search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி பதவி விலக கோரி பாகிஸ்தானில் கலவரம்: 10 பேர் பலி - ராணுவம் குவிப்பு
    X

    மந்திரி பதவி விலக கோரி பாகிஸ்தானில் கலவரம்: 10 பேர் பலி - ராணுவம் குவிப்பு

    பாகிஸ்தானில், மந்திரியை பதவி விலக வலியுறுத்தி மதவாதிகள் போராட்டாம் நடத்தினர். இதில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் உயிரிழந்தனர்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் தேர்தலின் போது வேட்பாளர்கள் மத அடிப்படையில் செய்து கொள்ள வேண்டிய திருத்த பிரமாணத்தை சட்ட மந்திரி ஜாகித் ஹமீது மேற்கொள்ளவில்லை.

    இதனால் அவர் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த ஒரு வாரமாக தெக்ரிக் இ லபாயிக் ரா ரசூல் அல்லா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதால் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    எனவே போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் வலியுறுத்தின. அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நேற்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவமும், அதிரடிப் படை போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

    போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். அதற்கு அவர்கள் செவி சாய்க்காததால் ரப்பர் குண்டுகளும், கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. இதனால் போராட்டக்காரர்களின் 50-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் தீப்பிடித்து எரிந்தன.



    அதை தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது கலவரமாக மாறியது. இது தலைநகர் இஸ்லாமாபாத் மட்டுமின்றி பாகிஸ்தானின் பிற நகரங்களான கராச்சி, ஐதராபாத், லாகூர், குஜ்ரத், குஷ்ரன் வாலா, பைசலா பாத், பெஷாவர் உள்ளிட்ட இடங்களுக்கும் பரவியது. அங்கு மதவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இக்கலவரத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    கலவரக்காரர்கள் இஸ்லாமாபாத்- ராவல்பிண்டி நெடுஞ்சாலையை தடைகள் அமைத்து மறித்துவிட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

    நிலைமை மிக மோசம் அடைந்ததை தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இஸ்லாமாபாத் உள்ளிட்ட பல நகரங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்தில் நீதிமன்றங்கள், பாராளுமன்றம், ஜனாதிபதி மாளிகை, பிரதமர் இல்லம், வெளியுறவு துறை அமைச்சகம், தூதரக அதிகாரிகள் இல்லம், மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×