search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற 5 முன்னாள் ஜனாதிபதிகள்
    X

    அமெரிக்காவில் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற 5 முன்னாள் ஜனாதிபதிகள்

    புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டித் தருவதற்காக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான ஒபாமா, ஜார்ஜ் டபிள்யு புஷ், பில் கிளிண்டன், ஜார்ஜ் எச்.டபிள்யு. புஷ், ஜிம்மி கார்ட்டர் ஆகிய 5 பேரும் மேடையில் ஒன்றாக தோன்றினர்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவை இந்த ஆண்டு ஹார்வே, இர்மா, மரியா புயல்கள் தாக்கி புரட்டிப்போட்டன. இந்தப் புயல்களால் பெருத்த பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் ஏற்பட்டன.

    இந்தப் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டித் தருவதற்காக அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், அங்கு டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான ஒபாமா, ஜார்ஜ் டபிள்யு புஷ், பில் கிளிண்டன், ஜார்ஜ் எச்.டபிள்யு. புஷ், ஜிம்மி கார்ட்டர் ஆகிய 5 பேரும் மேடையில் ஒன்றாக தோன்றினர். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இவர்களில் ஜார்ஜ் டபிள்யு புஷ், ஜார்ஜ் எச்.டபிள்யு. புஷ் ஆகிய இருவரும் குடியரசு கட்சியினர். மற்ற 3 பேரும் ஜனநாயக கட்சியினர். பொது நலனுக்காக அவர்கள் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்று சேர்ந்தது மக்களை கவர்ந்தது.



    ‘தி ஒன் அமெரிக்கா அப்பீல்’ என்ற இந்த இசை நிகழ்ச்சி மூலம் இதுவரை 31 மில்லியன் டாலர் (சுமார் ரூ.201 கோடி) வசூலாகி உள்ளது.

    இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்காக ஒபாமா பதிவு செய்த செய்தி ஒன்றை ஏற்கனவே வெளியிட்டார். அதில் அவர், “முன்னாள் ஜனாதிபதிகள் என்ற முறையில், சக அமெரிக்கர்கள் (புயல் பாதிப்பில் இருந்து) மீண்டு வர நாங்கள் உதவ விரும்பினோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    5 முன்னாள் ஜனாதிபதிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்கவில்லை. இருந்தபோதும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு தன் மனம் நிறைந்த பாராட்டுகளை தெரிவித்து செய்தி வெளியிட்டிருந்தார். 
    Next Story
    ×