search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் நிதி மந்திரியை குற்றவாளியாக அறிவித்தது ஊழல் தடுப்பு நீதிமன்றம்
    X

    பாகிஸ்தான் நிதி மந்திரியை குற்றவாளியாக அறிவித்தது ஊழல் தடுப்பு நீதிமன்றம்

    பாகிஸ்தான் நிதி மந்திரி இஷாக் டர் இன்று ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆஜராக தவறியதால் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அவரது பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த கடந்த மே மாதம் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    கூட்டு புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கையை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், நவாஸ் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி, அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி அவர் பதவியை விட்டு விலகினார்.

    அவர்மீது விரிவான விசாரணை நடத்துமாறும், ஆறு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

    இதேபோல், பாகிஸ்தான் நிதி மந்திரிக்கு இஷாக் டர் என்பவருக்கு எதிராகவும் வருமானத்துக்கு அதிகமாக 83 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.



    பாகிஸ்தான் தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இந்த வழக்கின் முதல் விசாரணைக்கு ஆஜராக தவறிய இஷாக் டர், கடந்த அக்டோபர் 23-ம் தேதி உள்பட 7 முறை விசாரணைக்கு ஆஜரானார்.

    பின்னர் நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின்போது இஷாக் டர் ஆஜராகவில்லை. நீதிபதி முஹம்மது பஷீர் முன்னர் அவரது வழக்கறிஞர் காஜா ஹாரிஸ், ‘மத்திய ஆசியா பிராந்திய பொருளாதார கூட்டுறவு மாநாட்டில் பங்கேற்பதற்காக தஜகிஸ்தான் நாட்டில் உள்ள துஷான்பே நகருக்கு சென்ற இஷாக் டர் அங்கிருந்து ஜெத்தா நகருக்கு சென்றுவிட்டதாக குறிப்பிட்டார்.

    ஜெத்தாவில் இருந்து சிகிச்சைக்காக அவர் லண்டன் செல்ல வேண்டியுள்ளதால் இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி மறுவிசாரணையின்போது இஷாக் டர் நேரில் ஆஜராக வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். மேலும், இஷாக் டர்-ருக்கு சொந்தமான சொத்துகளை முடக்கி வைக்கவும் உத்தரவிடப்பட்டது.

    இவ்வழக்கு கடந்த 14-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது இஷாக் டர் ஆஜராகவில்லை. எனவே, இஷாக் டர்-ஐ கைது செய்து ஆஜர்படுத்துமாறு சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு அவர் எப்போது வந்தாலும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

    இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி முஹம்மது பஷீர் முன்னர் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வெளிநாட்டில் இஷாக் டர் சிகிச்சை பெற்று வருவதால் நேரில் ஆஜராக விலக்கு அளிக்ககோரி அவரது சார்பில் ஆஜரான வக்கீலின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.

    (குற்ற உணர்வுடன் வழக்குகளை நேரில் ஆஜராகி எதிர்கொள்ள தயங்கும்) இஷாக் டர்-ஐ அறிவிக்கப்பட்ட குற்றவாளி எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.

    மேலும், இஷாக் டர்-ருக்கு ஜாமின் அளித்திருந்த அஹமது அலி குடூசி, கோர்ட்டில் உத்தரவாதம் அளித்தபடி விசாரணைக்கு இஷாக் டர்-ஐ ஆஜர்படுத்த தவறியதால் அஹமது அலி குடூசி செலுத்தி இருந்த ஜாமின் தொகையான 50 லட்சம் ரூபாயை இந்த கோர்ட் ஏன் பறிமுதல் செய்ய கூடாது? என வரும் 24-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி இவ்வழக்கின் மறுவிசாரணையை டிசம்பர் 4-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
    Next Story
    ×