search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒசாமாவை போட்டுத்தள்ளிய பாணியில் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதலுக்கு திட்டமிட்ட அமெரிக்கா
    X

    ஒசாமாவை போட்டுத்தள்ளிய பாணியில் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதலுக்கு திட்டமிட்ட அமெரிக்கா

    ஹக்கானி தீவிரவாதிகளால் கடத்தி சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்கா - கனடா தம்பதியரை மீட்பதற்காக முன்னர் பாகிஸ்தானுக்குள் நுழைந்ததுபோல் மீண்டும் ஒரு தாக்குதலுக்கு அமெரிக்கா திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது.
    வாஷிங்டன்:

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 120 கி.மீட்டர் தூரத்தில், இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நகரம் அபோட்டாபாத். பாகிஸ்தான் அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் வசிக்கும் அபோட்டாபாத்தில் பல ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வந்த அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின்லேடன், கடந்த 2-5-2011 அன்று ஆண்டு அமெரிக்க ராணுவத்தின் 'சீல்' அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.

    அவனது சடலத்தை கடலின் நடுவே அடக்கம் செய்து விட்டதாக அமெரிக்கா அப்போது அறிவித்தது.

    இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளால் கடந்த 2012-ம் ஆண்டு கடத்தப்பட்ட அமெரிக்க-கனடா தம்பதியரை பாகிஸ்தான் ராணுவம் சமீபத்தில் மீட்ட நடவடிக்கை அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    குறிப்பாக, ஹக்கானி குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பாகிஸ்தானை கடுமையாக கண்டித்து இருந்த டிரம்ப், இது ஒரு ‘நேர்மறையான நடவடிக்கை’ என்று மனம் திறந்து பாராட்டினார்.

    அமெரிக்காவுடன் பல்வேறு வகைகளில் பாகிஸ்தான் அளித்துவரும் ஒத்துழைப்புக்காக நன்றி தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்ட  டிரம்ப், பாகிஸ்தான் மற்றும் அந்நாட்டு தலைவர்களுடனான உண்மையான உறவு தற்போதுதான் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதற்கிடையே, தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள சமவெளி பகுதியில் இந்த தம்பதியரை தீவிரவாதிகள் மறைத்து வைத்திருந்த இடத்தை கடந்த மாதம் ஆளில்லா விமானங்களின் மூலம் அமெரிக்க உளவுப்படையான சி.ஐ.ஏ. மோப்பம் பிடித்துள்ளது. முன்னர் ஒசாமா பின்லேடன் வீட்டில் புகுந்து தாக்கியதுபோல் இப்போதும் தாக்குதல் நடத்தி அந்த தம்பதியரை மீட்க அமெரிக்கா திட்டமிட்டது.

    சீல் அதிரடிப் படையினரை வைத்து இந்த தாக்குதலை நடத்தும் திட்டம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு தெரிவிக்கப்பட்டதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழ் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கான ஒத்திகையும் பார்க்கப்பட்டதாக அந்த செய்தி தெரிவிக்கின்றது.

    அமெரிக்க-கனடா தம்பதியர் அங்கிருந்து வேறு இடத்துக்கு அழைத்து செல்லப்படுவதையும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் கண்காணித்து விட்டது. கடந்த 11-ம் தேதி அவர்கள் கோஹட் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டபோது, இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கு தகவல் அளிக்கலாம். அந்நாடு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாமே நேரில் களத்தில் குதிக்கலாம் என அமெரிக்கா முடிவு செய்தது.

    இதையடுத்தும் அவசரமாக பாகிஸ்தான் அரசை தொடர்புகொண்ட பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் டேவிட் ஹேலே, உடனடியாக தாக்குதல் நடத்தி அந்த தம்பதியரை தீவிரவாதிகளிடம் விடுவிக்க ஏற்பாடு செய்யுங்கள். அல்லது, அமெரிக்கா செய்து முடித்துவிடும் என எச்சரித்துள்ளார்.

    இதையடுத்து, பாகிஸ்தான் அதிரடிப் படையினர் அந்த தம்பதியரும் குழந்தைகளும் கடத்தப்பட்ட காரை வழிமறித்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை மீட்டனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. 
    Next Story
    ×