search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிம்பாப்வே ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து ராபர்ட் முகாபே நீக்கம்?
    X

    ஜிம்பாப்வே ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து ராபர்ட் முகாபே நீக்கம்?

    ஜிம்பாப்வே அதிபர் பதவிக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்ட ராபர்ட் முகாபே ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
    ஹராரே:

    ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ராபர்ட் முகாபே (93) 1980-ம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வருகிறார். அதிகாரத்தை தனது வசம் கொண்டு வர முயற்சிப்பதாக கூறி அந்நாட்டு துணை அதிபர் எம்மர்சன் நாங்காவாவை முகாபே பதவி நீக்கம் செய்தார்.

    இதனால், ஆளும் ஷானு - பி.எப் கட்சியில் பிளவு ஏற்பட்டது. ராணுவ தலைமை தளபதி ஜெனரல் சிவெங்கா, நீக்கப்பட்ட துணை அதிபர் நாங்காவாவுக்கு ஆதரவாக நின்றார். இதனால், அந்நாட்டு அரசியலில் குழப்பநிலை ஏற்பட்டது.

    இதனையடுத்து, கடந்த 15-ம் தேதி தலைநகர் ஹரரேவை ராணுவ பீரங்கிகள் சுற்றி வளைத்தன. அதிகளவிலான ராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் தலைநகரை சுற்றி குவிக்கப்பட்டனர். ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியதாக செய்திகள் வெளியாகின.

    அதிபர் முகாபே மற்றும் அவரது குடும்பத்தினர் ராணுவத்தின் கண்காணிப்பில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அதிபர் முகாபேவுக்கு எதிராக ராணுவம் கிளர்ந்துள்ளதற்கு அந்நாட்டு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். முகாபே வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் கவனம் செலுத்தவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    அதிபர் மாளிகைக்கு வெளியே திரண்ட ஆயிரக்கணக்கானோர் முகாபேவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

    இதற்கிடையே, அதிபர் முகாபேவை பதவி நீக்கம் செய்து நாடு கடத்துவது குறித்து மாகாண ஆளுநர்க மற்றும் ஆளும்கட்சியின் அவசர கூட்டம் ஹராரே நகரில் இன்று நடைபெற்றது.

    முகாபேவை ஆட்சியை விட்டு நீக்க வேண்டும் என கடந்த ஒன்றரை ஆண்டாக பிரசார இயக்கம் நடத்தி வந்த ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் கிறிஸ் முட்ஸ்வாங்வா இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

    ஆலோசனை கூட்டத்துக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த கிறிஸ் முட்ஸ்வாங்வா, ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து முகாபே நீக்கப்படுவார் என தெரிவித்தார். நாட்டை விட்டு கண்ணியமான முறையில் வெளியேறுவது தொடர்பாக ராணுவ தளபதியுடன் ராபர்ட் முகாபே சமரசம் பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    ஆளும்கட்சியின் மகளிர் அணி தலைவர் பதவியில் இருந்து முகாபேவின் மனைவி கிரேஸ் நீக்கப்படுவார். அவர்கள் இந்த  
    நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
    Next Story
    ×