search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘தலாய்லாமாவை சந்தித்தால், அது மிகப்பெரிய குற்றம்’: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
    X

    ‘தலாய்லாமாவை சந்தித்தால், அது மிகப்பெரிய குற்றம்’: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை

    தலாய்லாமாவை சந்தித்தால் அது மிகப்பெரிய குற்றம் என்று உலக தலைவர்களை சீனா எச்சரித்துள்ளது.
    பீஜிங்:

    தலாய்லாமாவை சந்தித்தால் அது மிகப்பெரிய குற்றம் என்று உலக தலைவர்களை சீனா எச்சரித்துள்ளது.

    திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா (வயது 82). ஆனால் இவரை பிரிவினைவாதியாகத்தான் சீனா பார்க்கிறது. சீனாவிடம் இருந்து திபெத்தை பிரித்துக்கொண்டு செல்வதற்கு இவர் முயற்சிக்கிறார் என்பது சீனாவின் குற்றச்சாட்டு.

    ஆனால் உலக தலைவர்கள் பலரும் தலாய்லாமாவை ஆன்மிகவாதியாக பார்க்கிறார்கள். பலரும் அவரை சந்திக்கிறார்கள். இது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. தலாய்லாமாவை உலக தலைவர்கள் யாரும் சந்திக்க கூடாது, அதே நேரத்தில் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக திபெத்தை கருத வேண்டும் என்பது சீனாவின் எதிர்பார்ப்பு.

    தலாய்லாமா, திபெத்தில் சீன ஆளுகைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, அந்த முயற்சி வெற்றி அடையாத நிலையில், 1959-ம் ஆண்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

    அவர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாசலபிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்வதற்கு சீனா இப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் தலாய்லாமா, அருணாசலபிரதேசத்தில் 9 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோதும், இந்தியாவிடம் சீனா எதிர்ப்பை பதிவு செய்தது. ஆனால் இந்தியா அதை புறந்தள்ளியது.

    இந்தநிலையில், சீன கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், துணை மந்திரியுமான சாங் யூஜியோங், சீன கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டுக்கு இடையே கூறியதாவது:-

    எந்தவொரு நாடோ அல்லது எந்தவொரு நபரின் அமைப்போ தலாய்லாமாவை சந்திக்க ஒப்புக்கொண்டால், அது சீன மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் மாபெரும் குற்றம் ஆகும்.

    தலாய்லாமா விவகாரத்தை பொருத்தவரையில், வெளிநாடுகள் மற்றும் உலக தலைவர்களின் வாதங்களை சீனா ஏற்காது. ஆன்மிக தலைவர் என்ற வகையில் அவரை சந்திப்பதையும் ஏற்க மாட்டோம்.

    14-வது தலாய்லாமா, வாழும் புத்தர் என்று வரலாற்றால் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவர் மதத்தின் பெயரால் அரசியல்வாதியாகத்தான் உள்ளார் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    அவர் சொந்த நாட்டுக்கு துரோகம் செய்து விட்டு 1959-ம் ஆண்டு வேறு நாட்டுக்கு சென்று விட்டார். அவர் நாடு கடந்த அரசாங்கம் என்று அவரால் சொல்லப்படுகிற ஒன்றை நிறுவி உள்ளார்.

    அந்த அரசாங்கத்தின் ஒரே செயல் திட்டம் சீனாவில் இருந்து திபெத்தை தனியாக பிரித்தெடுப்பது மட்டும்தான்.

    தலாய்லாமா குழுவினரை சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு அரசாங்கமும் அங்கீகரிக்கவும் இல்லை. சில நாடுகள் மட்டும் அவரை அழைக்கின்றன. சில தலைவர்கள் மட்டுமே அவரை சந்திக்கின்றனர்.

    சில நாடுகள் அவர் அரசியல் தலைவர் அல்ல, ஆன்மிக தலைவர்; அரசியல் தலைவர் என்ற வகையில் தங்களது அதிகாரிகள் அவரை சந்திக்கவில்லை என்று கூறுகின்றன.

    ஆனால் இதில் உண்மையில்லை. இது சரியும் இல்லை.

    சீனாவுடனான உறவுகளுக்காக, நட்புக்காக அதன் இறையாண்மையை அனைவரும் மதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×