search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு - நூற்றுக்கணக்கானோரை காணவில்லை
    X

    அமெரிக்காவில் காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு - நூற்றுக்கணக்கானோரை காணவில்லை

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் படுவேகமாக பரவிவரும் காட்டுத்தீக்கு பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    சாக்ரமெண்டோ:

    அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு காட்டுத்தீ தொடர்ந்து ஒரு வாரமாக கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

    இருப்பினும் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால், காட்டுத்தீ மேலும் பல நகரங்களுக்கு பரவி வருகிறது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட்டனர்.



    இந்த தீயினால் சாண்டா ரோசா நகர் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர்.

    கலிபோர்னியா மாகாண கவர்னர் ஜெர்ரி பிரவுன், சாண்டா ரோசா நகரை பார்வையிட்டு விட்டு நிருபர்களிடம் பேசும்போது, “நம்ப முடியாத அளவுக்கு இந்த காட்டுத்தீ பேரழிவை ஏற்படுத்தி உள்ளது” என்று குறிப்பிட்டார். இந்த காட்டுத்தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 40 ஆக உயர்ந்தது. நூற்றுக்கணக்கானோரை காணவில்லை.

    இந்த காட்டுத்தீயின் சாம்பலும், கரும்புகையும் சான்பிரான்சிஸ்கோ நகரில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நாபா பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்திருந்த 13 ஒயின் தயாரிப்பு ஆலைகள் முற்றிலும் அழிந்து போய்விட்டன. 
    Next Story
    ×