search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்கா நீதிமன்றத்தில் வங்காளதேச முன்னாள் பிரதமர் சரண்
    X

    டாக்கா நீதிமன்றத்தில் வங்காளதேச முன்னாள் பிரதமர் சரண்

    ஊழல் மற்றும் அவதூறு வழக்குகள் தொடர்பாக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா டாக்கா நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமின் பெற்றார்.
    டாக்கா:

    வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா(72) மீது அந்நாட்டின் தேசிய வரைப்படத்தையும் கொடியையும் அவமதித்ததாக அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    மேலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக வங்காளதேசத்தை முன்னர் அவமதித்த நபர்களுக்கு தனது ஆட்சியின்போது மந்திரி பதவி அளித்தது மற்றும் தனது கணவரும் அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஜியாவுர் ரஹ்மான் பெயரிலான அறக்கட்டளை பணத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் செய்ததாகவும் அவருக்கு எதிரான வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.

    வங்காளதேச தேசியவாத கட்சி தலைவராக பொறுப்பு வகித்துவரும் கலிதா ஜியாவு ஊழல் வழக்கிலும், தேசியக் கொடி அவமதிப்பு வழக்கிலும் ஆஜராக தவறியதால் அவருக்கு எதிராக இரு பிடி வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

    இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக லண்டனில் தங்கியிருந்த கலிதா ஜியா நேற்று முன்தினம் நாடு திரும்பினார். பழைய டாக்கா நகரில் ஆலியா மதார்ஷா திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நீதிமன்றத்தில் இரண்டாவது வழக்கில் நேற்று அவர் ஆஜரானார்.

    கோர்ட்டுக்கு தெரிவிக்காமல் மீண்டும் வெளிநாடு செல்ல கூடாது என்னும் நிபந்தனையுடன் ஒரு லட்சம் டாக்கா ரொக்கப்பணத்தின்மீது அவருக்கு ஜாமின் அளித்த நீதிபதி, இவ்வழக்கின் விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    Next Story
    ×