search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான்: ஹபீஸ் சயீத் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க முன்னாள் அதிபர் முஷரப் திட்டம்
    X

    பாகிஸ்தான்: ஹபீஸ் சயீத் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க முன்னாள் அதிபர் முஷரப் திட்டம்

    மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபீஸ் சயீத் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் மீது அந்நாட்டு அரசு தேசத்துரோக வழக்கு உள்பட பல வழக்குகளை தொடர்ந்துள்ளது. இதனால் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சிந்து மாகாண ஐகோர்ட்டு, முஷரப் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடையை கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் நீக்கியது.

    இதை எதிர்த்து, பாகிஸ்தான் அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் முஷரப் வெளிநாடு செல்வதற்கு அரசு விதித்துள்ள தடையை நீக்குமாறு உத்தரவிட்டது.

    இதையடுத்து, முஷரப் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு அவரது வக்கீல்கள் அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கு அரசும் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 18-ம் தேதி அதிகாலை 3.55 மணியளவில் கராச்சி நகரில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் முஷரப் புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக, பாகிஸ்தான் ஊடகத்துக்கு பேட்டியளித்த முஷரப், நான் இந்த நாட்டை நேசிக்கும் ஒருபோர் வீரன். சில வாரங்களிலோ, மாதங்களிலோ என் தாய்நாட்டுக்கு மீண்டும் வருவேன் என பேட்டியளித்திருந்தார்.

    இந்நிலையில், பெஷாவர் நகரில் உள்ள உயர்நீதி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதி மன்றத்தில் முஷரப்புக்கு எதிரான தேசத்துரோகம் மற்றும் ஆட்சியை கவிழ்க்க சதி செய்த குற்றம் ஆகியவை தொடர்பான வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த வழக்குகளில் ஆஜராகும்படி பல முறை சம்மன் அனுப்பியும் முஷரப் ஆஜராகவில்லை. துபாய் நாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ள முஷரப் அங்கிருந்தவாறு பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கும், இந்திய அரசுக்கும் எதிராக பேட்டி அளித்து வருகிறார். சில வேளைகளில் பரபரப்பான அறிக்கைகளையும் வெளியிடுகிறார்.

    பாகிஸ்தானை சேர்ந்த 20-க்கும் அதிகமான சிறிய உதிரி கட்சிகளை ஒன்றிணைத்து பாகிஸ்தான் அவாமி இத்தெஹாட் கூட்டணி என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளதாக கடந்த மாதம் முஷரப் அறிவித்தார்.

    இந்நிலையில், மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபீஸ் சயீத் தொடங்கியுள்ள கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க முன்னாள் அதிபர் முஷரப் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முஷரப், பாகிஸ்தானில் இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தாவா இயக்கங்கள் தேசபக்தி மிக்கவை. இந்த அமைப்பினர் தேசபக்தியில் மிகவும் உயர்வானவர்கள். காஷ்மீர் பிரச்சனைக்காக பல தியாகங்களை செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த அமைப்பினருக்கு மக்களிடையே மிகுந்த செல்வாக்கு இருப்பதால் இவர்கள் அமைக்கும் அரசியல் இயக்கத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். இதுவரை இந்த அமைப்பினர் என்னுடன் கூட்டணி தொடர்பாக ஏதும் பேசவில்லை. அவர்கள் அப்படி முடிவு செய்தால் இந்த அமைப்புகளுடன் கூட்டணி வைத்து கொள்வதில் எனக்கு ஆட்சேபனை ஏதுமில்லை எனவும் முஷரப் தெரிவித்துள்ளார்.

    எனவே, பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில் துபாயில் இருந்தபடியே முஷரப் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என தெரிகிறது. மில்லி முஸ்லிம் லீக் கட்சி என்ற அரசியல் இயக்கத்தின் பெயரால் இந்த தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள தீவிரவாதி ஹபீஸ் சயீத்துடன் முஷரப் கூட்டணி வைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×