search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்தில் விஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்து முடக்கம்: கோர்ட்டு உத்தரவு
    X

    இங்கிலாந்தில் விஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்து முடக்கம்: கோர்ட்டு உத்தரவு

    இந்திய வங்கிகள் கேட்டுக் கொண்டதின் பேரில் இங்கிலாந்தில் விஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்களை முடக்கி வைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    லண்டன்:

    கர்நாடக தொழில் அதிபரான விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி இருந்தார். அதில் ரூ.9 ஆயிரம் கோடியை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி விட்டு இங்கிலாந்துக்கு தப்பி ஒடிவிட்டார்.

    தற்போது இங்கிலாந்திலேயே வசித்து வருகிறார். அங்கும் அவருக்கு ஏராளமான நிறுவனங்களும், சொத்துக்களும் உள்ளன. அதை கவனித்து கொண்டு சொகுசு வாழ்க்கை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.

    இதற்கிடையே விஜய் மல்லையாவால் ஏமாற்றப்பட்ட 12 வங்கிகள் சார்பில் லண்டனில் உள்ள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தனியார் சட்ட நிறுவனம் மூலம் இந்த வழக்கை தொடர்ந்தார்கள்.



    அதில், விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்கி வைத்து தங்களுக்கு உரிய தொகையை பெற்று தரும்படி கேட்டு இருந்தனர்.

    இந்த வழக்கு விசாரணை ஏற்கனவே நடந்து வந்தது. நேற்று மீண்டும் விசாரணை நடந்தது. அப்போது விஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்களை முடக்கி வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

    மேலும் விஜய் மல்லையாவின் செலவுக்கு வாரம் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் அளவுக்கு வழங்குவதற்கும் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

    இந்திய வங்கிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் அவருடைய சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டு இருப்பதால் இந்திய வங்கிகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

    இங்கிலாந்தில் விஜய் மல்லையா ஆரஞ்சு இந்தியா கோல்டிங்ஸ், யுனைடெட் மது நிறுவனம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறார். அவருக்கு இங்கிலாந்தின் விர்ஜின் தீவுகளிலும் சொத்துக்கள் உள்ளன. இவற்றின் பெரும் பகுதி முடக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×