search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வாக்காளர் மோசடி விசாரணை கமிஷன் கலைப்பு: டிரம்ப்
    X

    ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வாக்காளர் மோசடி விசாரணை கமிஷன் கலைப்பு: டிரம்ப்

    அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தான் அமைத்த வாக்காளர் மோசடி விசாரணை கமிஷனை டிரம்ப் திடீரென கலைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது.

    இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

    இதில் டிரம்ப் 304 தேர்தல் சபை வாக்குகளை (எலெக்டோரல் ஓட்டுகள்) பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து நின்ற ஹிலாரிக்கு 227 தேர்தல் சபை வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

    ஆனால் பாப்புலர் ஓட்டு என்று அழைக்கப்படுகிற மக்கள் வாக்குகள் ஹிலாரிக்குத்தான் அதிகமாக கிடைத்தன. அவருக்கு 6 கோடியே 58 லட்சத்து 53 ஆயிரத்து 516 ஓட்டுகள் கிடைத்தன.

    ஆனால் டிரம்புக்கு 6 கோடியே 29 லட்சத்து 84 ஆயிரத்து 825 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. குறிப்பாக ஹிலாரியை விட டிரம்ப் 28 லட்சத்து 68 ஆயிரத்து 691 ஓட்டுகள் குறைவாகப் பெற்றார்.

    டிரம்ப் வெற்றி பெற்று ஜனாதிபதி பதவியை ஏற்ற பின்னரும், அவருக்கு தேர்தலின் போது பாப்புலர் ஓட்டுகள் குறைந்து போனது அதிர்ச்சியை அளித்தது.

    தேர்தலின்போது பெருமளவு மோசடிகள் நடைபெற்றதால்தான் தனக்கு பாப்புலர் ஓட்டுகள் குறைந்து போனதாக அவர் குற்றம் சாட்டினார். ஆனால் அதற்கு எந்தவொரு ஆதாரத்தையும் அவர் கூற வில்லை.

    இருப்பினும் இந்த மோசடி குறித்து விசாரிப்பதற்கு டிரம்ப் ஒரு கமிஷனை கடந்த ஆண்டு மே மாதம் அமைத்தார். இந்த கமிஷனுக்கு துணை ஜனாதிபதி மைக் பென்சும், கன்சாஸ் மாகாண வெளியுறவு மந்திரி கிரிஷ் கோபாக்கும் தலைமை தாங்குவார்கள் என்றும் அவர் அறிவித்தார்.

    இந்த கமிஷனை அவர் அமைத்தது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த கமிஷனுக்கு பல்வேறு மாகாணங்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்தன.

    இந்த நிலையில் தான் அமைத்த விசாரணை கமிஷனை டிரம்ப் திடீரென கலைத்து விட்டார்.

    இது தொடர்பாக வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் விடுத்துள்ள அறிக்கையில், “வரி செலுத்துகிறவர்களின் பணத்தில் முடிவில்லாத சட்டப் போராட்டம் நடத்தாமல், ஜனாதிபதி டிரம்ப் தான் அமைத்த வாக்காளர் மோசடி விசாரணை கமிஷனை கலைப்பது என முடிவு எடுத்துள்ளார். வாக்காளர்கள் மோசடி நடைபெற்றிருப்பதற்கு ஆதாரங்கள் இருந்தாலும்கூட, பல மாகாணங்கள் விசாரணை தொடர்பான அடிப்படை தகவல்களைக் கூட விசாரணை கமிஷனிடம் தர மறுத்து விட்டன. எனவே விசாரணை கமிஷனை கலைப்பதற்கான நிர்வாக உத்தரவை ஜனாதிபதி டிரம்ப் பிறப்பித்து உள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பாக கருத்து தெரிவித்த நாடாளுமன்ற செனட் சபை ஜனநாயக கட்சி தலைவர் சுக், “விசாரணை கமிஷன் நேர்மையுடன் எதையுமே செய்யவில்லை” என்று குறிப்பிட்டார். #tamilnews
    Next Story
    ×