search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வட கொரியாவுக்கு போர் அச்சுறுத்தல் விடுப்பது அபாயகரமானது: ஹிலாரி கிளிண்டன்
    X

    வட கொரியாவுக்கு போர் அச்சுறுத்தல் விடுப்பது அபாயகரமானது: ஹிலாரி கிளிண்டன்

    வட கொரியாவுக்கு போர் அச்சுறுத்தல் விடுப்பது அபாயகரமானது மற்றும் குறுகிய பார்வை கொண்டது என்று ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
    சியோல்:

    ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ஆயுத பரிசோதனைகளில் ஈடுபட்டு வரும் வடகொரியாவின் நடவடிக்கையால் அமெரிக்கா-வடகொரியா இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் 3-ந்தேதி வடகொரியா நடத்திய 6-வது மற்றும் மிகப்பெரிய அணு ஆயுத சோதனையும், ஜப்பானுக்கு மேலே ஏவுகணை பறக்க விட்ட சம்பவமும் சமீப காலமாக அங்கு போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.

    வடகொரியாவின் இத்தகையை அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா கடற்படை பயிற்சியை தொடங்கி உள்ளது. கொரிய தீபகற்பத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்பகுதியில் நடைபெறும் இந்த பயிற்சி வருகிற 20-ந்தேதி வரை நடக்கிறது. இதையடுத்து ஆத்திரம் அடைந்த வடகொரியா, அணு ஆயுத போர் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்று எச்சரித்தது.  வடகொரியாவின் ஐ.நா. துணை தூதர் கிம் இன் ராயோங் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

    வடகொரியாவின் செயல்பாடுகள் அமெரிக்காவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் யுன்னும் அடிக்கடி ஒருவரையொருவர் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துக்கொண்டனர். இந்த மோதல் போக்கு காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பரபரப்பான இந்த சூழலில், தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்ற மாநாடு ஒன்றில், அமெரிக்காவின் ஜனநாயக கட்சி தலைவரும், முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான ஹிலாரி கிளிண்டன் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் கூறுகையில், “வட கொரியா விவகாரத்தில் நாம் போரை நாடுவதாலும், ஆக்ரோ‌ஷமாக இருப்பதாலும் எந்த பயனும் இல்லை. அந்நாட்டுக்கு போர் அச்சுறுத்தல் விடுப்பது அபாயகரமானது. குறுகிய பார்வை கொண்டது. வடகொரியா மீதான தடையை தீவிரமாக அமல்படுத்த சீனா தனது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×