search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிம்பாப்வே தெருக்களில் துப்பாக்கி சூடு: அதிபர் ராபர்ட் முகாபே கதி என்ன?
    X

    ஜிம்பாப்வே தெருக்களில் துப்பாக்கி சூடு: அதிபர் ராபர்ட் முகாபே கதி என்ன?

    ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளதால் ஜிம்பாப்வே தெருக்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் அதிபர் ராபர்ட் முகாபே மற்றும் அவருடைய மனைவி கதி என்ன? என்று தெரியவில்லை.
    ஹராரே:

    ஆப்பிரிக்க கண்டத்தில் தென் ஆப்பிரிக்காவை ஒட்டி உள்ளது ஜிம்பாப்வே நாடு. இங்கிலாந்து ஆட்சியின் கீழ் இருந்த இந்த நாடு 1980-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. அதன் முதல் பிரதமராக ராபர்ட் முகாபே தேர்வு செய்யப்பட்டார். அதில் இருந்து 37 ஆண்டுகளாக அவர்தான் ஆட்சியில் இருந்து வருகிறார். இடையில் பிரதமர் என்ற பதவியை அதிபர் என்று மாற்றி கொண்டார்.

    அவருக்கு தற்போது 93 வயது ஆகிறது. அவருடைய பதவி காலம் முடிந்து அடுத்து அதிபர் தேர்தல் விரைவில் நடத்த வேண்டும்.

    அடுத்த அதிபராக துணை அதிபர் எமர்சன் மனன்காக்வா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராபர்ட் முகாபே தனது மனைவி 52 வயதான கிரேஸ் முகாபேயை அதிபராக்க முயற்சித்தார். இதற்கு வசதியாக துணை அதிபர் எமர்சன் மனன்காக்வாவை பதவியில் இருந்து நீக்கினார்.

    இதனால் ஜிம்பாப்வேயில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அதிபர் ராபர்ட் முகாபேவுக்கு எதிராக மக்களில் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் திடீரென ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அந்த நாட்டின் டெலிவி‌ஷன் நிலையத்தை முதலில் ராணுவம் கைப்பற்றியது.

    இதை தொடர்ந்து ராணுவ தளபதி கான்ஸ்டன்டினோ டெலிவி‌ஷனில் தோன்றி உரை நிகழ்த்தினார். அதில் ஆட்சியை ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து விட்டதாக கூறிய அவர், மக்கள் அதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    ஜிம்பாப்வே பாராளுமன்றம், அதிபரின் மாளிகை ஆகியவை ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதிபர் ராபர்ட் முகாபேவை வீட்டு காவலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ராபர்ட் முகாபேவிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.

    இதற்கிடையே ராபர்ட் முகாபே தங்கி உள்ள பகுதி மற்றும் அதிகாரிகள் வசிக்கும் பகுதி உள்ளிட்ட பகுதியிலும், ஹராரே நகரின் வடக்கு பகுதியிலும் துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதாக அங்கிருந்து தகவல் ஒன்று வந்துள்ளன. தெருக்களிலும் துப்பாக்கி சூடு நடந்ததாக கூறப்பட்டது. எனவே, ராணுவத்துக்கும், அதிபரின் ஆதரவு படைகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

    ராபர்ட் முகாபேவிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் வராததால் அவர் மற்றும் அவருடைய மனைவி கதி என்ன? என்று தெரியவில்லை.

    ஆனால், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா, ராபர்ட் முகாபேவிடம் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அவர் நலமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

    ஜிம்பாப்வே சம்பவம் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை என்று ஆப்பிரிக்க யூனியன் தலைவர் ஆல்பா கோண்ட் தெரிவித்து இருக்கிறார். ஆனால், ஜிம்பாப்வே ராணுவ தளபதி நாங்கள் ஆட்சியை கவிழ்க்கவில்லை. தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டு இருக்கிறோம். நாட்டுக்கு எதிராக இருப்பவர்களை களை எடுத்து வருகிறோம். இன்னும் சில நாட்களில் நிலைமை சீரடைந்து விடும் என்று கூறி இருக்கிறார்.

    ராணுவமே ஆட்சியை நடத்துமா? அல்லது ஜனநாயக முறைப்படி ராணுவம் தேர்தல் நடத்துமா? என்பது இனி மேல் தான் தெரியவரும்.
    Next Story
    ×