search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தானில் போலீசாரை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் - பலி எண்ணிக்கை 71 ஆக அதிகரிப்பு
    X

    ஆப்கானிஸ்தானில் போலீசாரை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் - பலி எண்ணிக்கை 71 ஆக அதிகரிப்பு

    ஆப்கானிஸ்தானில் போலீசாரை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் நடத்தியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் போலீசாரை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் நடத்தியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.

    ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படைகள் மற்றும் போலீசாரை குறிவைத்து தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கமும் உள்ளது. இவர்களை ஒடுக்குவதற்கு அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்தியா மாகாண தலைநகரான கார்டிசில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகம் உள்பட இரண்டு இடங்களில் தலிபான் தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர்.

    போலீஸ் தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள போலீஸ் பயிற்சி கட்டிடத்தை குறிவைத்து தீவிரவாதிகள் இன்று காலை தாக்குதல் நடத்தினர். முதலில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன், காரில் வெடிகுண்டுகளை ஏற்றிச் சென்று பயிற்சி மையம் காம்பவுண்டு சுவர் அருகே வெடிக்கச் செய்து உள்ளே நுழைவதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளான்.

    பின்னர் அந்த வழியாக தீவிரவாதிகள் பயிற்சி மையத்தினுள் புகுந்து துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரமாக இருதரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.  

    இந்த தாக்குதலில் பிற்பகல் நிலவரப்படி 45 பேர் பலியானதாகவும், 200-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், தலிபான் தீவிரவாதிகள் நடத்திய இரண்டு தாக்குதல்களில் பலியானோர் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 170-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×