search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோக்லாம் பகுதியில் மீண்டும் 1800 சீன வீரர்கள் குவிப்பு: ஹெலிகாப்டர் தளம் அமைப்பதாக தகவல்
    X

    டோக்லாம் பகுதியில் மீண்டும் 1800 சீன வீரர்கள் குவிப்பு: ஹெலிகாப்டர் தளம் அமைப்பதாக தகவல்

    சிக்கிம் மாநிலம் டோக்லாம் எல்லை பகுதியில் மீண்டும் சீன வீரர்கள் முகாமிட்டு ஹெலிகாப்டர் தளம் அமைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    புதுடெல்லி:

    இந்தியா - சீனா - பூடான் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் முச்சந்தியில் “டோக்லாம்” எனும் பகுதி உள்ளது.

    கடந்த ஜூன் மாதம் அந்த பகுதியில் உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகளில் சீன ராணுவம் ஈடுபட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    டோக்லாமில் சாலை அமைத்தால், அதில் இருந்து மிக எளிதாக சீன படைகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட முடியும் என்ற அச்சுறுத்தல் உள்ளது. இதனால் சீன வீரர்கள் சாலை அமைத்ததை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். பிறகு தூதரக அளவில் பேச்சு வார்த்தை நடந்தது.

    இதையடுத்து ஆகஸ்டு மாத இறுதியில் சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து சீன ராணுவம் பின் வாங்கியது. இதனால் சீனாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதன் பிறகு டோக்லாம் பகுதியில் அமைதி நிலவி வந்தது.

    இந்த நிலையில் சீன அதிபராக சீ சின்பிங் மீண்டும் இரண்டாவது தடவையாக சமீபத்தில் தேர்வானார். அதன் பிறகு டோக்லாம் பகுதியில் மீண்டும் சர்ச்சைகள் உருவாகத் தொடங்கியுள்ளன. டோக்லாமை இணைக்கும் உயர்மட்ட சாலை பணியை சீனா மீண்டும் தொடங்கி உள்ளது.

    அந்த சாலை அமைப்புப் பணி இந்தியாவை நோக்கி தென்புறமாக இல்லாமல் வடக்கு நோக்கி உள்ளது. என்றாலும் அதுவும் ஒரு வகையில் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்தான். எனவே இந்திய எல்லைப் பகுதியில் இந்திய வீரர்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே டோக்லாமில் சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கூடுதல் வீரர்களை சீனா இறக்கி வருகிறது. நேற்று 1800 கூடுதல் வீரர்கள் வந்துள்ளனர். இவர்கள் அங்கு கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர்.

    அதன் அருகில் இரண்டு ஹெலிகாபடர் இறங்கும் தளங்களை சீன ராணுவம் கட்டி உள்ளது. மேலும் அவை அருகில் அதிநவீன தங்கும் இடங்களையும் சீனா உருவாக்கி வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கைகள் ஆக்கிரமிப்பை அதிகப்படுத்தியுள்ளது.

    டோக்லாமில் சீன வீரர்கள் 1800 பேர் அதிகப்படுத்தப்பட்டு இருப்பதால் இந்தியாவும் அதிக வீரர்களை அனுப்ப தயாராகியுள்ளது. இதனால் டோக்லாமில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    டோக்லாம் அருகே சீனா நிரந்தரமாக தங்கும் வகையில் கூடாரங்களை அமைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×