search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ். தீவிரவாதிகள் தலைநகரம் அமெரிக்க ஆதரவு படையிடம் வீழ்கிறது: 90 சதவீத இடங்களை மீட்டனர்
    X

    ஐ.எஸ். தீவிரவாதிகள் தலைநகரம் அமெரிக்க ஆதரவு படையிடம் வீழ்கிறது: 90 சதவீத இடங்களை மீட்டனர்

    ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைநகரமான ராக்காவின் 90 சதவீத இடத்தை அமெரிக்க ஆதரவு படையினர் மீட்டுள்ள நிலையில், ராக்கா நகரம் முழுவதும் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ராக்கா:

    சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவில் உள்ள ராக்கா நகரை தலைநகரமாக கொண்டு இஸ்லாமிய தேசம் என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்தார்கள்.

    2014-ம் ஆண்டு ராக்கா நகரை அவர்கள் கைப்பற்றி அதை தொடர்ந்து அதைச்சுற்றி உள்ள பல பகுதிகளையும் கைப்பற்றினர். பின்னர் ஈராக்குக்குள் நுழைந்து அதன் முக்கிய நகரமான மொசூல் உள்ளிட்ட பல பகுதிகளையும் கைப்பற்றி இருந்தனர்.

    இந்த பகுதிகளை மீட்பதற்கு இரு நாட்டு படைகளும் தாக்குதல் நடத்தி வந்தன. இதில் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்த பெரும் பகுதியை அந்த நாட்டு ராணுவம் மீட்டு விட்டது.

    கடந்த ஜூலை மாதம் மொசூல் நகரை அவர்கள் மீட்டார்கள். தற்போது யூப்ரடிஸ் நதியோரம் உள்ள சில பகுதிகள் மட்டும் தான் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் உள்ளது.

    அவற்றையும் மீட்பதற்கு ஈராக் படை தீவிரமாக போரிட்டு வருகிறது. வெகு விரைவில் ஈராக்கில் இருந்து ஒட்டுமொத்த ஐ.எஸ். தீவிரவாதிகளையும் விரட்டி விடுவோம் என்று ஈராக் கூறி உள்ளது.

    இதே போல் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்த பல பகுதிகளும் மீட்கப்பட்டன. அங்கு சிரியா ராணுவம் ரஷியா ஆதரவுடன் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தனியாக போரிட்டு வருகிறது.

    அதே நேரத்தில் சிரியா புரட்சிப் படையினர் மற்றும் அரபு படையினர், குர்தீஸ் படையினர் கொண்ட தனிப்படை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த படையை அமெரிக்கா வழி நடத்தி உதவிகளை செய்து வருகிறது. இரு படைகளும் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்த பல பகுதிகளை மீட்டு விட்டன.

    ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைநகரம் ராக்காவை ஒட்டி உள்ள பல பகுதிகளை அமெரிக்கா ஆதரவு படை ஏற்கனவே மீட்டு இருந்தது. அதை தொடர்ந்து ராக்காவை மீட்பதற்காக கடந்த ஜூன் மாதம் இந்த படைகள் சுற்றி வளைத்தன.

    ராக்காவின் புறநகர் பகுதி ஒவ்வொன்றாக அமெரிக்க ஆதரவு படையிடம் வீழ்ந்தது. அதை தொடர்ந்து ராக்கா நகருக்குள் படை புகுந்தது. கடும் சண்டைக்கு பிறகு பெரும்பாலான இடங்களை இந்த படை மீட்டு விட்டது.

    அமெரிக்கா ராணுவ விமானங்கள் குண்டு வீச இந்த படை வீரர்கள் தரைவழி தாக்குதலை நடத்தினார்கள். இதில் பெரும் வெற்றி கிடைத்து தற்போது 90 சதவீத இடத்தை மீட்டுள்ளனர்.

    இன்னும் 10 சதவீத இடம் மட்டுமே ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் உள்ளது. யூப்ரடிஸ் நதியின் வடக்கு பகுதியில் அவர்கள் பதுங்கி இருந்தபடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சுமார் 1000 தீவிரவாதிகள் மட்டுமே தற்போது தாக்குதல் நடத்துகிறார்கள். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    அவர்கள் அந்த பகுதி முழுவதும் கண்ணி வெடிகளை புதைத்து வைத்துள்ளனர். மேலும் கார் குண்டு, ஏவுகணை குண்டு மூலம் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஆனாலும், விரைவில் நகரம் முற்றிலும் மீட்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே தங்களின் முக்கிய நகரமான ஈராக்கின் மொசூல் நகரை இழந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் இப்போது தலைநகரம் ராக்காவையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து சிரியாவில் உள்ள டெயிர் இசார் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் குவிந்துள்ளனர். இப்போது அந்த நகரையும் மீட்பதற்கு சிரியா ராணுவம் தாக்குதலை தொடங்கி உள்ளது.

    சிரியாவில் தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆங்காங்கே துண்டு துண்டாக சிதறி கிடக்கின்றனர். அவர்களுக்குள் தொடர்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் சில பகுதிகளை மட்டும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அந்த இடங்களையும் மீட்பதற்கு போர் நடந்து வருகிறது.

    விரைவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ள அனைத்து இடங்களும் மீட்கப்படும் என்று சிரியா ராணுவம் கூறி உள்ளது.
    Next Story
    ×