search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோஹிங்கியா கிராமங்களில் அமைதி நிலவுகிறது: ஆங் சான் சூகி
    X

    ரோஹிங்கியா கிராமங்களில் அமைதி நிலவுகிறது: ஆங் சான் சூகி

    மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வாழும் பெரும்பான்மையான கிராமங்களில் அமைதி நிலவுவதாக அந்நாட்டின் தலைமை ஆலோசகரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தெரிவித்துள்ளார்.
    நாய்பிடா:

    சுமார் 6 கோடி மக்கள் வாழும் மியான்மர் நாட்டில் ரக்கானே மாநிலம் உள்பட பிறபகுதிகளில் வாழ்ந்துவரும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் குடியுரிமை கடந்த 1982-ம் ஆண்டில் பறிக்கப்பட்டது.

    புத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் இந்நாட்டில் வெளிப்படையாகவும், சுதந்திரமான முறையிலும் தங்களது மத வழிபாடுகளை செய்ய ரோஹிங்கியா மக்களுக்கு அனுமதி இல்லை. நாட்டின் பிறபகுதிகளுக்கு தங்குதடையின்றி செல்லவும் அனுமதி கிடையாது. ஆசிரியர்களாகவோ, டாக்டர்களாகவோ அவர்கள் பணியாற்ற முடியாது. இவ்வகையில், அவர்களுக்கான இதர உரிமைகளும் மறுக்கப்பட்டன.

    ரோஹிங்கியா மக்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள், போதிய உணவு மற்றும் கல்வி கிடைக்காமல் இவர்கள் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினராகவே வாழ்ந்து வருகின்றனர். மியான்மரில் வாழும் பிறமக்களுக்கு நிகராக தங்களுக்கு சம உரிமை வேண்டும். ரோஹிங்கியா மக்களுக்கு என தனி மாநிலம் அமைத்து தர வேண்டும் என இவர்கள் பல ஆண்டு காலமாக பல்வேறு வகையிலான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவர்களின் கோரிக்கைகளுக்கு மியான்மர் அரசு இசைவு தெரிவிக்காத நிலையில், இந்த மக்களில் ஒரு பிரிவினர் அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

    மியான்மர் நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்றுவந்த ’ஜன்டா’ தலைமையிலான ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அரசின் தலைமை ஆலோசகராக ஆங் சான் சூகி இருந்து வருகிறார். அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் இவரது அறிவிறுத்தலின்பேரில் தான் இயங்கி வருகின்றன.

    மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை இனத்தவர்களான ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், மியான்மரில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகளின்மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான ராணுவ வேட்டை தீவிரமாகி உள்ளது.

    இந்த மாத ஆரம்பத்தில் இருந்து ரோஹிங்கியா மக்கள் மீது ராணுவம் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியது. குழந்தைகள், பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. அவர்களின் உடைமைகள் சூறையாட்டப்பட்டன. பல கிராமங்கள் அலங்கோலமாக்கப்பட்டு, அடையாளம் தெரியாமல் சிதைக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட இன அழிப்பு என்று இஸ்லாமிய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து நான்கு லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா மக்கள்
    அங்கிருந்து வெளியேறி அண்டைநாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

    மியான்மரில் ஜன்டா எனப்படும் ராணுவ ஆட்சிக்கு எதிராக போர்க்குரல் எழுப்பி, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக போராடி வீட்டுச்சிறையில் அவதிப்பட்டு, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தனது ஆலோசனையின் பேரில் நடைபெற்றுவரும் மியான்மர் அரசை ஆங் சான் சூகி தட்டிக் கேட்காதது ஏன்? என உலகின் பல நாடுகளின் தலைவர்களும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    இந்நிலையில், மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கடந்த வாரம் கண்டனம் தெரிவித்தார். ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு மியான்மர் அரசு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    மியான்மர் நாட்டின் ரக்கினே மாநிலத்தில் பாதுகாப்பு, மனிதநேயம், மனித உரிமைகள் சீரழிந்து வருவதாக குறிப்பிட்டுள்ள அன்டோனியோ, வறுமையின் பிடியில் சிக்கியுள்ள ரகினே மாநிலத்தில் வாழ்பவர்கள் நீண்டகாலமாகவே அநீதியான முறையில் நடத்தப்படுவதை அறிந்து வேதனை அடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    பல லட்சம் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மியான்மரை விட்டு வெளியேறுவதற்கு வழிவகுத்துள்ள ராணுவ தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு மியான்மரின் நடைமுறைத்தலைவர் ஆங் சான் சூகியிக்கு இதுவே கடைசி வாய்ப்பு எனவும் அவர் எச்சரித்தார்.

    தற்போது அங்கிருக்கும் நிலைமையை ஆங் சான் சூகி மாற்றாவிட்டால், அங்கு இனி நடக்கப்போகும் சோகம் மிகவும் பயங்கரமானதாகி விடும். எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினை மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை என்றும் அன்டோனியோ குட்டெரெஸ் குறிப்பிட்டார்.

    இந்நிலையில், மியான்மர் நாட்டு அரசின் தலைமை ஆலோசகராக இருக்கும் ஆங் சான் சூகி ரோஹிங்கியா மக்கள் விவகாரம் தொடர்பாக இன்று அந்நாட்டு பாரளுமன்றத்தில் இன்று முதன்முறையாக பேசினார்.

    மாநிலத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்த அவர் ராணுவத்தின் அத்துமீறல் தொடர்பாக கண்டனம் ஏதும் தெரிவிக்கவில்லை.

    எனினும், இங்கிருந்து பல முஸ்லிம்கள் வெளியேறுவது குறித்த காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இங்கிருந்து வெளியேறியவர்களையும் வங்காளதேசத்தில் அகதிகளாக தங்கியுள்ளவர்களையும் உரிய சரிபார்ப்புக்கு பின்னர் தங்கள் நாட்டில் அனுமதிக்க மியான்மர் அரசு தயாராக இருப்பதாகவும் ஆங் சான் சூகி தெரிவித்துள்ளார்.

    மியான்மரில் ரோஹிங்கியா மக்கள் வாழும் 50 சதவீதம் கிராமங்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை. பெரும்பாலான முஸ்லிம்கள் எவ்வித பாதிப்பும் இன்றி வாழ்ந்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். அங்கு மக்கள் இயல்பாக வாழ்ந்து வருவதை யார் வேண்டுமானாலும் சென்று பார்வையிடலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

    கடந்த ஐந்தாம் தேதியில் இருந்து அப்பகுதிகளில் ராணுவ நடவடிக்கை ஏதும் நடைபெறவில்லை. பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அமைதிநிலவ தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
    Next Story
    ×