search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராபர்ட் முகாபே ராஜினாமா: ஜிம்பாப்வே வீதிகளில் மக்கள் ஆடிப்பாடி கொண்டாட்டம்
    X

    ராபர்ட் முகாபே ராஜினாமா: ஜிம்பாப்வே வீதிகளில் மக்கள் ஆடிப்பாடி கொண்டாட்டம்

    ஜிம்பாப்வேயில், அதிபர் ராபர்ட் முகாபே ராஜினாமா அறிவிப்பை தொடர்ந்து மக்களிடையே மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டது. தேசிய கொடியை அசைத்தபடி உற்சாக மிகுதியில் கரகோ‌ஷம் எழுப்பியும், ஆடிப்பாடியும் கொண்டாடினர்.
    ஹராரே:

    ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் 37 ஆண்டுகள் அதிபராக இருந்தவர் ராபர்ட் முகாபே. சர்வாதிகார போக்குடன் செயல்பட்ட அவரிடம் இருந்து கடந்த 15-ந்தேதி அதிரடி நடவடிக்கையின் மூலம் ராணுவம் ஆட்சியை பறித்தது.

    அதை தொடர்ந்து அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவரை பதவி விலகும்படி ராணுவமும், எதிர்க்கட்சி தலைவர்களும் வலியுறுத்தினர். வீதிகளில் இறங்கி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் அதை அவர் கண்டுகொள்ளவில்லை.

    எனவே, அவரை அதிபர் பதவியில் இருந்து நீக்க கண்டன தீர்மானம் நிறைவேற்ற பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நேற்று நடந்தது. இந்த நிலையில் ராபர்ட் முகாபே அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

    அதற்கான அறிவிப்பை சபாநாயகர் ஜேக்கப் முடன்டா எம்.பி.க்களிடையே அறிவித்தார். முகாபேயின் ராஜினாமா உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்தார்.

    முகாபேயின் பதவி நீக்கத்தை அறிய ஹராரேயின் பாராளுமன்றம் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.



    இந்தநிலையில் ராஜினாமா அறிவிப்பை தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்களிடையே மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டது. ஜிம்பாப்வே தேசிய கொடியை அசைத்தபடி உற்சாக மிகுதியில் கரகோ‌ஷம் எழுப்பினர். ஆடிப்பாடி கொண்டாடினர். வாகனங்களின் ‘ஹாரன்களை’ ஒலித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    டெலிவி‌ஷனில் ராஜினாமா குறித்த செய்தி அறிவிக்கப்பட்டதும் ஜிம்பாப்வேயில் அனைத்து கிராமம் மற்றும் நகர பகுதி மக்கள் தெருக்களில் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறியபடி ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொதுமக்கள் மட்டுமின்றி ஜிம்பாப்வேயின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களும் முகாபே ராஜினாமா குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், இது நாட்டின் மிகப்பெரிய நல்ல தருணம் என்றும் வர்ணித்தனர். பலர் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.



    ஜிம்பாப்வேயின் புதிய அத்தியாயம் தொடங்கியது. இனி சுதந்திரமான நேர்மையான முறையில் அதிபர் தேர்தல் நடக்கும் என எதிர்க்கட்சி தலைவர் மோர்கன் ஸ்வான்கிரி தெரிவித்துள்ளார். கொடுங்கோலனை அகற்றிவிட்டோம். அதே நேரத்தில் கொடுங்கோன்மை இன்னும் விலகவில்லை என முக்கிய எதிர்க்கட்சி தலைவர் டேவிட் கால்பர்ட் டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

    முகாபேயின் 37 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில் ஜிம்பாப்வேயின் புதிய அதிபராக எம்மர்சன் நங்காக்வே பதவி ஏற்க உள்ளார். அவர் இன்று அல்லது நாளை (23-ந்தேதி) பதவி ஏற்பார் என ஆளும் ‘சனா பி.எப்’ கட்சி தெரிவித்துள்ளது.

    எம்மர்சன் நங்காக்வா முகாபே அரசின் துணை அதிபராக இருந்தார். கடந்த மாதம் இவரை முகாபே நீக்கினார். தனக்கு பிறகு மனைவி கிரேஸ் மருபுவை அதிபராக்க திட்டமிட்டார். இதனால் அதிருப்தி அடைந்த ராணுவம் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றி புதிய அரசு அமைய வழிவகுத்தது.
    Next Story
    ×