search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளடக்கிய வளர்ச்சிக்காக இந்தியாவும், அமெரிக்காவும் தொடர்ந்து பணியாற்றும்: டிரம்ப் மகள் இவாங்கா
    X

    உள்ளடக்கிய வளர்ச்சிக்காக இந்தியாவும், அமெரிக்காவும் தொடர்ந்து பணியாற்றும்: டிரம்ப் மகள் இவாங்கா

    இருநாடுகளின் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக இந்தியாவும், அமெரிக்காவும் தொடர்ந்து பணியாற்றும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவாங்கா தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    ஐதராபாத்தில் நடைபெற உள்ள தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் இந்தியா வரவுள்ளார். 

    சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு வரும் 28-ம் தேதி ஐதராபத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். அமெரிக்க தொழில் முனைவோர் குழுவுக்கு இவர் தலைமை தாங்கி அழைத்து வருகிறார். 

    இந்த மாநாட்டில் 170 நாடுகளில் இருந்து சுமார் 1,500க்கு மேற்பட்ட தொழில் முனைவோர் கலந்து கொள்ள உள்ளனர். இதில் அமெரிக்காவில் இருந்து மட்டும் அமெரிக்கவாழ் இந்தியர்கள் உள்பட 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

    சர்வதேச அளவில் பொருளாதார மேம்பாட்டைப் பற்றியும், தொழில் முனைவதில் பெண்களின் பங்கு பற்றியும் இந்த மாநாட்டின் நோக்கமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. இவாங்கா டிரம்ப் வருகையையொட்டி ஐதராபாத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. 

    இந்நிலையில், அதிபர் டிரம்ப் மகள் இவாங்கா நேற்று வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், உள்ளடக்கிய வளர்ச்சிக்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்.  இந்திய பயணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்திய பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்திக்க மறுபடியும் ஆவலாக இருக்கிறேன்.

    இந்த தொழில் முனைவோர் மாநாட்டில் முதல் முறையாக அதிகளவில் பெண்கள் கலந்து கொள்ள உள்ளது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இதில் பங்கேற்க உள்ள 127 நாடுகளில் சுமார் 52.5 சதவீதத்துக்கு மேற்பட்ட பெண்கள் தொழில் முனைவோராக இருந்து வருகின்றனர்’ என தெரிவித்தார்.
    Next Story
    ×