search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரான் நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 530 ஆக உயர்ந்தது: இந்த ஆண்டின் மிகப்பெரிய சோகம்
    X

    ஈரான் நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 530 ஆக உயர்ந்தது: இந்த ஆண்டின் மிகப்பெரிய சோகம்

    ஈரான் - ஈராக் எல்லைப்பகுதியில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 530-ஆக அதிகரித்துள்ளது.
    டெக்ரான்:

    ஈரான் மற்றும் ஈராக் நாடுகளின் எல்லையிலும் நேற்று 7.3 ரிக்டரில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. ஈராக் குர்திஸ் தானில் ஹாலாப்ஜாவை மையமாக கொண்டு இந்த பூகம்பம் உருவானது. இதில் மேற்கு ஈரானில் உள்ள சார்போல்-இ-‌ஷகாப் நகரில்தான் பலத்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது கெர்மான்ஷா மாகாணத்தில் ஈராக் எல்லையில் உள்ளது.

    இங்குள்ள முக்கியமான ஆஸ்பத்திரி மிக கடுமையான சேதம் அடைந்தது. இது இடிந்ததில் அங்கு தங்கி சிகிச்சை பெற்ற ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தனர். இவை தவிர மேலும் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. இடிபாடுகளில் சிக்கி தவிப்போரை மீட்கும் பணியில் ராணுவ வீரர்களும், எல்லை படை வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக மீட்பு படையினரும் உள்ளனர்.

    ஈரானை ஒப்பிடுகையில் ஈராக்கில் பாதிப்புகள் மிக குறைவு. இங்கு எல்லைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் எல்லையில் உள்ள அணை சேதம் அடைந்துள்ளது. இது உடையும் அபாய நிலையில் உள்ளது. இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அங்கிருந்து இறந்தவர்களின் உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.



    வீடுகளை இழந்து சாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் கடும் குளிரில் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி ஈரான் மற்றும் ஈராக் பூகம்பத்தில் பலியானோர் எண்ணிக்கை 530 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஈரானில் மட்டும் 500 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் எல்லையில் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களும், எல்லைப் பாதுகாப்பு படையினரும் அடங்குவர். ஈரானில் 30 பேர் பலியாகி உள்ளனர். இங்கும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பூகம்பத்தின் போது கட்டிட இடிபாடுகளில் சிக்கி 7 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த ஆண்டு சர்வதேச அளவில் நடந்த பேரிடர் சம்பவங்களில் இந்த பூகம்பத்தில்தான் அதிக உயரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×