search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மியான்மர் கலவரத்துக்கு காரணமான தனிநபர்கள் மீது தடை விதிக்க அமெரிக்கா முடிவு
    X

    மியான்மர் கலவரத்துக்கு காரணமான தனிநபர்கள் மீது தடை விதிக்க அமெரிக்கா முடிவு

    மியான்மர் நாட்டில் ரக்கினே மாநிலத்தில் உண்டான கலவரம் மற்றும் வன்முறைக்கு காரணமான தனிநபர்கள் மீது தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்யும் என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.
    நய்பிடா:

    அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் ஒருநாள் பயணமாக இன்று மியான்மர் நாட்டின் தலைநகரான மணிலா வந்தடைந்தார். அந்நாட்டின் ராணுவ அதிகாரிகள், ரோகிங்கியா மக்கள் என பல தரப்பினரையும் அவர் சந்தித்து பேசினார். இதனையடுத்து, அந்நாட்டின் தலைமை ஆலோசகராக இருக்கும் ஆங் சான் சூகியுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது, ‘ஒட்டுமொத்தமாக மியான்மர் நாட்டின்மீது பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் என அறிவுறுத்தல்கள் வருகின்றன. ஆனால், இது அதற்கான நேரம் இல்லை. நடந்த சம்பவங்கள் கொடூரமானவை. மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக நம்பகமான விசாரணை வேண்டும்’ என டில்லர்சன் வலியுறுத்தினார்.

    ஆனால், இந்த வன்முறைக்கு காரணமான தனிநபர்கள் மீது தடை விதிப்பது தொடர்பாக அமெரிக்க அரசு பரிசீலனை செய்யும் என்று அவர் உறுதி அளித்தார். அப்படி தனிநபர்களுக்கு எதிராக தடை விதிக்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் நாங்கள் ஏற்றுக்கொள்ள தக்கவகையில் நம்பக்கத்தன்மை கொண்ட உரிய ஆதாரங்கள் தேவைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றின் வழியாக படகில் செல்லும் பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். மியான்மரில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகளின்மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான ராணுவ வேட்டை தீவிரம் அடைந்தது.

    மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டைநாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். ரக்கினே மாநிலத்துக்குள் பத்திரிகையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×