search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊழல் வழக்குகள் எதிரொலி: நவாஸ் ஷெரீப், பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை?
    X

    ஊழல் வழக்குகள் எதிரொலி: நவாஸ் ஷெரீப், பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை?

    ஊழல் வழக்குகளின் காரணமாக நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை விதிப்பதற்கான நடவடிக்கை தொடங்கி உள்ளது.
    இஸ்லாமாபாத்:

    ஊழல் வழக்குகளின் காரணமாக நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை விதிப்பதற்கான நடவடிக்கை தொடங்கி உள்ளது.

    நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் 1990-களில் இரு முறை பிரதமராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்து, சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக ‘பனாமா ஆவணங்கள்’ கூறின.

    ‘பனாமா கேட்’ ஊழல் என்று அழைக்கப்பட்ட இந்த ஊழலில் நவாஸ் ஷெரீப் பதவியை பறிக்குமாறு அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான், வக்கீல் தாரிக் ஆசாத், ஜமாத் இ இஸ்லாமி (ஜி) தலைவர் சிராஜூல் ஹக், அவாமி முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் ரஷீத் அகமது ஆகியோர் வழக்கு தொடுத்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி அதிரடியாக உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அவர் பிரதமர் பதவியை விட்டு விலகினார்.

    மேலும், நவாஸ் ஷெரீப், அவரது மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ், மருமகன் ஓய்வு பெற்ற கேப்டன் முகமது சப்தார் ஆகியோர் மீது தேசிய பொறுப்புடைமை அமைப்பு ஊழல் வழக்குகள் தொடுத்து, அந்த வழக்குகளின் விசாரணையை பொறுப்புடைமை கோர்ட்டு 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவில் கூறியது.

    அதைத் தொடர்ந்து அவர்கள் மீது 3 ஊழல் வழக்குகள், இஸ்லாமாபாத் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

    அவற்றில் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க கோரி நவாஸ் ஷெரீப், சுப்ரீம் கோர்ட்டு வரை போயும் பலன் இல்லை.

    இந்த நிலையில், நவாஸ் ஷெரீப், மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ், மருமகன் ஓய்வு பெற்ற கேப்டன் முகமது சப்தார் ஆகியோரை பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை தேசிய பொறுப்புடைமை அமைப்பின் லாகூர் பிரிவு தொடங்கி உள்ளது.

    இதுபற்றி இஸ்லாமாபாத் தேசிய பொறுப்புடைமை அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் பெயர், நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டால், பயண கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்” என்று குறிப்பிட்டார்.

    ஏற்கனவே கோர்ட்டு விசாரணையை தவிர்க்கிற வகையில், ஆஜராகாமல் இருந்து வந்த நவாஸ் ஷெரீப்பின் மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ் ஆகிய இருவரும் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது நினைவுகூரத்தக்கது.

    பாகிஸ்தானை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளோர் பட்டியலில் நவாஸ் ஷெரீப்பையும், அவரது குடும்பத்தினரையும் சேர்ப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையை அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×