search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீன அதிபர் ஜின்பிங் பதவி மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு - கட்சியின் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்து பெயர் சேர்ப்பு
    X

    சீன அதிபர் ஜின்பிங் பதவி மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு - கட்சியின் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்து பெயர் சேர்ப்பு

    சீன அதிபர் ஜின்பிங் மேலும் 5 ஆண்டுகள் பதவி வகிப்பார். கட்சியின் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்து அவரது பெயர் சேர்க்கப்பட்டது. மாசேதுங், டெங் வரிசையில் அவர் சேர்ந்தார்.
    பீஜிங்:

    சீன அதிபர் ஜின்பிங் மேலும் 5 ஆண்டுகள் பதவி வகிப்பார். கட்சியின் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்து அவரது பெயர் சேர்க்கப்பட்டது. மாசேதுங், டெங் வரிசையில் அவர் சேர்ந்தார்.

    சீன அதிபராக ஜின்பிங் (வயது 64) கடந்த 2012-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 15-ந் தேதி பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து அவர் தன்னை ஒரு வலிமை வாய்ந்த தலைவராக உருவாக்கிக்கொண்டார். நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்வதோடு நில்லாமல், ஊழலுக்கு எதிராக ஒரு யுத்தமே நடத்தி வருகிறார். ஊழலில் ஈடுபடுகிறவர்கள் யாராக இருந்தாலும், என்ன பதவி வகித்தாலும் தயவு தாட்சண்யமின்றி நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார்.

    இதன் காரணமாக மக்களின் ஆதரவு பெற்ற தலைவராக அவர் விளங்குகிறார். அமெரிக்காவுக்கு பலத்த போட்டியாக திகழ்கிறார். கட்சியில் அவருக்கு எதிர்ப்புக்குரலே இல்லை.

    இந்த நிலையில் சீனாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிற சீன கம்யூனிஸ்டு கட்சியின் ஒரு வார கால தேசிய மாநாடு நேற்று நிறைவு அடைந்தது. இந்த 19-வது மாநாட்டின், கடைசி நாள், ஜின்பிங்குக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாளாக மாறிவிட்டது.

    அவர் சீனாவில் மேலும் 5 ஆண்டுகள் அதிபராக பதவியில் தொடர்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

    இதேபோன்று சீன கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்து, ஜின்பிங்கின் “புதிய சகாப்தத்துக்கான சீன பண்புநலன்களுடனான சோசலிசம்” என்னும் சித்தாந்தம் சேர்க்கப்பட்டது.

    இது தொடர்பாக மாநாட்டில் பங்கேற்றிருந்த 2,300 பிரதிநிதிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    “யாருக்கேனும் இதை சீன கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் சாசனத்தில் சேர்ப்பதில் ஆட்சேபம் இருக்கிறதா?” என்று கேட்கப்பட்டபோது, அனைவரும் ஒருமித்த குரலில், “யாருக்கும் ஆட்சேபம் இல்லை” என்று பதில் அளித்ததாக, மாநாட்டில் செய்தி சேகரிக்க சென்றிருந்த செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

    “நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் கைகளை உயர்த்தலாம்” என்று ஜின் பிங் அறிவித்தபோது, யாரும் அவ்வாறு செய்யவில்லை, உடனே அவர், “ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது, சீன மக்களுக்கும், நாட்டுக்கும் ஒரு மாபெரும், ஒளிமயமான எதிர்காலம் வரப்போகிறது” என்று மகிழ்ச்சி பொங்க குறிப்பிட்டார்.

    மேலும், “இந்த மாபெரும் தருணத்தில், நாம் மேலும் தன்னம்பிக்கை பெற்றிருக்கிறோம். பெருமை கொண்டுள்ளோம். அதே நேரத்தில், நமக்கு மிகப்பெரிய பொறுப்பு காத்திருக்கிறது என்பதையும் நாம் உணர்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

    சீன கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் சாசனத்தில் ஜின்பிங்கின் பெயரும், அவரது சித்தாந்தமும் இடம் பெற்றுவிட்டதால் அவர் கட்சியின் நிறுவனரான மாசேதுங், அவரை பின்தொடர்ந்து வந்த டெங் ஜியாவோபிங் ஆகியோரின் வரிசையில் இடம் பிடித்து விட்டார்.

    அடுத்த 5 ஆண்டுகளுக்கு கட்சியை வழிநடத்திச்செல்வதற்கு புதிதாக ஒரு மத்திய குழுவை சீன கம்யூனிஸ்டு கட்சி மாநாடு தேர்வு செய்துள்ளது. இந்த கமிட்டி, கட்சியின் அரசியல் விவகார குழுவை தேர்வு செய்யும். இந்த அரசியல் விவகார குழுதான், ஆளும் கவுன்சிலின் அதிகாரமிக்க அமைப்பாக இருக்கும்.

    சீன கம்யூனிஸ்டு கட்சியின் அதிகார வரிசையில் முதலிடத்தை அதிபர் ஜின்பிங்கும், இரண்டாம் இடத்தை பிரதமர் லீ கெகியாங்கும் வகிப்பார்கள். 
    Next Story
    ×