித்தார்.

    தனது உத்தரவில் நீதிபதி வில்லியம் அல்சப், “அரசு பிறப்பித்த உத்தரவு, இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வருகிற வரையில் நிறுத்தி வைக்கப்படுகிறது. ‘டாகா’ திட்டத்தை ரத்து செய்வதற்கு முன்பு இருந்த நிலை, விதிமுறைகள் தேசிய அளவில் கடைப் பிடிக்கப்பட வேண்டும்” என்று கூறி உள்ளார்.

    மேலும், “இந்த டாகா திட்டம் சட்ட விரோதமானது என்ற அமெரிக்க நீதித்துறையின் வாதம், தவறானது” என்றும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டி உள்ளார்.

    இந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு பேர் பலன் பெற்றார்களோ, அவர்களிடம் இருந்து புதுப்பிப்பு விண்ணப்பத்தை பெற்று தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு இருக்கிறார்.

    நீதிபதி வில்லியம் அல்சப் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, வெளிநாடுகளை சேர்ந்த 8 லட்சம் பேருக்கு நிம்மதியை அளித்துள்ளது.

    இந்த உத்தரவு குறித்து அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை அதிகாரிகள் உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.  #DACA #DonaldTrump #tamilnews
    Next Story
    ×