search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு இந்தியாவிலிருந்து ஆட்களை சேர்த்த பெண் பிலிப்பைன்சில் கைது
    X

    ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு இந்தியாவிலிருந்து ஆட்களை சேர்த்த பெண் பிலிப்பைன்சில் கைது

    ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஆட்களைச் சேர்த்த பெண் பிலிப்பைன்சில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விசாரிக்க என்.ஐ.ஏ. முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு, பல்வேறு நாடுகளில் இருந்து ஆட்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்காக மக்களோடு மக்களாக கலந்திருக்கும் ஐ.எஸ். ஆதரவாளர்கள், ரகசியமாக ஆட்களை சேர்க்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

    இந்தியாவில் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவோரை தேசிய புலனாய்வு அமைப்பு கண்காணித்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஐ.எஸ். இயக்கத்தை ஆதரித்தவர்கள், அந்த இயக்கத்துக்கு ஆள் சேர்க்க முயன்றவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து, குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.



    இந்நிலையில், ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆன்லைன் மூலம் ஆட்களை சேர்த்து இளைஞர்களை மூளைச்சலவை செய்து வந்த பெண் ஒருவரை பிலிப்பைன்ஸ் அரசு கைது செய்துள்ளது. அவர் பெயர் கரேன் ஆயிஷா ஹமிதான். பிலிப்பைன்ஸ் நாட்டில் இறந்துபோன தீவிரவாத இயக்க தலைவர் முகமது ஜபார் மகீத்தின் மனைவி ஆவார்.

    ஐ.எஸ். இயக்கத்தின் சார்பாக பல்வேறு சமூக ஊடகங்கள் மூலம் இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்து ஆட்களை சேர்த்தாக ஹமிதான் மீது ஏற்கனவே புகார் இருந்தது. பல்வேறு பெயர்களில் ஆன்லைன் குரூப்களை அவர் நிர்வகித்து வந்துள்ளார். பல்வேறு நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் அவரை தேடி வந்தன. அவர் குறித்த தகவல்களைக் கேட்டு இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பும் (என்ஐஏ), பிலிப்பைன்சுக்கு கடிதம் எழுதியிருந்தது.

    பிலிப்பைன்ஸ் அரசு கேட்டுக்கொண்டபடி, ஹமிதானின் முகவரி (டீகோ ஷிலாங் கிராமம், தாகிக் நகரம், மெட்ரோ மணிலா) தொலைபேசி எண்களை என்ஐஏ வழங்கியிருந்தது. இதையடுத்து தீவிர கண்காணிப்புக்குப் பிறகு கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவர் மணிலாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கரேன் ஆயிஷா ஹமிதானுடன் தொடர்பில் இருந்தவர்களில் சிலர், இந்தியாவின் மும்பை, திருச்சி, ஐதராபாத், ஸ்ரீநகர், சோபோர், கான்பூர், கொல்கத்தா மற்றும் ஜெய்ப்பூரில் இருந்து சென்றவர்கள் என தெரியவந்துள்ளது.

    இதையடுத்து, இந்தியாவில் இதுவரை பிடிபடாமல் இருக்கும் ஐ.எஸ். ஆதரவாளர்களுடன் அவருக்கு தெடார்பு இருக்கிறதா? என்பது குறித்து விசாரிக்க என்.ஐ.ஏ. முடிவு செய்துள்ளது. இதற்கு அனுமதிக்கும்படி பிலிப்பைன்ஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. வீடியோ கான்பரன்சிங் மூலமாகவோ அல்லது நேடியாக மணிலா சென்று விசாரணை நடத்தவோ என்ஐஏ அனுமதி கேட்டிருப்பதாக தெரிகிறது.

    Next Story
    ×