search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிரியா: கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 75-ஆக உயர்வு
    X

    சிரியா: கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 75-ஆக உயர்வு

    சிரியாவில் டேர் எஸ்ஸர் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 75-ஆக அதிகரித்துள்ளது.

    பெய்ரூட்:

    சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் இதுவரை அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளை அழிப்பதில் உலக நாடுகள் சிரியாவுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இதுபோன்ற தாக்குதல்களில் சில சமயம் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பயந்து பொதுமக்கள் வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், சிரியாவின் கிழக்கு டேர் எஸ்ஸர் நகரில் புலம் பெயர்ந்த பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்று கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தினர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய இந்த கொலைவெறி தாக்குதலில் சுமார் 75 பேர் உயிரிழந்துள்ளதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு குழு தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

    கடந்த அக்டோபர் 12-ம் தேதி ஹசகே பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய கார் வெடி குண்டு தாக்குதலில் குர்திஷ் படையினர் மற்றும் பொதுமக்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.
    Next Story
    ×