search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறையில் வாடும் இந்தியர் குல்பூஷன் ஜாதவை சந்திக்க மனைவிக்கு அனுமதி: பாக். தகவல்
    X

    சிறையில் வாடும் இந்தியர் குல்பூஷன் ஜாதவை சந்திக்க மனைவிக்கு அனுமதி: பாக். தகவல்

    பாகிஸ்தான் சிறையில் வாடி வரும் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவை பார்க்க அவரது மனைவிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என பாகிஸ்தான் வெளியுறவு துறை அறிவித்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்புபூஷன் ஜாதவ் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உளவு பார்த்ததாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த நிலையில் ராணுவ கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியிருந்தது. ஆனால், குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது.

    ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஜாதவ் மீதான குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை, ஆதாரமற்றவை, பாகிஸ்தானால் தவறாக சித்தரிக்கப்பட்டவை என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருந்தார்.  

    இதற்கிடையே, குல்பூஷன் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரிய மனுவை பாகிஸ்தான் ராணுவ தளபதியும், ராணுவ கோர்ட்டும் நிராகரித்து விட்டது.

    இந்நிலையில், குல்பூஷன் ஜாதவை அவரது மனைவி சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவை அவரது மனைவி சந்திக்க உள்ளார். இதற்கான அனுமதியை பாகிஸ்தான் அரசு வழங்கியுள்ளது என கூறினர்.
    Next Story
    ×