search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மியான்மரில் தொடரும் அவலம்: ரோஹிங்யா முஸ்லிம்களுக்கான உதவிகளை தடுத்து நிறுத்தும் புத்த மதத்தினர்
    X

    மியான்மரில் தொடரும் அவலம்: ரோஹிங்யா முஸ்லிம்களுக்கான உதவிகளை தடுத்து நிறுத்தும் புத்த மதத்தினர்

    ரோஹிங்யா முஸ்லிம்களுக்கான தேவையான உதவிகளை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் புத்த மதத்தினர் ஒன்று திரண்டு நிவாரண பொருட்கள் வழங்கக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நேப்பித்தா:

    மியான்மரில் ராக்கின் மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் கடந்த மாதம் 25-ந் தேதி போலீஸ் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அங்குள்ள அந்த இனத்தவர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ரோஹிங்யா முஸ்லிம் மக்களின் கிராமங்களுக்கு தீ வைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 4 லட்சத்துக்கும்
    அதிகமானோர் அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

    இந்த விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் காத்து வந்த மியான்மர் நாட்டின் நடைமுறைத்தலைவர் சூ கி தன் மீதான சர்வதேச விமர்சனங்களுக்கு பதில் அளிக்கிற வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை டெலிவிஷனில் உரையாற்றினார்.

    அப்போது அவர் ராக்கின் மாகாணத்தில் இயல்பு நிலை திரும்புவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அங்கு உள்ள ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கு மனித நேய உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், தெரிவித்தார்.

    அதன்படி ராக்கின் மாகாணத்தில் உள்ள ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    அந்த வகையில் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்தவர்கள் ஒரு படகில் நிவாரண பொருட்களுடன் ராக்கின் மாகாணத்தின் தலைநகர் சிட்வே வந்தனர். அப்போது அங்கு புத்த மதத்தினர் நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு, ரோஹிங்யா
    முஸ்லிம்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கக்கூடாது என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைகளில் இரும்பு கம்பி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்ததால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் நிவாரண பொருட்கள் கொண்டு வந்த படகின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் மோதல் வெடித்தது.

    இதையடுத்து, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். மோதலில் ஈடுபட்ட சிலரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×