search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அறிவிக்கும் டிரம்ப் முடிவுக்கு துருக்கி, சீனா கண்டனம்
    X

    ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அறிவிக்கும் டிரம்ப் முடிவுக்கு துருக்கி, சீனா கண்டனம்

    ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக இன்று அறிவிக்கவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவுக்கு துருக்கி, சீனா, பிரான்ஸ், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
    இஸ்தான்புல்:

    இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித தலமாக உள்ளது. ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரின்போது ஜெருசலேம் நகரை பாலஸ்தீனத்திடம் இருந்து இஸ்ரேல் கைப்பற்றியது.

    இதனையடுத்து, 1980-ம் ஆண்டில் இருந்து அந்நகரை தன்னுடன் இணைத்து இஸ்ரேல் நிர்வகித்து வருகிறது. மேலும், அருகாமையில் உள்ள வெஸ்ட் பேங்க் பகுதியில் சில புதிய குடியேற்றங்களை இஸ்ரேல் அமைத்துள்ளது. எனினும், ஜெருசலேம் நகரம் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட நகராகவே கருதப்பட்டு வருகிறது. 

    கடந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

    இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக கடந்த வாரம் செய்திகள் வெளியானது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.

    இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சனிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ள ஜோர்டான் வெளியுறவு மந்திரி அய்மான் சஃபாதி, இது ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவின் இந்த முடிவுக்கு எதிராக சர்வதேச ஆதரவை ஒன்று திரட்டும் நடவடிக்கையில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியிருந்தார்.

    இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தீர்மானித்துள்ளதாகவும், இதற்கான அறிவிப்பை (அமெரிக்க நேரப்படி) இன்று பிற்பகல் ஒரு மணியளவில் அவர் வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்நிலையில், ஜெருசலேம் நகரின் எதிர்காலம் என்ன? என்பது தொடர்பாக இஸ்ரேலிய தலைவர்களும், பாலஸ்தீன தலைவர்களும் நேருக்குநேர் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி அதன் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஐ.நா. சபையின் மத்திய கிழக்கு நாடுகளின் அமைதி திட்டத்துக்கான தூதர் நிக்கோலே மிலடெனோவ் இன்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையில், ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக இன்று அறிவிக்கவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவுக்கு துருக்கி, சீனா, பிரான்ஸ், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    அமெரிக்காவின் இந்த முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீயை மூட்டிவிட்டு மிகப்பெரிய பேரழிவாக முடியும் என்று அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடான துருக்கி எச்சரித்துள்ளது.

    இதுதொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள துருக்கி துணை பிரதமரும் அந்நாட்டு அரசின் செய்தி தொடர்பாளருமான பெகிர் போஸ்டக், ‘ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தையும், இந்த உலகையும் எப்போது அணையும் என்று குறிப்பிட முடியாத தீக்குள் தள்ளிவிடும்’ என தெரிவித்துள்ளார்.

    இந்த முடிவு அனைவருக்குமான பேரழிவாக அமைந்து, கலவரம், மோதல் ஆகியவற்றுக்கு வழிவகுப்பதுடன் நாம் இதற்கு முன்னர் காணாத விரும்பத்தகாத சம்பவங்களையும் ஏற்படுத்தி விடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

    அமெரிக்க தூதரகத்தை இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவ் பகுதியில் இருந்து ஜெருசலேம் நகருக்கு மாற்றி ஜெருசலேமை புதிய தலைநகராக அறிவிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இந்த முடிவு சகிப்புத்தன்மையின்மையையும், மூடத்தனத்தையும் காட்டுகிறது.

    மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலக நாடுகளின் அமைதிக்கு மையப்புள்ளியாக ஜெருசலேம் இருப்பதால் இந்த முடிவு அமைதியை அழித்துவிடும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

    இவ்விவகாரம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சீன அரசின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கெங் ஷுவாங், ‘இந்த முடிவால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக கவலை கொள்ள வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

    மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அமைதி மற்றும் வளத்துக்கான தேவைகளை அனைத்து தரப்பினரும் கருத்தில் கொள்ள வேண்டும். பாலஸ்தீனிய பிரச்சனைக்கான அடிப்படை தீர்வுகளை பாதிக்காதவாறும் அப்பகுதியில் புதிய மோதல்களை உருவாக்காத வகையிலும் நமது சொற்களும் செயல்பாடுகளும் அமைய வேண்டும்’ என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
    Next Story
    ×