search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிலிப்பைன்ஸ் கடலில் சரக்கு கப்பல் மூழ்கியது: தமிழக மாலுமிகள் உள்பட 10 பேர் கதி என்ன?
    X

    பிலிப்பைன்ஸ் கடலில் சரக்கு கப்பல் மூழ்கியது: தமிழக மாலுமிகள் உள்பட 10 பேர் கதி என்ன?

    பிலிப்பைன்ஸ் கடலில் துபாய் சரக்கு கப்பல் மூழ்கியது. இதில் பயணம் செய்த தமிழக மாலுமிகள் உள்பட 10 பேர் கதி என்ன என்று தெரியவில்லை.
    துபாய்:

    பிலிப்பைன்ஸ் கடலில் துபாய் சரக்கு கப்பல் மூழ்கியது. இதில் பயணம் செய்த தமிழக மாலுமிகள் உள்பட 10 பேர் கதி என்ன என்று தெரியவில்லை.

    துபாய் நாட்டின் ஸ்டெல்லார் ஓசன் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ‘எமரால்டு ஸ்டார்’ என்ற சரக்கு கப்பல் ஹாங்காங் நகரில் இருந்து ஜப்பானுக்கு புறப்பட்டு சென்றது.

    இந்த கப்பலில் 26 மாலுமிகள் பயணம் செய்தனர். கடந்த வெள்ளிக்கிழமை பிலிப்பைன்ஸ் நாட்டின் கடல் பகுதி வழியாக சென்றபோது திடீரென்று கடும் புயல் வீசியதில் சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது.

    இந்த கப்பலில் பயணம் செய்த 26 மாலுமிகள் பாதுகாப்பு மிதப்பு உடை அணிந்து கடலில் குதித்தனர். அந்த வழியாக 2 கப்பல்களில் வந்தவர்கள், கடலில் தத்தளித்தவர்களில் 16 பேரை மீட்டனர். மேலும் 10 மாலுமிகளின் கதி என்னவென்று தெரியவில்லை.

    மாயமான மாலுமிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் சிலரும் அடங்குவர். அவர்களில் ஒருவர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயலைச் சேர்ந்த பெவின் தாமஸ் (வயது 22) ஆவார். இவருடைய பெற்றோர் பெவின் பெர்னாந்து-ரெஜீஸ். இவர்களுக்கு பெவின் தாமஸ் தவிர 3 மகள்கள் உள்ளனர். பெவின் தாமஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் கப்பலில் மாலுமி பணிக்கு சேர்ந்தார்.

    இன்னொருவர் பெயர் கிரிதர்குமார் (வயது 25) கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சோலபாளையத்தை சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் சுப்பிரமணியம். தாயார் திலகவதி. இவர்களுக்கு கிரிதர்குமார் தவிர கார்த்திக் பிரபு என்ற மகனும் உள்ளார்.

    கிரிதர்குமார் சென்னையில் உள்ள அட்மிரல் மரைன் சர்வீஸ் பிரைவேட் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் 3-ம் நிலை அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். கிரிதர்குமாருக்கு ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. அவருக்கு ஸ்ரீஉமா என்ற மனைவி உள்ளார். திருமணம் ஆகி 4 மாதங்கள் ஆனவுடன் கப்பலுக்கு வேலைக்கு சென்றார்.

    ஒரு மாதத்திற்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இந்த தகவல் கிரிதர்குமாருக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர், தான் சீனாவுக்கு சரக்கு கப்பலில் சென்றுவிட்டு விரைவில் வீடு திரும்புவதாக தெரிவித்தார். ஆனால் அவர் சென்ற கப்பல் கடலில் மூழ்கிவிட்டது.

    இது குறித்து டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி ரவீஷ் குமார் கூறியதாவது:-

    மூழ்கிய கப்பலின் கேப்டன் ராஜேஷ் நாயர் ராமச்சந்திரன், தமிழகத்தைச் சேர்ந்த கிரிதர்குமார், பெவின் தாமஸ், பொறியாளர் சுப்பையா சுரேஷ் குமார், பெருமாள்சாமி குருமூர்த்தி, மலர்வாணன் சிலம்பரசன், முருகன் கவுதம் உள்ளிட்ட 10 பேரை காணவில்லை.

    காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்திய கடற்படையை சேர்ந்த வீரர்கள் இந்த கடல் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இந்த கப்பல் 33 ஆயிரத்து 205 டன் எடையுள்ள பொருட்களை ஏற்றிச் சென்றுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×