search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜினாமா முடிவை ஒத்திவைத்த லெபனான் பிரதமர் ஹரிரி
    X

    ராஜினாமா முடிவை ஒத்திவைத்த லெபனான் பிரதமர் ஹரிரி

    பாரிஸ் நகரில் இருந்து நாடு திரும்பிய லெபனான் பிரதமர் சாட் ஹரிரி அதிபரின் வேண்டுகோளின்படி ராஜினாமா முடிவை ஒத்திவைத்துள்ளதாக இன்று குறிப்பிட்டுள்ளார்.
    பெய்ரூட்:

    லெபனான் பிரதமர் சாட் அல் ஹரிரி கடந்த 3-ம் தேதி திடீரென சவுதி அரேபியாவுக்குச் சென்றார். பின்னர் மறுநாள் தொலைக்காட்சியில் தோன்றி பேசிய அவர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக அறிவித்தார். ஆனால், தொடர்ந்து அவர் சவுதி அரேபியாவிலேயே தங்கியிருக்கிறார். பதவியை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக அவருக்கு நெருக்கமான லெபனான் அதிகாரிகள் கூறுகின்றனர்.

    ஆனால் அவரது ராஜினாமாவை லெபனான் அதிபர் மைக்கேல் ஆன் ஏற்கவில்லை. அவர் உடனடியாக நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று அதிபர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வந்தனர்.

    இதற்கிடையே ,ஹரிரிக்கு பிரான்ஸ் நாடு அழைப்பு விடுத்தது. லெபனான் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி ஹரிரியை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் முயற்சித்துவரும் நிலையில் சவுதி அரேபியாவில் இருந்து புறப்பட்ட சாட் ஹரிரி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றார்.

    22-ம் தேதி நடைபெறும் லெபனான் சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக நிச்சயமாக நாடு திரும்புவேன் என தொலைபேசி மூலம் அவர் லெபனான் அதிபரிடம் உறுதி அளித்திருந்தார்.

    இந்நிலையில், சாட் ஹரிரி இன்று லெபனான் தலைநகர் பெய்ருட் வந்தடைந்தார். லெபனான் அதிபர் மைக்கேல் ஆன்-ஐ சந்தித்த அவர் தனது ராஜினாமா தொடர்பாக விவாதித்தார். இவ்விவகாரம் தொடர்பாக தீவிரமாக ஆலோசிக்க வேண்டியுள்ளதாக அதிபர் தெரிவித்ததால் அதிபரின் வேண்டுகோளின்படி ராஜினாமா முடிவை ஒத்திவைத்துள்ளதாக ஹரிரி குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×