search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேபாளம் மாகாணசபை தேர்தல் - 116 தொகுதிகளில் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் வெற்றி
    X

    நேபாளம் மாகாணசபை தேர்தல் - 116 தொகுதிகளில் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் வெற்றி

    நேபாளம் நாட்டு பாராளுமன்ற மற்றும் மாகாணசபை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையில் ஆளும் இடதுசாரிகள் தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் பெருமளவில் வெற்றி பெற்றனர்.
    காத்மாண்டு:

    இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு புதிய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து, பாராளுமன்றம் மற்றும் 7 மாகாண சபைகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் மாதம் 26-ம் தேதியும், இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 8-ம் தேதியும் நடைபெற்றது.

    மொத்தம் 128 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 256 மாகாணசபை உறுப்பினர்களை தேர்வு செய்ய நடந்த இந்த தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு 1,663 வேட்பாளர்களும், மாகாணசபை உறுப்பினர் பதவிக்கு 2,819 பேரும் போட்டியிட்டனர்.

    நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் படிப்படியாக வெளியாகி வருகின்றன. நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் நிலவரப்படி ஆளும்கட்சியான ஒன்றிணைந்த நேபாள மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் பல தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

    வெளியான 165 மாகாணசபை தொகுதி வாக்கு எண்ணிக்கையின் நிலவரப்படி 81 இடங்களில் ஆளும் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் 35 இடங்களிலும், எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் வேட்பாளர்கள் 21 இடங்களிலும், நேபாளம் ராஷ்ட்ரிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் 12 இடங்களிலும் மற்ற 12 இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தலைநகர் காத்மாண்டு மாவட்டத்திற்குட்பட்ட பத்து பாராளுமன்ற தொகுதிகளில் ஆளும்கட்சி வேட்பாளர்கள் மூன்று இடங்களிலும், எதிர்க்கட்சி இரு இடங்களிலும் வென்றுள்ளனர். மீதமுள்ள 100 தோகுதிகளுக்கான முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இதுவரை வெளியான முடிவுகளை வைத்து பார்க்கும் பொழுது ஆளுங்கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×