search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகொரியாவுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை வழங்கிய பாக். மீது நடவடிக்கை தேவை: சுஷ்மா
    X

    வடகொரியாவுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை வழங்கிய பாக். மீது நடவடிக்கை தேவை: சுஷ்மா

    வடகொரியாவுக்கு அணுசக்தி தொழில் நுட்பத்தை வழங்கிய பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமெரிக்க, ஜப்பான் வெளியுறவு மந்திரிகளிடம் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.
    நியூயார்க்:

    வடகொரியாவுக்கு அணுசக்தி தொழில் நுட்பத்தை வழங்கிய பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமெரிக்க, ஜப்பான் வெளியுறவு மந்திரிகளிடம் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.

    ஐ.நா.சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார். நேற்று, அவர் மாநாட்டின் இடையே அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன், ஜப்பான் வெளியுறவு மந்திரி டாரோ கோனு ஆகியோரை சந்தித்தார். இந்த 3 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளும் 2015-ம் ஆண்டுக்கு பிறகு சந்தித்து பேசியது, இதுவே முதல் முறை ஆகும்.

    3 நாடுகள் தரப்பிலும் வடகொரியாவின் அணு ஆயுத சோதனை, கடல் சார் பாதுகாப்பு உள்ளிட்ட ஆசிய கண்டத்தின் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, சுஷ்மா ஸ்வராஜ் வடகொரியா அண்மைக் காலத்தில் நடத்திய அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனை குறித்து மிகுந்த கவலை தெரிவித்தார்.

    இதுபற்றி மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் நிருபர்களிடம் கூறுகையில், “வடகொரியாவின் சமீபகால நடவடிக்கைகள் மற்றும் அணு ஆயுத பெருக்கத்தில் அந்த நாடு இன்னொரு நாட்டுடன் கொண்டிருந்த தொடர்புகள் குறித்தும் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று இந்த சந்திப்பில் சுஷ்மா ஸ்வராஜ் கேட்டுக் கொண்டார். மேலும் அதற்கு காரணமான நாட்டின்(பாகிஸ்தான்) மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இந்தியா தரப்பில் வற்புறுத்தப்பட்டது” என்று குறிப்பிட்டார்.

    சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தானின் பெயரை நேரடியாக குறிப்பிட்டு குற்றம் சாட்டவில்லை என்றாலும் கூட பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஏ.கியூ.கான் மூலம் வடகொரியா அணுவை செறிவூட்டும் தொழில்நுட்பத்தை பெற்றதாக வெளியாகி உள்ள தகவலை சுட்டிக் காட்டி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இதுகுறித்து ரவீஷ் குமார் கூறும்போது, “வடகொரியாவுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை வழங்கிய நாடு எது என்பதை குறிப்பிட்டு கூற இயலாது. அதுபற்றி கூறப்படும் மறைமுகமான வார்த்தைகளே போதுமானது” என்றார்.
    Next Story
    ×