search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூகம்பத்தில் சிக்கி கிடந்த ஒருவரை மீட்கும் காட்சி.
    X
    பூகம்பத்தில் சிக்கி கிடந்த ஒருவரை மீட்கும் காட்சி.

    மெக்சிகோ பூகம்பம்: இடிபாடுகளுக்குள் புதைந்து கிடந்த 68 பேர் உயிருடன் மீட்பு

    மெக்சிகோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்குள் புதைந்து கிடந்த 68 பேர் உயிருடன் மீட்கப்பட்டு இருப்பதாக மீட்பு குழு அதிகாரி ஒருவர் கூறினார்.
    மெக்சிகோ சிட்டி:

    வடஅமெரிக்கா கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டில் நேற்று முன் தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 7.1 புள்ளிகளாக பதிவாகி இருந்த நிலநடுக்கத்தால் நாட்டின் பெரும் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தலைநகரம் மெக்சிகோ சிட்டி மற்றும் மெக்சிகோ சிட்டி மாகாணம், பிபூபலா, கவுர்வேரோ, டாக்ஸ்கா ஆகிய மாகாணங்களில் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் 300-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

    இதில் சிக்கி இதுவரை 260 பேர் இறந்துள்ளனர். இன்னும் பலர் கட்டிடங்களுக்குள் சிக்கி இருக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    பூகம்பம் நடந்து 3 நாட்கள் ஆகி விட்ட நிலையிலும் இன்னும் மீட்பு பணிகள் முடியவில்லை. பல்லாயிரக்கணக்கான மீட்பு படையினர் இந்த பணிகளை செய்து வருகிறார்கள். பல இடங்களில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டுள்ளனர்.

    இவ்வாறு 68 பேர் மீட்கப்பட்டு இருப்பதாக மீட்பு குழு அதிகாரி ஒருவர் கூறினார்.

    மெக்சிகோ சிட்டியில் உள்ள என்ட்ரிக் ராப்சன் என்ற தனியார் பள்ளி இடிந்து விழுந்ததில் 21 மாணவ- மாணவிகள் உள்பட 28 பேர் பலியானார்கள்.

    அந்த பள்ளிக்கூடத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்த 3 மாணவிகளை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். இன்னும் பலரை காணவில்லை. அவர்களும் அதற்குள் சிக்கி கிடக்கலாம் என கருதி தேடி வருகின்றனர்.

    வேலைவாய்ப்பு ஏஜென்சி கட்டிடம் ஒன்று இடிந்ததில் நூற்றுக்கணக்கானோர் சிக்கி கொண்டனர். அங்கு உயிருடன் இருந்த 30 பேரை இடிபாடுகளுக்குள் இருந்து மீட்டு இருக்கிறார்கள்.

    அட்சாலா என்ற இடத்தில் ஒரு சிறுமிக்கு அங்குள்ள தேவாலயத்தில் ஞானஸ்தான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அந்த சிறுமியின் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

    மெக்சிகோவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் இடிந்த கட்டிடம்

    அப்போது பூகம்பம் ஏற்பட்டு ஆலயம் இடிந்து விழுந்தது. அதில் குழந்தையின் தந்தை, பாதிரியார் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தனர். அந்த குழந்தை மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உயிர் இழந்தனர்.

    தலைநகரம் மெக்சிகோ சிட்டியில் தான் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. அங்கு மட்டுமே 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்துள்ளனர். மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.

    எனவே, வீடுகளில் தங்காமல் தெருக்களிலேயே மக்கள் தங்கி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு லட்சக்கணக்கானோர் தங்கி உள்ளனர்.
    Next Story
    ×