search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத்தில் சரிகிறதா பா.ஜ.க செல்வாக்கு? - அதிருப்தியை சரிகட்ட மோடி தீவிரம்
    X

    குஜராத்தில் சரிகிறதா பா.ஜ.க செல்வாக்கு? - அதிருப்தியை சரிகட்ட மோடி தீவிரம்

    சுமார் 18 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. மீது தற்போது அங்குள்ள மக்கள் அதிருப்தியில் உள்ளதால் வாக்களர்களை சரிகட்ட பிரதமர் மோடி தீவிர திட்டங்களை தீட்டி வருகிறார்.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் உருவாக்கப்பட்டு 1960-ல் முதல் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து 1974 வரை காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்தது. 1975-ல் ஜனதா கட்சி வெற்றி பெற்றது. 1977-ல் ஜனதா கட்சி- பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைந்தது. இதன் பிறகு அங்கு பாரதிய ஜனதா செல்வாக்கான கட்சியாக திகழ்ந்தது.

    1990 தேர்தலில் பா.ஜ.க தனியாக ஆட்சியை பிடித்தது. இடையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. அதை தொடர்ந்து 1998-ல் பா.ஜ.க அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

    1998-க்கு பிறகு தொடர்ந்து 20 ஆண்டுகளாக அங்கு பா.ஜ.க ஆட்சியில் இருந்து வருகிறது. 1998-ல் கேசுபாய் பட்டேல் பதவியில் இருந்த நிலையில் 2001-ல் அவர் மாற்றப்பட்டு நரேந்திர மோடி முதல் முறையாக முதல்-மந்திரி ஆனார். இதன் பின்னர் 2002-ல் தேர்தல் நடந்தது. அதில், மோடியின் செல்வாக்கால் பா.ஜ.க மாபெரும் வெற்றியை பெற்றது.

    அடுத்து 2007, 2012 ஆகிய தேர்தல்களிலும் மோடியின் செல்வாக்கு காரணமாக பா.ஜ.க.வுக்கு வெற்றி கிடைத்து வந்தது. இங்கு எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாமல் தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வந்தது.

    2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டார். அதில் வெற்றி பெற்று அவர் பிரதமர் ஆனார். இதைத்தொடர்ந்து ஆனந்திபென் பட்டேல் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவரது ஆட்சியில் கெட்ட பெயர் ஏற்பட்டதை அடுத்து அவர் மாற்றப்பட்டு கடந்த ஆண்டு விஜய்ரூபானி முதல்-மந்திரி ஆனார். ஆனாலும், ஆட்சிக்கு நல்ல பெயர் ஏற்படவில்லை.

    இந்த நிலையில் குஜராத் சட்டசபை தேர்தல் பதவி காலம் முடிகிறது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. ஆனால், கடந்த காலங்களை போல பா.ஜ.க.வுக்கு இப்போது செல்வாக்கு இல்லை. நரேந்திர மோடி முதல்-மந்திரியாக இருந்த வரை பா.ஜ.க செல்வாக்குடன் இருந்தது. அவர் வெளியேறியதும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது.

    இதற்கு முன்பு பா.ஜ.க வெற்றிக்கு குஜராத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட இனமாக உள்ள பட்டேல் சமூகத்தினர், தலித் சமூகத்தினர் உதவியாக இருந்தனர். இடஒதுக்கீடு பிரச்சினையில் பட்டேல் சமூகத்தினரும், பசுவதை தடுப்பு பிரச்சினையில் தலித் சமூகத்தினரும் தற்போது பா.ஜ.க.வுக்கு எதிராக மாறி உள்ளனர்.

    ஏற்கனவே முஸ்லிம் ஓட்டுகள் பா.ஜ.க.வுக்கு கிடைப்பதில்லை. இப்போது மேலும் 2 சமூகத்தினரும் பா.ஜ.க.வுக்கு எதிராக திரும்பி இருக்கிறார்கள். இது மட்டும் அல்ல, மேலும் பல்வேறு சமூகத்தினரும் பா.ஜ.க ஆட்சி மீது அதிருப்தியாகவே இருக்கிறார்கள்.

    இதனால் மோடி முதல்-மந்திரியாக இருந்த 15 ஆண்டுகளும் செல்வாக்குடன் இருந்த பா.ஜ.க இப்போது பெரும் பின்னடைவில் உள்ளது. எனவே, சட்டசபை தேர்தலில் அவ்வளவு எளிதாக பா.ஜ.க வெற்றி பெற முடியாது என்றே கூறப்படுகிறது.

    குஜராத்தில் பா.ஜ.க செல்வாக்கு சரிந்து இருப்பதை அறிந்ததும் காங்கிரஸ் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று முயற்சித்து வருகிறது. இதற்காக கட்சி துணை தலைவர் ராகுல்காந்தி பல கட்டங்களாக ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். அவர் பிரசாரம் செய்த இடங்களில் எல்லாம் அதிக கூட்டம் காணப்பட்டது.

    ஆனாலும், பா.ஜ.க மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு பிரதமர் மோடி, கட்சி தலைவர் அமித்ஷா ஆகியோர் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார்கள். மொத்தம் உள்ள 182 இடங்களில் 150 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக அவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    குஜராத்தில் உள்ள பெண்கள் ஓட்டுகளை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரராஜே, மத்திய மந்திரி சுஷ்மாசுவராஜ் ஆகியோரை களம் இறக்கி உள்ளனர். அவர்கள் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    பா.ஜ.க.வுக்கு ஏற்கனவே இந்து மதரீதியிலான ஓட்டுகள்தான் பெரும் பலமாக இருந்தது. அந்த ஓட்டுகளை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், உமாபாரதி ஆகியோரையும் களம் இறக்கி இருக்கிறார்கள்.

    நாளை பா.ஜ.க.வின் பிரமாண்ட பிரசார கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அப்போது, பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளையும் எதிர்காலத்தில் குஜராத்தில் செய்ய உள்ள திட்டங்களையும் அறிவிக்க உள்ளார்.

    மோடி நாளை வெளியிடும் அறிவிப்புகள் குஜராத் மக்களுக்கு தீபாவளி பரிசாக இருக்கும். இது, பாரதீய ஜனதாவுக்கு பலத்தை கொடுக்கும் வகையில் இருக்கும் என்று அந்த கட்சியினர் கூறுகின்றனர். ஆனாலும், பழைய செல்வாக்குடன் பாரதீய ஜனதா வெற்றி பெற முடியுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    3 நாட்களுக்கு இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதனோடு சேர்த்து குஜராத் தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    மோடி நாளை கூட்டத்தில் அறிவிப்புகளை வெளியிட இருப்பதால் அதற்கு வசதியாகத்தான் தேர்தல் கமி‌ஷன் குஜராத் தேர்தல் தேதியை முன்கூட்டியே அறிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×