search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து-பிரான்சில் கடும் பனிப்பொழிவு: ஜெர்மனியில் 330 விமானங்கள் ரத்து
    X

    இங்கிலாந்து-பிரான்சில் கடும் பனிப்பொழிவு: ஜெர்மனியில் 330 விமானங்கள் ரத்து

    பிரிட்டன் நாட்டின் சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதையொட்டி ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தில் 330 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    பெர்லின்:

    குளிர்காலம் தொடங்கிவிட்டதால் வட ஐரோப்பிய நாடுகளில் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மைனஸ் 0 டிகிரிக்கும் கீழ் தட்பவெப்ப நிலை சென்று விட்டதால் கடும் குளிர் நிலவுகிறது.

    இதனால் தண்ணீர் ஐஸ் கட்டியாக மாறிவிட்டது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பனி மழை கொட்டுகிறது.

    ஜெர்மனியின் வர்த்தக நகரமான பிராங்பர்ட் விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். அங்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் விமான போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது. அதனால் அங்கு 330 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

    துசெல்ட்ரோப் விமான நிலையம் மாலையில் 4 மணி நேரம் மூடப்பட்டது. மேலும் வட மேற்கு ரின்- வெஸ்ட்பாலியா மாகாணத்தில் ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. அவை வேறு மார்க்கத்தில் இயக்கப்பட்டன. பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.



    இங்கிலாந்தில் 2-வது பெரிய நகரமான பிர்மிங்காமில் உள்ள விமான நிலையமும் பனிப்பொழிவு காரணமாக நேற்று காலை விமான போக்குவரத்தை நிறுத்தி வைத்தது. விமான ஓடு தளத்தில் பனி கொட்டிக் கிடந்ததால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இதனால் அங்கு 30 ஆயிரம் பயணிகள் சிக்கி தவித்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு பல விமானங்கள் வேறு மார்க்கத்தில் அனுப்பப்பட்டன. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பனி காரணமாக லண்டனில் உள்ள லுப்தான் விமான நிலையத்தின் ஓடு தளமும் 2 மணி நேரம் மூடப்பட்டது. மாலையில் விமானங்கள் இறங்க மட்டும் அனுமதிக்கப்பட்டது.

    வேல்ஸ் மற்றும் மத்திய இங்கிலாந்து பகுதியில் ரோடுகளில் பனி கொட்டிக் கிடக்கிறது. எனவே வாகன ஓட்டிகள் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    இங்கிலாந்தின் துர்காம் பகுதியில் வொர்செஸ்டரில் கொட்டிக்கிடக்கும் பனியில் உள்ள இருக்கையில் நாயுடன் ஒருவர் அமர்ந்திருக்கும் காட்சி.

    பிரான்சில் கடுமையாக குளிர் காற்று வீசுகிறது. கலெய்ஸ் துறைமுக பகுதியில் பயணம் செய்த ஒரு படகு காற்றில் சிக்கியது. இதனால் அதில் இருந்த 300 பயணிகள் கரைசேர முடியாமல் தவித்தனர். 5 இழுவை படகுகள் சென்று அதை கரை சேர்த்தன.

    இதேபோன்று பிரான்சில் பல இடங்களில் கடும் குளிர் காற்று வீசுகிறது. 20 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.
    Next Story
    ×