search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தானில் போலீஸ் பயிற்சி மையம் மீது தற்கொலைப்படை தாக்குதல்: 15 பேர் பலி
    X

    ஆப்கானிஸ்தானில் போலீஸ் பயிற்சி மையம் மீது தற்கொலைப்படை தாக்குதல்: 15 பேர் பலி

    ஆப்கானிஸ்தானில் போலீஸ் பயிற்சி மையம் மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படைகள் மற்றும் போலீசாரை குறிவைத்து தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கமும் உள்ளது. இவர்களை ஒடுக்குவதற்கு அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்திவருகிறது. குன்பூர் மாகாணத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 14 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், பாக்தியா மாகாண தலைநகரான கார்டிசில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தை குறிவைத்து தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். முதலில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன், காரில் வெடிகுண்டுகளை ஏற்றிச் சென்று பயிற்சி மையம் காம்பவுண்டு சுவர் அருகே வெடிக்கச் செய்து, உள்ளே நுழைவதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளான்.

    பின்னர் அந்த வழியாக தீவிரவாதிகள் பயிற்சி மையத்தினுள் புகுந்து தாக்கத் தொடங்கினர். போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரமாக இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

    இந்த தாக்குதல் மற்றும் துப்பாக்கி சண்டையில் 15 பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்த பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

    பாக்தியா போலீஸ் தலைமையகம் அருகே நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
    Next Story
    ×